திப்பு சுல்தானும் சமூக நீதியும்

திப்பு சுல்தானின் சமூக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி முறை குறித்த வரலாறு தொகுப்பு

6 Min Read

மைசூரின் ஆட்சியாளரான திப்பு சுல்தான், பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் புரட்சிகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டார். இது ஒரு சமத்துவ சமுதாயத்தை நோக்கி சிந்திப்பதற்கும் அதற்காக உழைப்பதற்கும் அவரைத் தூண்டியது. வெறும் ஒரு மன்னராக மட்டும் இல்லாமல், ஒரு சமூக சீர்திருத்தவாதியின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்ட அவர், நிலப்பிரபுத்துவம், யாசகம் கேட்டல், விபச்சாரம், ஆள் கடத்தல் மற்றும் நர பலி போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். நீதி அடிப்படையிலான ஒரு புதிய அமைப்பின் மூலம், அனைவருக்குமான வளர்ச்சியை அடைந்தார். மேலும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய, அனைத்து மதத்தினராலும் போற்றப்படும் மதச்சார்பின்மையின் அடையாளமாக அவர் விளங்குகிறார்.

முன்னுரை

திப்பு சுல்தான் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு சமூக சீர்திருத்தங்களை இயற்றவும், நீதியை உறுதிப்படுத்தவும் தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தினார். மலபார் சமூகத்தின் இடைக்கால மற்றும் பிளவுபடுத்தும் தன்மைகளைக் கவனித்த அவர், கட்டாய உழைப்பு, ஆள்  கடத்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை தடை செய்தார். நாட்டை மற்றும் சமுதாயத்தை மாற்றுவதே காலனித்துவத்தை எதிர்ப்பதற்கான மிகச் சிறந்த வழி என்பதை திப்பு உணர்ந்திருந்தார். மேலும் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க அவர் பாடுபட்டார்.

சமூக சீர்திருத்தம்

தமது கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்யாமலும், அந்நிய சக்திகளுக்குப் பணியாமலும், திப்பு பரவலான சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். ஏழை விவசாயிகளை ஒடுக்குமுறை அதிகாரிகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் வருவாய் விதிமுறைகளை அவர் இயற்றினார். தரிசு நிலங்களைச் சாகுபடி செய்ய ஊக்குவித்தார், மேலும் பழைய மற்றும் புதிய விவசாயிகளிடையே நிலத்தைச் சமமாகப் பகிர்ந்தளித்தார். உணவு தானியங்கள் மற்றும் வணிகப் பயிர்கள் ஆகிய இரண்டின் சாகுபடியையும் ஊக்குவித்தார். இத்தகைய வருவாய் விதிமுறைகள் விவசாயிகள் மீது திப்பு கொண்டிருந்த அக்கறையை காட்டுகிறது.

விபச்சாரத்தையும் பெண் அடிமைகளை வேலைக்கு அமர்த்தும் நடைமுறையையும் தடை செய்த திப்பு, கூர்க் மற்றும் மலபாரில் நிலவிய பலதார மண நடைமுறையை நிறுத்துவதற்கு முயற்சி செய்தார். மலபாரின் சில பகுதிகளில் பெண்கள் மேலாடை இல்லாமல் இருந்த நிலையில், அந்த நடைமுறைக்கு எதிராக சட்டம் இயற்றினார்.  மைசூர் நகரத்தின் காளி கோயிலில் நடைபெற்று வந்த  நர  பலி முறையை திப்பு ஒழித்தார். பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஆதரவற்றோருக்கு உதவவும், அவர் ஒரு அரசு வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் குறைந்த வருமானம் உடையவர்களும் பங்குகளை வாங்கி அதிக லாபத்தைப் பெற முடிந்தது. ஒவ்வொரு தாலுக்காவிலும் நிறுவப்பட்ட அரசு கடைகளில் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டன. சில பொருட்களில் அரசு ஏகபோகம் இருந்த போதும் அதனால் பொது மக்கள் பாதிக்கப்படவில்லை.  வெளிநாட்டு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காகத் துறைமுகங்களை அவர் மேம்படுத்தினார்.

முழு மதுவிலக்கு

போதைப்பொருட்களை முற்றிலுமாகத் தடை செய்வது திப்புவின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்தது.  ஏனெனில் இது தனது  குடிமக்களின் பொருளாதார நல்வாழ்விற்கும் தார்மீக ஒழுக்கத்திற்கும் இன்றியமையாதது என்று அவர் நம்பினார். தனது மதுவிலக்கு ஆணை (விதிமுறை எண் 101) மூலம், போதை தரும் மதுபானங்கள் மற்றும் மூலிகைகளைப் பயன்படுத்துவதை அவர் கடுமையாகத் தடை செய்தார். இந்த நடைமுறையைத் தொடருபவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரித்தார். ஆதரவற்ற சிறுமிகள் கோயில்களுக்கு விற்கப்படுவதைத் தடுக்க அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார். மேலும் சுதந்திரமான கைகளின் உழைப்பில் கட்டப்பட்ட ஒரு செழிப்பான அரசை உருவாக்க தீவிரமாக உழைத்தார்.

நிலப்பிரபுத்துவ சக்திகளை ஒழித்தல்

திப்பு நிலப்பிரபுத்துவ இடைத்தரகர்களை ஒழிக்கும் ஒரு முற்போக்கான விவசாயக் கொள்கையை உருவாக்கினார்.  அரசு அதிகாரிகளுக்கு விவசாய உரிமைகளை மறுத்துடன், ஆதிக்க சக்திகளிடமிருந்து விவசாயிகளைப் பாதுகாத்தார். அவுரி), பருத்தி மற்றும் மல்பெரி போன்ற வணிக விவசாயத்தை அவர் ஊக்குவித்தார். திப்பு யுனானி மருத்துவத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டினார், தனது குடிமக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு சிகிச்சைகளை அவரே பரிந்துரைத்தார்.

பொதுக் கட்டிடங்களில் கட்டாய, ஊதியமில்லா உழைப்பை (ஊதியமில்லா வேலை) அவர் கடுமையாகத் தடை செய்தார்,. தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை மீட்டெடுப்பதற்காக மேல்தட்டு மக்களுக்கான சிக்கன நடவடிக்கைகளை திப்பு அறிமுகப்படுத்தினார். இருப்பினும், அவரின் இந்த எளிய வழிமுறைகளை வெறுத்த அவரின் அதிகாரிகள், பிரிட்டிஷாரிடமிருந்து லஞ்சத்தைப் பெற்றனர்.  இது இறுதியாக துரோகத்திற்கும் அவரது வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.

நிலமற்றோருக்கு நிலம்

திப்பு தனது ராணுவ மற்றும் நிர்வாகப் பதவிகளில் “சாதிப் பாகுபாடு இல்லை” என்ற கொள்கையைப் பின்பற்றினார். மேலும் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்களை ஒதுக்கீடு செய்தார். அவரது ஆட்சிக்கு முன், மலபாரில் இருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் நம்பூதிரி பிராமணர்கள் மற்றும் நாயர்களிடம் வெறும் உழவர்களாக மட்டுமே இருந்தனர், ஆனால் திப்பு அவர்களின் சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு நில உரிமையை வழங்கினார்.

மலபார் பெண்கள் தங்கள் மார்பை மறைப்பதைத் தடுத்த உள்ளூர் வழக்கத்தைத் தடை செய்யும் சட்டங்களை அமல்படுத்தி, அங்குள்ள பெண்களைப் பாதுகாத்தார். அவரது முற்போக்கான, மையப்படுத்தப்பட்ட நில வருவாய் முறை பாரம்பரிய நிலப்பிரபுத்துவ கட்டமைப்புகளைத் தகர்த்தெறிந்தது, இதனால் பல நிலப்பிரபுக்கள் தப்பியோடினர். பொதுமக்களை ஒடுக்கிய அதிகாரிகளை அவர் தண்டித்தார் அல்லது பதவியிலிருந்து நீக்கினார். மேலும் அநாதைகள், விதவைகள் மற்றும் விளிம்புநிலை குழுக்களுக்கு மானியங்களை வழங்கினார்.

“நரியின் நூறு ஆண்டு ஆயுளை விட சிங்கத்தின் ஒரு நாள் ஆயுள் மேலானது.”

திப்பு சுல்தான்

பொருளாதார நீதி

முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகத் தனது ராஜ்யம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களைத் திறந்து அரசு ஆதரவை வழங்கினார். அடிமைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு அரசாணையை அமல்படுத்தியதன் மூலம், அவர் தனது காலத்தின் ஒரு முக்கிய சீர்திருத்தவாதியாகத் தனித்து நின்றார். திப்புவின் நடவடிக்கைகள் அரசியலால் தூண்டப்பட்டவையே தவிர, மதவெறியால் அல்ல; அவர் பிரிட்டிஷாருடன் கூட்டணி வைத்த இந்து மற்றும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இருவருக்கும் எதிராகப் போரிட்டார்.

தனது மத சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக, அவர் 156 இந்து கோயில்களுக்கு ஆண்டுதோறும் மானியங்களை வழங்கினார்.  அவரது காலத்தில் இருந்த கடுமையான சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடினார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த, அவர் தனது ராஜ்யத்தின் தலைமை வணிகராகச் செயல்பட்டார். தொழிற்சாலைகளை நிறுவி, வெளிநாட்டு வர்த்தக உறவுகளைத் தொடங்கினார்.  தனிப்பட்ட விவசாயிகளை அவர்களின் சொந்த நிலத்திற்குப் பொறுப்பாக்கினார்.

அரசு சோசலிசம்

அரசு சோசலிசத்தின் உண்மையான கதாநாயகனான திப்பு, பொருளாதாரத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்தார். பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறுவதை உறுதிசெய்து, அரசு முதலாளித்துவத்தின் மூலம் தொழில்துறை துறையை மேம்படுத்தினார். வலுவான கருத்தியல் அர்ப்பணிப்புடன், பிச்சை எடுத்தல் மற்றும் விபச்சாரம் போன்ற சுரண்டல் போக்குகளை அவர் முறியடித்தார்.

அவர் தனது சொந்த தோழர்களின் துரோகத்திற்கு பலியான போதிலும், அவரது மரபு ஒரு முற்போக்கான, மதச்சார்பற்ற தலைமையைக் காட்டுகிறது. வர்த்தகத்தில் அரசு கட்டுப்பாட்டைப் பராமரித்தல், உழுபவர்களுக்கே நிலம் வழங்கும் நிலச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான மறுவாழ்வு மையங்களை நிறுவுதல் ஆகியவற்றின் மூலம் அவர் சமூக மாற்றத்தைக் கொண்டு வந்தார்

முடிவுரை

திப்பு சுல்தான் விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட ஒரு தரமான நிர்வாக அமைப்பை நிறுவினார். அவரது புதுமையான பொருளாதார சோதனைகள், வர்த்தக முயற்சிகள் மற்றும் கூட்டு மேலாண்மை ஆகியவை மைசூரை ஒரு மாதிரி மாநிலமாக மாற்றின. போர்கள் மற்றும் நெருக்கடிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டிருந்த போதிலும், அவர் வளர்ச்சிக்கான செயல்முறையை மனிதநேயமிக்கதாக மாற்றுவதில் வெற்றி பெற்றார். சமூக நீதியின் கொள்கைகளைச் சுற்றியே தனது நிர்வாகத்தை முழுமையாகக் கட்டமைத்த ஒரு முன்னோக்கு சிந்தனை கொண்ட தலைவராக திப்பு இன்றும் போற்றப்படுகிறார்.

(Aarhat Multidisciplinary International Education Research Journal (oct – Nov 2017) என்ற ஆய்வு இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையை தழுவி எழுதப்பட்ட கட்டுரை)

மொழியாக்கம்: ரியாஸ் அகமது

Share This Article