Live Updates

திராணிகளின் திரள் திப்பு

10 Min Read
Posts
Auto Updates

திப்பு என்றும் அழைக்கப்பட்ட திப்பு சுல்தான் நவம்பர் 10,  1750-ம் ஆண்டு பெங்களூர் அருகில் இருக்கும் தேவனஹள்ளி என்ற சிற்றூரில் அன்றைய மைசூரின் மன்னன் ஹைதர் அலிக்கு மூத்த மகனாக பிறந்தார்.

மரபு வழி மன்னர் பரம்பரையில் பிறக்காமல் ஒரு தளபதியின் மகனாய் பிறந்து போர் வீரனாக , பின்னர் தளபதியாக தனது தனிப்பெரும் ஆளுமைகளால் மைசூர் தரணி போற்றும் தலை மகனாகவும், மன்னராகவும் உயர்ந்தவர் ஹைதர் அலி. தன் மகன் திப்பு சுல்தானை தனது ராஜ்யத்தை ஆள்வதற்கான ஆளுமைகளோடும் ஆற்றலோடும் வளர்ப்பதில் தனி கவனம் செலுத்தினார். தன் மகனுக்கு தானும், மைசூரின் தலைசிறந்த ஆசிரியர்களையும் கொண்டு கற்பித்த கல்வியின் விளைவாய் உருது, பாரசீகம், அரபி போன்ற மொழிகளில் தேர்ந்தவராகவும் நிர்வாக துறைகளின் நுணுக்கங்களையும் கற்றவராகவும் திப்பு சுல்தானை உருவாக்கினார். மறுமுனையில் சிறந்த அனுபவம் வாய்ந்த போர் வீரராகிய காஜீ கான் மூலம் போர்கலைகளையும் போர்தந்திரங்களையும் திப்பு கற்றுக்கொண்டார்.

திப்புவின் வளர்ப்பின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனி கவனம் செலுத்திய ஹைதர் அலி, மைசூர் ராஜ்ஜியம் ஒருபுறம் நிஜாம்களாலும், மறுபுறம் மராத்தியர்களாலும் இன்னொரு புறம் தம்மை விட பலமடங்கு பலம் வாய்ந்த ஆங்கிலேயர்களாலும் மும்முனை அச்சுறுத்தலை சூழ்ந்திருக்கிறது என்பதையும் தனக்கு பின்னால் மைசூரை ஆளப்போகும் திப்பு அறிவையும் அனுபவத்தையும் ஒரு சேர பெற்று இருக்க வேண்டும் என்பதை அறிந்தே இருந்தார். எனவே படைகளின் அணிவகுப்பை பார்வையிடும் போதும் , படைகளின் நகர்வுகள் குறித்தான ஆலோசனைகளின் போதும்,முக்கிய நிர்வாக முடிவுகளின் போதும் திப்புவை எப்பொழுதும் உடன் வைத்து கொண்டார்.

இளமைப்பருவம் கடந்து வாலிப வயதை அடைந்த திப்பு திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தார். துணைவியரின் மரணம் காரணமாக மூன்று திருமணங்களை செய்து திப்பு, தனது நேசத்திற்குரிய மூன்றாம் மனைவி கதிஜா ஜமானி பேகம் 1797யில் மரணித்த பின், வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை.

இளவரசர் திப்பு ஆரம்ப காலங்களில் ஹைதர் அலி மராத்தியர்களுக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் முன்னெடுத்த போர்களில் பங்கெடுக்கவில்லை என்றாலும் ஹைதர் அலியின் இறுதி காலத்தில் அவரின் வலது கரமாக நின்று போரிட்டு பல வெற்றிகளுக்கு காரணமாகத் திகழ்ந்தார். திப்புவின் வீரத்தையும் யுத்த தந்திரங்களையும் நேரில் கண்ட ஹைதர் அலி தனது முதுமை காலத்தில் தனது அதிகாரம் முழுமையாக திப்புவிடம் கைமாறும் காலம் நெருங்குவதை உணர்ந்து கொண்டார்.

அதன் முதல்கட்டமாக ஐநூறு குதிரை வீரர்களுடன் சில மாவட்டங்களையும் திப்புவின் ஆளுகைக்கு கீழ் கொடுத்தவர், ஜூன் 19, 1767-ம் ஆண்டு திப்புவின் முதல் பொறுப்பை ஒப்படைத்தார். ஆங்கிலேயருக்கு எதிரான முதல் யுத்தத்தில் அவர்களை வீழ்த்தி அவர்களை விரட்டிய திப்பு வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர்  கோட்டைகளை கைப்பற்றினார். தொடர்ந்து மலபாரை நோக்கி நகரத்  தொடக்கியவர் மங்களூர் கோட்டையை கைப்பற்றி ஆங்கிலேயரை மலபாரில் இருந்து மெட்ராசை நோக்கி நோக்கி விரட்டியடித்தார்.

அதே நேரத்தில் ஆங்கிலேயர்களுக்கு துணை நின்ற மராத்தியர்களுக்கு எதிரான ஒரு முழுநீள யுத்தத்தை முன்னெடுத்த திப்பு, மராத்தியர்களை வீழ்த்திய கையோடு எண்பதாயிரம் வீரர்களை திரட்டிக்கொண்டு மீண்டும் ஆங்கிலேயரை நோக்கி திரும்பினார். இதில் கர்நாடகாவை முற்றுகையிட  வந்த கர்னல் பைலி படைகளை ஜூலை 1780-ம் ஆண்டு வெற்றிகொண்டு கர்னலையும்  நூற்றி ஐம்பது வீரர்களையும் கைது செய்தார்.

இதுபற்றி ஆங்கிலேயர்கள் கீழ்க்கண்ட வார்த்தைகளால் யுத்த இழப்புகளை விவரிக்கிறார்கள்:

“Sir Thomas Munro described the disaster of Colonel Baillie’s army as “the severest blow that the English ever sustained in India”. (கர்னல் பைலி ராணுவம் சந்தித்த இழப்பு அதுவரை இந்தியாவில் அங்கிலேயர்கள் சந்திக்காத மிகப்பெரிய இழப்பாக இருந்தது).

இதன் பின்னர் தன்னுடைய படையுடன் மதராஸை நோக்கி நகரத்தவர் ஆற்காடு கோட்டைகளை கைப்பற்றினார். இதன் பின் தென் இந்தியாவின் வரலாறே முற்றிலுமாக மாறத்தொடங்கியது என்கிறார் “அய்ரே கோட்” என்னும் மேலைநாட்டு அறிஞர்.

மதராஸை கைப்பற்றிய பின்னர் தமிழகத்தின் தஞ்சை வரை வந்தவர் தஞ்சையில் கர்னல் பிரைட் வெயிட் படைகளை பிப்ரவரி18, 1782-ல் வீழ்த்தி தன்னிகரில்லா தளபதியாக முன்னேறினார். ஆங்கிலேயருக்கு திப்பு என்ற பெயரை கேட்டவுடன் அச்சமும் பதற்றமும் பற்றிக்கொள்ள தொடங்கியது.  அடுத்த நகர்விற்காக பாசறை அமைத்து காத்திருக்க டிசம்பர்

26, 1782.-ம் ஆண்டு ஹைதர் அலி இறந்து விட்டார் என்ற செய்தி எட்ட சித்தூருக்கு திரும்பினார்.  ஹைதர் அலி மரணித்து திப்பு அரியணை ஏறும் பொது மைசூர் ராஜ்ஜியம் கிருஷ்ணா நதி முதல் திருவிதாங்கூர் வரை பறந்து விரிந்து இருந்தது.

தனது இளமை முழுக்க யுத்தத்திலேயே செலவழித்த திப்பு, முப்பத்தி இரண்டு வயதில் அரியணை ஏறிய போது, இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரை துடைத்தெறிய சங்கல்பம் எடுத்துக்கொண்டார்.  உள்நாட்டு அளவில் திடகாத்திரமான நிர்வாக கட்டமைப்புகள் இருக்கும் பட்சத்தில் இன்னும் வீரியத்துடன் எதிரிகளை எதிர்க்கலாம் என்று முடிவு செய்தார். இதனால் உள்ளுக்குள் பல சீர்திருத்தங்களை செய்யத் தொடங்கினார். ஆங்கிலேயரை எதிர்கொள்வதற்காக நவீன ஆயுதங்களை தயாரிப்பது உட்பட பிறப்பிக்கபட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் அனைத்தும் போர்கால அடிப்படையில் அமல் படுத்த பட்டன.

குடிமக்களின் அதிருப்தியை பெற்றுக்கொள்வது நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது என்று உறுதியாக நம்பிய திப்பு, ‘நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள், அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்” என்று தன் கோட்டை சுவரில் எழுதி வைத்தார்.  தூரநோக்கு சிந்தனை கொண்டிருந்த திப்பு அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் தருவதற்கு தன் துணிவையே துணை என கருதியவர்.

காலனி ஆதிக்கத்தை இந்தியாவில் இருந்து விரட்ட ஆங்கிலேய அரசின் அன்றைய எதிரிகளான பிரெஞ்சு, துருக்கி போன்ற நாடுகளோடு நட்புறவை வளர்ப்பதன் மூலம் தன் ராஜ்ஜியம் வலிமைபெறும் என்பதோடு அது எதிரிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தும் என்று புரிந்திருந்தார். இந்தியாவை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கவும் அது உதவும் என நம்பிய திப்பு தமக்கு என ஒரு அயலுறவு கொள்கையே அந்த காலத்திலேயே வகுத்து வைத்திருந்தார் என்பது நமக்கு வியப்பளிக்கிறது.

வளமும் வலிமையையும் ஒருசேர பெற்ற ராஜ்யமாக மைசூர் வளர்ச்சி கொண்டிருக்க ஆங்கிலேயர்கள் மராத்திய புரூஷ்வா மன்னர்களோடும், நிஜாம்களோடும் இணைந்து திப்புவை வீழ்த்த முயற்சிகள் மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங் மராத்தியர்களுடன் 1782-ம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டார். தங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை களைந்து இருவரும் சேர்ந்து திப்புவை எதிர்ப்பது என்று முடிவுக்கு வந்தனர். மராத்தியர்கள் ஆங்கிலே ஏகாதிபத்தியம் இந்தியாவில் காலூன்ற துணை நின்றார்கள் என்பது வரலாறு.

ஆங்கிலேயர்கள் உடனடியாக மராத்திகள் மற்றும் நிசாம்களின் கூட்டு படையோடு இணைந்து ஒரு மும்முனை தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டார்கள். அதன் முதல் கட்டமாக பெரும் படையோடு ஜெனரல் மாத்தியூஸ் தலைமையில் மலபார் கோட்டை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த செய்தியை அறிந்த திப்பு சுல்த்தான் கோட்டை பாதுகாப்பிற்கு தன் தளபதி லுப்தி அலி பெய்க் தலைமையில் படையை அனுப்பி வைத்தார்.  ஆனால் படை வந்து சேர்வதற்குள் மலபார் கோட்டை முழுமையாக மார்ச்9, 1783-ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் ஆனது.

பின்பு நடந்ததை வரலாற்றாசிரியர்கள் இவ்வாறு விவரிக்கிறார்கள்: ஆயுதம் ஏந்திய நிலையில் பிடிபட்ட ஒவ்வொருவரின் இரத்தத்தையும் சிந்த உத்தரவிடப்பட்டது; மேலும், அந்த உத்தரவுகள் கண்டிப்பாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யாத சில அதிகாரிகள் கண்டிக்கப்பட்டனர். (Orders were given to shed blood of everyman who was taken under arms: and some of the officers were reprimanded for not seeing those orders rigidly executed. (Mill, History of British India).

யுத்த நெறிகளை கடந்து தன் படையையும் தன் மக்களையும் கொன்றொழித்த ஆங்கிலேய படையினரின் செயல் கேட்டு கொதித்தெழுந்த படையுடன் மங்களூரை நோக்கி விரைந்தவர் ஆங்கிலேயர்களை துவம்சம் செய்து மலபாரை மீண்டும் தன்வசம் ஆக்கி ஆங்கிலேய தளபதிகள் முதற்கொண்டு அனைவரையும் சிறை பிடித்தார். வேறு வழியில்லாமல் ஆங்கிலேயர்களே கோட்டையை திப்புவிடம் விட்டுவிட்டு சரணடைந்தனர்.

திப்புவிடம் கிடைத்த பெரும் தொடர் தோல்விகள், மங்களூரில் இட்ட சரனாகிதி ஒப்பந்தம் போன்ற நிகழ்வுகள் இந்தியாவை அடிமைப்படுத்துவதற்கு திப்பு இருப்பார் என்பதை ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தியது. திப்புவை யுத்தத்தில் வீழ்த்துவது கடினம், வஞ்சத்தால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று முடிவு செய்து வஞ்சக வலைகளை விரிக்கத் தொடங்கினர்.

அதோடு மராத்தியர்கள், நிஜாம்கள் மற்றும் கிழக்கு இந்திய கம்பெனியின் இராணுவத்தையும் ஒருங்கிணைத்து, முறைப்படுத்தி பெரும் படையை கொண்டு திப்புவை பல முனைகளில் தாக்குவது எனவும், கைப்பற்றப்பட்ட திப்புவின் நிலங்களை தமக்குள் பகிர்ந்து கொள்வது எனவும் ஒப்பந்தம் இட்டார்கள்.  திப்புவின் அமைச்சர்கள் உதவியோடு கீழறுப்பு வேலைகளையும் செய்து முடித்தாதார்கள்.

மிக தீர்க்கமான திட்டமிடலுடன், நேர்த்தியான நகர்வுகளுடன் இந்த மூன்றாம் மைசூர் யுத்தம் மே 26, 1790இல் தொடங்கியது.  ஜெனரல் மேத்திவுஸ் தலைமையில் முதல் நகர்வாக கோயம்புத்தூர் நோக்கி நகர்ந்த பிரிட்டிஷ் படை ஜூலை 21இல் அந்நகரை கைப்பற்றியது.

ஏகாதிபத்திய படையை தடுத்து நிறுத்தும் விதமாய் சத்தியமங்கலத்தில் திப்பு பாசறை அமைத்து அமர்த்திருந்தார். சத்தியமங்கலத்தில் நடந்த கடுமையான யுத்தத்தில் ஆங்கிலேய படை துவம்சம் செயப்பட்டு திப்புவிற்கு மகத்தான வெற்றி கிட்டியது. இது ஆங்கிலேய முகாமில் பேரச்சத்தை உருவாக்க, மறுமுனையில் ஆங்கிலேய முக்கிய படைகளை வீழ்த்துவதற்கு திப்பு முன்னேறிக் கொண்டிருந்தார். இந்நிலையில் திப்புவின் தலைமை நிதியாளர் கிறிஸ்னாராவின் சதியால் பெங்களூரு கோட்டை வீழ்த்தபட்டு நானூறுக்கும்  மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.  தன்னுடைய அதிகாரிகள் விலைபோனதை திப்பு உணர்ந்து கொண்டார்.

இந்நிலையில் இரு தரப்பாருக்கும் இடையில் சில அமைதிப்  பேச்சு வார்த்தைகளும் அரங்கேறின. திப்பு, இந்த இடைப்பட்ட காலத்தில் சிவில் கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.

தொடர் யுத்தங்களால் பொருளாதாரம் சீர்குலைந்து இருந்தபோதும் கோவில்களுக்கு மானியம், விவசாய மானியம், உழுபவனுக்கே நிலம் போன்ற புரட்சிகரமான திட்டங்களும், நவீன தொழிற்சாலைகள், நவீன ஆயுதங்கள் மற்றும் ராக்கெட் தொழில் நுட்பம் போன்ற விசயங்களில் பலத்தை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்தினார். திப்பு ஒரு வீரன் மட்டும் அல்ல மிக சிறந்த நிர்வாகியும் ஆவார். நெருக்கடியான சூழலில் தன் நிர்வாகத்  திறனால் தன் மக்களுக்கு அமைதியையும் அபிவிருத்தியையும் உருதிப்படுத்தினார் என்பதை ஆங்கிலேயர்களே கீழ் கண்டவாறு பதிவு செய்கிறாரர்கள்.

He highly developed agriculture and industry in his dominion and initiated progressive agricultural reforms beneficial to the peasantry. Mill, the celebrated English historian, considers his territories to be “the best and its population the most flourishing in India” and Tipu Sultan, a ruler who “sustains an advantageous comparison with the greatest princes of the East” (History of India, London 1848)

(அவர் தனது ஆட்சியில் விவசாயம் மற்றும் தொழில்துறையை வெகுவாக மேம்படுத்தியதுடன், விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையிலான முற்போக்கான வேளாண் சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தினார். புகழ்பெற்ற ஆங்கிலேய வரலாற்றாசிரியரான மில், இவரது ஆட்சிப்பகுதிகளை “இந்தியாவிலேயே மிகச் சிறந்தவை மற்றும் அங்குள்ள மக்கள் மிகவும் செழிப்பானவர்கள்” என்றும், திப்பு சுல்தானை “கிழக்கு நாடுகளின் மிகச்சிறந்த மன்னர்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு இணையாகவோ அல்லது மேலாகவோ திகழும் ஒரு ஆட்சியாளர்” என்றும் குறிப்பிடுகிறார்.)

மேலும் கடல் வாணிபத்தை பெருக்குவதிலும் தன் கடல் வாணிபம் கொள்ளைளையர்களால் எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகாத வகையில் கடல் எல்லைகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் மேற்கொண்டிருக்கிறார்.  இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தகத்திற்கு மேலும் உதவியது.

லார்ட் வெள்லேஸ் ஆங்கிலேய இந்தியாவின் கவர்னராக பதவியேற்றார்.  1799 ஜனவரியில் மெட்ராஸ் வந்தவர் நிஜாம்கள் மற்றும் மராத்தியர்களுடன் இரகசிய ஆலோசைனைய மேற்கொண்டு திப்புவின் ராஜ்யத்தில் விலை போனவர்களின் வலை பின்னலை வலிமைப்படுத்தினார்.

பிப்ரவரி 1799-ம் ஆண்டு ஜெனரல் ஹேம்ஸ் வேலூர் தொடங்கி கண்ணூர்  நோக்கி படையெடுத்தார். அதே நேரத்தில் மராத்தியர்களும் நிசாம்களும் மைசூர் நோக்கி நகர யுத்தம் முழுவீச்சில் பன்முக தாக்குதலோடு நடந்தேறத் தொடங்கியது.

மறுமுனையில் திப்புவின் பிரதம அமைச்சர்கள் மிர்கு லாம், திவான் மற்றும் பூர்நைய்யா போன்றவர்கள் வெள்ளையர்களிடம் விலை போக ஆங்கிலேயப் படை ஏப்ரல் 17, 1799-ல் ஸ்ரீரங்கபட்டினத்தை தொட்டிருந்தது.

ஸ்ரீரங்கபட்டினத்தை தாக்குவதற்கு மே 4-ம் தேதி நேரம் குறிக்கப்பட்டது.  மிர் சாதிக் மற்றும் பூர்னைய்யா போன்றவர்கள் திப்புவின் ராணுவ தடுப்பை சீர்குலைத்து அங்கிலேயர்கள் கோட்டைக்குள் நுழைய வழி ஏற்படுத்தினார்கள்.

கோட்டையில் உணவு அருந்திக் கொண்டிருந்த திப்புவிற்கு இந்த செய்திகள் தரப்பட கனநேரத்தில் தன் எதிரி படைகளை நோக்கி பாய்ந்த திப்பு சக வீரர்களோடு போராடி மாய்ந்தார். அறிவும், ஆற்றலும், புதுமையும், புரட்சியும், வீரமும், விவேகமும் ஒருங்கே பெற்ற ஒரு மாவீரன் திப்பு.

தன் வாழ்நாளில் பெரும்பகுதியை யுத்ததிலேயே செலவழித்த திப்பு வாசிப்பில் தீராத ஆர்வம் கொண்டவர்.  பதெஹ்-அல்-முஜாஹிதீன் என்ற ராணுவ மேலாண்மை குறித்த புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். முஜாயித்-அல்-முஜாஹிதீன் என்ற தன்னுடைய ஜும்மா உரைகளின் தொகுப்பையும் எழுதி இருக்கிறார்.

திராணி அற்றுக் கிடந்த தன் தேசத்தின் திராணிகளை திரட்டி ஆங்கிலேய ஏகாதிபத்திய தீமைக்கு எதிராய் திமிர்கொண்ட வேங்கையாய் தீரமுடன் போரிட்டு தியாகியானார் திப்பு.

துரை அப்பாஸ்

Share This Article