தாவூத் ஷா: மீள்வாசிப்பிற்கான அவசியம்

8 Min Read

தாவூத் ஷா: மீள்வாசிப்பிற்கான அவசியம்

1923 லிருந்து தாவூத் ஷாவால் வெளிக்கொணரப்பட்ட இஸ்லாமிய அரசியல், சமயப் பண்பாட்டு இதழ் ‘தாருல் இஸ்லாம்’ இதழாகும். இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தது ‘தாருல் இஸ்லாம்’. இப்போது நூற்றாண்டு கடந்ல நிலையில் அதில் வெளியான சில கட்டுரையாக்கங்களை மீளப் பதிப்பித்து உரையாடுவது தமிழ் ஆய்வுலகில் மிக அவசியமான செயல்பாடாகும்.

ஓர் இதழில் உரையாடலாகப் பதிவானவை ஆவணங்களாக அந்தக் கால வரலாற்றைக் கட்டியமைக்க ஆதாரங்களாகத் துணை செய்கின்றன. இதழ்களுக்குள் பதிவு செய்யப்பட்ட சமகால உரையாடல்கள், வரலாறெழுதியலுக்கு முக்கிய ஆதாரங்களாக கொள்வது ஏற்கப்பட்ட முதல் நிலை பயன்பாடாகவும் உள்ளது. அந்த வகையில் தாவூத் ஷாவின் தாருல் இஸ்லாம் இதழின் பதிவுகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

பெரியார் இயக்கத்தின் சமூக நடவடிக்கைகள், திராவிட அரசியல் செயற்பாடுகள் பற்றி பெருமதவாதிகளும் சாதிய சக்திகளும் காலந்தோறும் அவதூறுகளை அள்ளித் தெளித்த வண்ணம் உள்ளனர். தமிழ்த் தேசிய சக்திகளாகத் தங்களை படம் காட்டிக் கொள்ளும் குழுக்களும் பல்வகைப்பட்ட பிற்போக்கு சக்திகளும் திராவிடம், திராவிட நாடு பற்றி வரலாற்று வழியில் இல்லாமல் இழிவுபடுத்தி பேசி வருவதைப் பார்க்கலாம்.

தாவூத் ஷா போன்ற இதழியல் ஆளுமையாளர்களின் சில விமர்சனங்கள் அவர் சார்ந்த சமூகம் என்ற அளவில் கவனங்கொள்ளத்தக்கன. அவற்றை பொருட்படுத்தித் தெளிவு நல்க வேண்டிய பொறுப்பும் கடமையும் திராவிடத் தரப்புக்கு இருக்கிறது. 1947 -தொடங்கி பல கட்டுரைகள் பெரியாரின் திராவிட நாட்டுக் கோரிக்கை, மத நிலைப்பாடு (இஸ்லாம்) பற்றிய வினாக்களை எழுப்பி உரையாடுகிறது.

திராவிட நாட்டுப் பிரிவினைக்கான உரிய காரணங்களை தாருல் இஸ்லாம் அழகுற முன்வைத்தது. முஸ்லிம்களையும் உள்ளடக்கிய தென்னிந்தியா தனித்துவமானது என்றது. வட இந்தியாவோடு அரசியல் ரீதியாக இணைந்து இருந்ததற்கான வரலாற்றுத் தடங்கள் ஆங்கிலேயருக்கு முன்பு இல்லை என்று மறுத்துப் பேசியது. தென்னிந்திய (திராவிட) தனித்துவத்தை முன்வைத்து வாதுரைக்க டாக்டர் அம்பேத்கரை மேற்கோள் காட்டி எழுதியது. பாகிஸ்தான் பிரிவினையின் நியாயத்தை திராவிட நாட்டு பிரிவினை வேண்டல்களுக்கு முற்சான்றாகக் காட்டியது. திராவிட நாட்டு பிரிவினை கேட்பதற்கு அடிப்படை பொருளியல் சிக்கலே என்ற கோணத்திலெல்லாம் தாருல் இஸ்லாம் விளக்கி எழுதியது.

அதாவது “ஏக இந்தியா” என்னும் பெயரால் தென்னிந்தியா சுரண்டப்படுவதாக அதை பாமரர்கள் புரிந்து கொண்டனர் எனவும் எப்படி ஆங்கிலேயரின் அரசியல், பொருளியல் ஆதிக்கத்தால் சுரண்டப்படும் போது அகில இந்திய கிளர்ச்சி ஏற்பட்டதோ அப்படி வட இந்திய கொள்ளைக்கு எதிராக தென்னிந்தியாவில் எழுச்சி ஏற்பட்டது என்று வாதித்தது. இப்படி சிறப்பாக விவரித்த போதிலும் தமிழ்நாட்டில் மட்டும் தீவிரப்படும் திராவிட நாட்டு கோரிக்கை ஸ்தாபன ரீதியில் வலுப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. ஆந்திரர், தமிழர் ஒன்றுபட வேண்டும், இருவருக்கும் இடையிலான சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்று தாருல் இஸ்லாம் இதழ் அறைகூவல் விடுத்தது.

தென்னிந்தியா இந்திய ஒன்றியத்திலிருந்து விடுபடுவது எளிதான காரியம் இல்லை. தமிழர் (காங்கிரசார்) உட்பட எல்லாம் ஒன்றுபட்டால் கூட வட இந்திய தலைவர்கள் வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளை போல ஆந்திரரையும் தமிழரையும் பிரித்து விடுவார்கள் என்று உணர்த்தியது. மேலும், உடனடியாக மாகாண பொருளாதாரம் முன்னேறவும் அது சுரண்டப்படாமல் இருக்கவும் அதன் அதிகார எல்லை விரிவு செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டது. இதை மத்திய சர்க்கார் செய்யத் தவறினால் திராவிட நாடு பிரியும் காலம் வெகு தூரம் இல்லை என்று கணித்து உரையாடியது. மத்திய சர்க்காரின் சில அதிகாரம் மாகாணத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் கோரியது.

திராவிடர் கழகத்தார் தாருல் இஸ்லாம் இதழைதொடர்ந்து படித்து வந்தனர். அந்த அளவு நெருக்கமான இயக்க வாசிப்புக்கு உரித்தானதாக இருந்தது. திராவிட நாடு அமையும் ஆனால் அதில் முஸ்லிம்களின் வகிபாகம் என்ன என்கிற வினாவை குலாம் என்ற தோழர் கேட்கத் தொடங்கினார். இதை நவம்பர் 1947 இல் வெளிவந்த தாருல் இஸ்லாம் இதழின் Y.S. அருணாச்சலத்தின் “திராவிட இயக்கமும் முஸ்லிம்களும்”எனும் கட்டுரையாக்கத்தில் காணலாம்.

முஸ்லிம் உரிமைகளில் காங்கிரஸார் தலையிட்டது போல் இல்லாமல் திராவிட சர்க்கார் தலையிடாது என்று பெரியார் விடுதலையில் எழுதிவிட்டால் நல்லது என்று Y.S. அருணாச்சலம் சுட்டிக்காட்டினார். பெரியாரே தாருல் இஸ்லாம் ஆசிரியர் தாவூத் ஷாவை பகுத்தறிவுவாதி என்று சொன்னதற்கும் அப்பால் முஸ்லிம் ஆதரவை திரட்டவே இப்படி எழுத வேண்டும் என்ற குரலைப் பார்க்க இயலும்.

திராவிட நாட்டில் முஸ்லிம்களின் வகிபாகம் என்ன என்று வினாவியது போல பெரியார் கடந்த காலத்தில் இருந்து சூத்திரர், பஞ்சமர்கள் இஸ்லாத்தை தழுவுவது பற்றி உரையாடி வந்தார். ஆனால் ஏன் அவர் முன்மாதிரியாக இஸ்லாத்தில் இணையவில்லை என்ற கேள்வியையும் தாருல் இஸ்லாம் இதழின் எழுத்துக்கள் வெளிப்படுத்தின. இவ்வாதுரையைக் கவனத்தில் கொண்டு சிலவற்றை உரையாட இயலும். இந்திய துணைக்கண்ட விடுதலை அரசியல் உரையாடலாக வந்த போது வடக்கில் இஸ்லாமியர்- இந்து முரணாக அமைந்ததாகவும், தெற்கில் பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் முரண் என்பதாகவும் பொதுவாக ஏற்கப்படுகிறது.

 இஸ்லாமியர் – இந்து என்ற மைய உரையாடல் என்பது ஜின்னாவும் காந்தியும் எதிரெதிராக கருத்தாடி பாகிஸ்தான் பிரிவினையை நோக்கி முடிவடைந்தது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் சமூகநீதி என்ற புகழ்பூத்த கூற்றுக்கு அப்பால் தாவூத் ஷாவின் முஸ்லிம்களின் நிலை பற்றிய உரையாடல் தனித்துவமான கூறாகும். இதன் வழியாக புதிய விவாதப்புள்ளிகள் சிலவற்றை உணர பார்க்கலாம்.

வடக்கில் இருந்தது போலவே மதம் சார்ந்த தரப்பு, மதம் சாராத தரப்போடு உரையாடும் ஒரு தரப்பை பார்க்கிறோம். அரசு வடிவமாக திராவிட நாடு இன்னும் உருவாகி இருக்கவில்லை. அது சமூக உரையாடலாகத்ஈதான் இருக்கிறது. ஆனால் தாவூத் ஷா வெளிப்படுத்தும் அச்சம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு இஸ்லாமிய மக்களின் பரந்துபட்ட அச்சமா? அல்லது தாவூத் ஷா என்கிற (தனிமனிதரின்) அறிஞரின் வாத வெளிப்பாட்டு திறமையா? என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

பரந்துபட்ட இஸ்லாமிய மக்களின் அச்சம் என்று இருந்தால் பெரியாரோடும் திராவிட இயக்கத்தோடும் இணைந்து இயங்கிய இஸ்லாமியர்கள் அத்தகைய அச்சத்தை வெளிப்படுத்தாதது ஏன்? தாவூத் ஷா எனும் தனி ஒருவரின் கருத்து என்றாலும் அது புறக்கணிக்கத்தக்கது அல்ல. ஏனென்றால் ஒரு தேசிய உரையாடலில் இரண்டாம் நிலைப்படுத்தப்பட்ட குடிகள் பூர்வீகப் பெருமதத்தால் (!) விதேசிகள் என்று கற்பிக்கப்பட்ட நிலையில் அவர்களுடைய நல ஆர்வங்களை விவாதப்படுத்த விரும்பும் தாவூத் ஷாவின் வாதுரைகளை அவசியமானதாகவே எண்ண வேண்டும்.

தாவூத் ஷா இஸ்லாம் சார்ந்து பேசினாலும் ஒரு காங்கிரஸ் சார்பும் அவருக்குள் இருக்கிறது எனக் கருதவும் சான்றுகள் உண்டு.

பெரியாரின் சுய முரண்கள் என்ற அளவில் மதம், மதமாற்றம், மதநீக்கம் சார்ந்து பெரியாரை நோக்கி வினவி திகைப்படைய செய்ய எண்ணுகிறார் தாவூத் ஷா. புதிதாக அமைய இருக்கும் திராவிட நாடு, அந்த நாட்டின் அரசமைப்பு கூட்டாட்சி சார்ந்து முஸ்லிம்களின் பங்கு என்ன என்று உறுதி செய்யுமா? என்று கேட்கப்படுமானால் தொடர்ந்து இந்திய பேரமைப்பில் இஸ்லாமியர்களின் நிலை குறித்து தாவூத் ஷாவின் நிலைப்பாடு எவ்வளவு தீவிரமாக வெளிப்பட்டது என்பதையும் அறிய வேண்டும் என்பதாக அது நீளும்.

 ஜின்னாவின் முஸ்லிம் லீக் தீவிரம் எப்படி பாகிஸ்தான் தனி நாடு என்பதாக விளைந்ததோ அதைப்போல ஒன்றுபட்ட இந்திய அமைப்பிற்குள் முஸ்லிம்களின் பங்கு என்ன என்பதான விவாதம் தாவூத் ஷாவால் முன்னெடுக்கப்பட்டதா? என்றும் காண வேண்டும்.

பெரியார், அண்ணா ஆகியோரின் திராவிட நாட்டுக் கோரிக்கை அடுத்த கட்டத்துக்கு முன்னேறாமைக்கு விடுதலை பெற்ற இந்திய தேசிய மூர்க்கத்தனமே காரணம் என்று அறிஞர்கள் ஆராய்ந்துரைக்கின்றனர். திராவிட நாட்டுக் கோரிக்கை சட்டவிரோதமானது, அதன் பெயரால் கட்சி நடத்துவது தொடர்ந்தால் கட்சியைத் தடை செய்து விடுவோம், தோழர்களைத் தேசப் பாதுகாப்பு சட்டத்தில் வாழ்நாள் சிறைப்படுத்துவோம் என்ற எச்சரிக்கைகளால்தின் திராவிட நாட்டுக் கோரிக்கைப் பின்னடைவைச் சந்தித்ததே ஒழிய வாத விவாதங்களில் இருந்த போதாமைகளால் – குறைபாடுகளால் அது பின்னடைவை சந்திக்கவில்லை. கடுமையான அரசு ஒடுக்கு முறையே அதற்குக் காரணமாகும்.

எனவே, திராவிட நாட்டுக் கோரிக்கையை கைவிட்டு திராவிட அரசியல் இயக்கம் (திமுக) மாநில சுயாட்சியை நோக்கி நகர்கிறது. இந்திய பேரதிகாரத்தால் திராவிட நாட்டு கோரிக்கை மூர்க்கமாக முடித்து வைக்கப்பட்டது. தாவூத் ஷாவின் வாதுரையால் திராவிட நாட்டுக் கோரிக்கை எந்த வகையிலும் நிலைகுலைந்து போகவில்லை.

இவற்றை எல்லாம் கடந்து, இஸ்லாமியர்கள் என்ற இரண்டாம் நிலை குடிகளாக, விதேச மதத்தின் குடிகளாகக் கற்பிக்கப்பட்ட இஸ்லாமிய தேசிய உரையாடலை முதன்மையாக நிறுத்திப் பேசுவதை மிக மிக மதிக்கிறோம். அது சிறப்பானதாகும். மற்றபடி திராவிட நாடு சார்ந்த அவரது எண்ணங்கள் முற்சாய்வு கொண்டவை என்று கணிக்கவே வாய்ப்பு அதிகம்.

 ம.பொ.சி தமிழரசு கழகம் நடத்தினாலும் சமஸ்கிருதம் சார்ந்து, இந்துப் பெருநிலம் சார்ந்து மாறா பற்றுள்ளவர். அடிப்படைப் சிக்கலாக இருக்கிற இந்திய தேசிய, இந்து பெருமதவாதம் இவற்றை எப்போதும் அவர் விமர்சனத்திற்கு உள்ளாக்கவில்லை.

இப்படி தாவூத் ஷாவிலும் இந்திய தேசிய முற்சாய்வு உள்ளதாகப் பார்க்கலாம். இரண்டாம் தர குடிமக்களாக இந்தியாவின் எதார்த்த நடப்பில் இருந்து வரும் இஸ்லாமியர்களைத் திராவிட நாடு உருவாகி ஒடுக்கப் போகிறது என்ற சூழல் இல்லை. தமிழ் திராவிட நிலத்தில் சைவ, வைணவ, கிறித்தவ பகுத்தறிவாளர் பெரும்பான்மைச் சூழலில் அது விளையுமா என்பதற்கு சரியான முற்குறிகள் இல்லை.

வட இந்தியாவில் இந்திய விடுதலைக்கு முன்பே இரண்டாம் தர குடிமக்களாக இஸ்லாமியர்கள் நடத்தப்பட்டார்கள். ஜின்னா தலைமையிலான இஸ்லாமியச் சமூகம் இதை உணர்ந்து ஒன்றுபட்டது. காந்தி என்னதான் அரவணைப்பாகப் பேசினாலும் இந்து தரப்பின் ஓர் ஆள் அவர் என்று கணித்து விட்டனர். ஆகவே அது பிரிவினையில் முடிவுற்றது.

தாவூத் ஷா உரையாடிய காலத்தில் தமிழ் நிலத்தில் இப்படி ஏதும் இல்லை. பெரியார் அதிகபட்ச திறம்போடு விவாதத்தை விவாத முனையில் எதிர்கொள்கிறார். தாவூத் ஷாவின் உரையாடலை மறுக்கவில்லை. இந்நிலையில் இந்த கட்டுரை ஆக்கங்கள் மிக முக்கியமானதாகும். திராவிட நாட்டு கோரிக்கையை தாவூத் ஷாவும் அவர் தம் இதழியல் குலத்தினரும் எப்படி பார்த்தார்கள்? என்னென்ன வகையான வினாக்களை எழுப்பினார்கள் என்கிற உரையாடல் இதுவரை தமிழ் ஆய்வு உலகில் அறியப்படாதிருந்த நிலையில் தாவூத் ஷாவும் அவரது இதழியல் குழுவினரும் எழுதிய கட்டுரைகளை தொகுத்து உரையாடி,  மீண்டும் உரையாடல்களின் பொற்காலத்தைக் கனவு காணுவோம்.

  • எச். இ அனீஸ் பாத்திமா எம். ஏ. பிஎச்.டி
    திராவிட இதழியல் ஆய்வாளர்
    தி.அ.பெ
Share This Article