ஐதர் அலி 1758-இல் மைசூரை மராட்டியர்களிடமிருந்து காப்பாற்றியதைத் தொடர்ந்து மைசூரின் வரலாறு தென்னிந்திய வரலாறாகியது. 1758 முதல் 1799 வரையான நாற்பத்தியொரு ஆண்டுகால மைசூர் வரலாறு பெருமைமிக்க ஒரு வீரகாவியமாகத் திகழ்கிறது. ஐதரும் அவரது மகன் திப்புவும் இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து மாபெரும் சக்திகளாகச் செயல்பட்டனர். திப்புவின் வீழ்ச்சிக்குப் பின்னரே ஆங்கிலேயருக்கு தங்கள் ஆதிக்கத்தைத் தென்னிந்தியாவில் நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று நம்பிக்கை வலுவடைந்தது.
மைசூர் அரசைச் செப்பம் செய்து ஏற்கனவே வலிவுடன் விளங்கிய மராட்டியர், ஐதராபாத் நிசாம் போன்ற உள்நாட்டு அரசுகளுடனும், இந்தியாவில் தங்களை நிலைப்படுத்திக் கொள்ள பதைப்புடன் செயல்பட்ட ஆங்கிலக் கும்பனியுடனும் மோதத்தக்க அளவிற்கு ஒரு சிறந்த அரசியல் சக்தியாக்கினார் ஐதர் அலி. ஐதர் உருவாக்கிய சக்தியைக் காத்துப் போராடும் நிலை திப்புவிற்கு வாய்த்தது. அவரது பதினேழு ஆண்டு கால ஆட்சி, நிகழ்ச்சிகள் நிரம்பியவை. அவரது செயல்பாடுகளும் நிர்வாக முறைகளும் அவர் காலத்து இந்திய மன்னர்களிடமிருந்து அவரை வேறுபடுத்தி உயர்த்திக் காட்டுகின்றன. திப்புவைப் போன்ற ஒரு மன்னரைத் தங்கள் இலாபத்திற்காக வீழ்த்திய கும்பனியார் தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்க, உலக அரங்கில் தங்களை தவறு செய்யாதவர்களாகக் காட்டிக் கொள்ள, திப்புவின் குறைகளாக கோர்த்துச் சொன்னவை பல ஆங்கில வரலாற்றாசிரியர்களும் அவற்றை அப்படியே வரலாறாக எழுதி வைத்தனர்!
திப்பு கொடூரமான மதவெறியர், பல இந்துக் கோயில்கள் அவரது படையெடுப்புகளில் பாழாக்கப்பட்டன. கோயில் உடைமைகள் கைப்பற்றப்பட்டன. வென்ற மக்களைக் கடுமையான முறையில் மதம் மாற்றினார் என்பது போன்று திரித்துக் கூறப்பட்ட கருத்துக்கள் ஆங்கில வரலாற்றாசிரியர்களால் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களது வரலாற்று நூல்களிலும் அவ்வாறே பதியப்பட்டன ஆனால் திப்புவின் அனுகுமுறைகளும் செயல்பாடுகளும் இக்கருத்துகளுக்கு நேர்மாறாகவே இருந்தன.
சமயக்கொள்கை
திப்பு தமது இசுலாம் மதத்தில் பிடிப்பு மிக்கவராக, ஒரு சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தார் என்பது உண்மையே, ஒருவர் தனது மதத்தின மீது ஈடுபாடுகொண்டு சமயப்பிடிப்புடன் வாழ்வது நல்லொழுக்கத்தின் ஒரு பிடியாகும். அந்தப் பிடிப்பும் பற்றும் தனது மதம் ஒன்றே சிறந்தது என்றபோக்கில் ஒருவரை மதத் துவேசத்துடன் செயல்பட வைப்பதுதான் விரும்பத்தகாத வெறிச்செயலாகும். திப்புவின் செயல்பாடுகள் சமயக் காழ்ப்பை அடிப்படையாக கொண்டவை அல்ல என்பது வரலாற்று உண்மையாகும். எல்லாச் சமயங்களும் நல்ல சமயங்களே என்ற நன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது திப்புவின் சமயக்கொள்கை, அவரது ஆட்சிக்குட்பட்ட நிர்வாக மையங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு மசூதியும், இசுலாமிய மார்க்கப் பள்ளியும் நிறுவி, தனது மதநெறி வளர்ச்சிக்கும், சீரான செயல்பாட்டிற்கும் வகை செய்த திப்பு, இந்து கோயில்களுக்கும் மடங்களுக்கும் அளித்த நிலந்தங்களும், கொடைகளும் ஏராளம். சைவத்தின்பால் பெரும் ஈடுபாடு கொண்ட சோழ மன்னர்கள் ஏனைய வைணவ, சமண, பௌத்த மதங்களையும் மதித்துப் போற்றியதைப் போலவே திப்புவும் செயல்பட்டிருக்கிறார். திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான 2,33,959 வராகன்களில் இந்து கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விவரமே திப்பு தன்னாட்டில் பெருவாரிமக்களாக இருந்த இந்துக்களின் உணர்வுகளைப் போற்றும் வகையில் அவர்களது சமயப் பணிக்கு ஆதரவளித்துச் செயல்பட்ட பாங்கை நன்கு விளக்கும்.
ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மத நெறிகளைப் பின்பற்றி மற்ற மதத்தலைவர்களையும் மதத்தினரையும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே திப்புவின் உயிர்ப்பான சமயக் கொள்கையாக விளங்கியது. 1795 சீரங்கப்பட்டணம் முற்றுகைப் போரில் எரியுண்டு அழிந்து போனதைப் போக எஞ்சிய அரண்மனை நூலகத்தில் கிடைத்த நூல்களில் திருக்குரான் நாற்பத்தி நான்கு பிரதிகளும் அதற்கு ஈடான எண்ணிக்கையில் திருக்குரானுக்கான விளக்க நூல்களும் இருந்தன. இவற்றுடன் சுமார் 115 இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் போதிக்கும் சூபி மார்க்க நூல்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
திப்புவின் தனி வாழ்விலும் அரசியலிலும் எடுக்கப்பட்ட நடவடிககைகள் பெரும்பாலும் மனித நேயத்தைச் சமய உணர்வு முறித்துப் போடாத வகையில் எடுக்கப்பட்டவையே. திப்புவின் சமய உணர்வு சமரசம் போற்றியதாகவும் எல்லா மதங்களுக்கும் சம மதிப்பு அளிப்பதாகவுமே இருந்தது. இதனைப் புலப்படுத்தும் நிகழ்ச்சிகள் பல வரலாற்று நிகழ்வுகளாகவே இருக்கின்றன. அவற்றுள் ஒருசில மட்டும் எடுத்துக்காட்டாக இங்கே கூறப்படுகிறது.
சீரங்கபட்டணம் -சீரங்கநாதர் கோயில்
திப்புவின் தலைநகரான சீரங்கபட்டணத்திலுள்ள இந்தக் கோயில்களில் நியமம் தவறாமல் வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. திப்புவிற்கு இக்கோயில் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட இக் கோயிலுக்குத் திப்பு வழங்கிய வழிபாட்டு பொருள்கள் பல இன்றும் அவர் பெயரைத் தாங்கி அக்கோயிலில் உள்ளன. இக்கோயிலில் வழிபாடுகளும் பூஜையும் முறைப்படி சிறப்புறச் செயல்பட வேண்டும் என்பதில் திப்புவிற்கு இருந்த ஆர்வத்தைப் புலப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று குறிப்பிடத்தக்கது. கோயிலுக்கு மிக அருகிலேயே திப்புவின் அரண்மனை இருந்தது. சீரங்கநாதருக்குச் செய்யப்படும் பூஜைகளில் ஒலிக்கப்படும் கோயில் மணி ஓசையைக் கேட்டு அறிந்து கொள்வது திப்புவின் வழக்கம் ஒருசமயம். ஏதோ காரணத்தால் கோயில் பூசைமணி காலம் கடந்து ஒலித்தது. இதனைக் கேட்ட திப்பு உடனடியாக கோயில் தக்காரை வரவழைத்து எச்சரித்து வரும் காலத்தில் இவ்வித சுணக்கம் கோயில் வழிபாட்டில் ஏற்படக் கூடாது என கடுமையாக அறிவுறுத்தினார்.
பீர்லதா பிணக்கு
திப்புவிற்கும் பீர்லதாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு திப்புவின் சமயபேதமற்ற அணுகுமுறைக்கு ஒரு நல்ல சான்றாகும். பீர்லதா சீரங்க பட்டணத்தில் வசித்த சிறந்த இஸ்லாமிய அறிஞர். இவருக்கு பல சீடர்கள் உண்டு. ஒருமுறை நகரத்து இந்துக்கள் நகரின் முக்கிய வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடத்திச் சென்றனர். இதனைக் கண்ட பீர்லதாவின் சீடர்கள் எள்ளி நகையாடினர். தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பீர்லதாவின் சீடர்கள் ஊர்வலத்தில் வந்தவர்களால் தாக்கப்பட்டனர் என்ற செய்தி அறிந்து சீற்றமடைந்த பீர்லதா ‘ஒரு முஸ்லிமின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லையா? எனக் கேட்டு திப்புவிற்கு விண்ணப்பித்தார்.
அதன் மீது விசாரணை செய்த திப்பு குற்றம் முழுவதும் பீர்லதாவின் சீடர்கள் மீது இருப்பதை அறிகிறார். அவ்வாறு அறிந்து அவர் செயல்பட்ட விதம் ஆட்சியாளர்கள் இன்றைக்கும் கடைப்பிடிக்கப் வேண்டிய பெருமிதச் செயலாகும். ‘நீதியின் கண்களுக்கு இந்துவும் முஸ்லிமும் ஒன்றே’ குற்றவாளிகளைத் தான் என்னால் தண்டிக்க முடியும் என திப்பு அறிவித்தது பீர்லதாவிற்கு பெரும் சினத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் மைசூரை விட்டே வெளியேறி விடுவதாக திப்புவிற்கு பீர்லதா தெரிவிக்கிறார். நீதியின்பால் கொண்ட பிடிப்பால் திப்பு சற்றும் கலங்காமல் தங்கள் விருப்பம் அதுவானால் அவ்வாறே செய்யலாம் என உடனடியாக பீர்லதாவிற்கு தெரிவித்து விட்டார்.
வடகலை -தென்கலை வழக்குத் தீர்த்தது
தமிழ்நாட்டில் காஞ்சியிலும் திருவரங்கத்திலும் வைணவத்தின் இரு பிரிவினர்களாகிய வடகலை, தென்கலை வைணவர்களுக்குள் நடந்த தற்போதும் நடக்கும் போட்டிகளை நாம் அறிவோம். மைசூரை அடுத்த மேலக்கோட்டை நாராயணசாமி கோயிலிலும் திப்புவின் காலத்தில் ஒரு வடகலை, தென்கலை மோதல் ஏற்பட்டது திப்புவின் ஒற்றர்படைத் தலைவராக விளங்கிய ஆஞ்சிசாமய்யா என்னும் சாமா அய்யங்கார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தாம் சார்ந்திருக்கும் பிரிவிற்கு ஏற்றம் தரும் வகையில் கோயில் சடங்குகளை நடத்த முற்பட்டதால் கலகம் விளைந்தது. கலகத்தின் மூலகாரணத்தை அறிந்து கொண்ட திப்பு தவறை நேர் செய்யும் வகையில் சாமா அய்யங்காரின் தலையீட்டிற்கு முன்பு நிலவிய வகையிலேயே இருபிரிவுக்கும் சம மதிப்பு அளிக்கும் வகையில் கோயில் நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்தார்.
பாதுஷா லிங்கமும் கலச முரசும்
திப்பு பல இந்து கோயில்களுக்கும் வழிபாட்டுப் பொருள்களும் நகைகளும் நிறைய வழங்கி இருக்கிறார். அவற்றுள் பாதுஷா லிங்கமும் கலச முரசும் குறிப்பிடத்தக்கவை.
மைசூர் நாட்டின் சிறந்த சிவத்தலங்களுள் ஒன்று நஞ்சன்கூடு. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் பிரசித்தமானது. இந்த கோயிலுக்கு திப்பு வழங்கிய கொடைகளில் சிறந்து விளங்குவது மரகதலிங்கம், 9 1/2 அங்குலம் உயரமுள்ள பச்சை வண்ண மரகதலிங்கம் தற்போதும் கோயிலில் பார்வதி சிலைக்கு இடப்புறத்தில் வைத்து வழிபடப்படுகிறது. திப்பு வழங்கிய இந்த மரகதலிங்கத்தை பாதுஷா லிங்கம் என்றே கோயிலில் அழைக்கிறார்கள்.
மேல்கோட்டை நரசிம்மசாமி கோயிலுக்கு 1786-ம் ஆண்டு திப்பு வழங்கிய முரசு குறிப்பிடத்தக்கது. அந்த முரசின் மீது பொறித்திருக்கும் பாரசீக மொழிவாசகம் கூர்ந்து கவனிப்பதற்குரியது. முஸ்லிம் மரபுப்படி உருவ அமைப்புகள் செய்வதில்லை. இதற்குப் பதிலாக எழுத்துகளையே மிக அழகாக ஓவியம் போன்று வரையும் கலையை வளர்த்தார்கள். இதை காலிகிராபிக் என்பார்கள். இந்த காலிகிராபிக் முறையில் திப்புவின் பட்டயம் முரசின் மீது பாரசீக எழுத்தில் எழுதப்பட்டு இருக்கும் நேர்த்தி சமய ஒருமைப்பாட்டு உணர்வைப் பிரதிபலிக்கிறது. கிளாவர் இணைத்த வட்டமாக வடிவமைத்த வாசகம் எழுதப்பட்டிருக்கும் விதம் இந்து சமயத்தில் வளமைக்குச் சின்னமாக விளங்கும் புனிதக் கலசம் போல் அமைந்துள்ளது.
குருவாயூரானுக்கு காணிக்கை
திப்புவின் மலபார் படையெடுப்பில் குருவாயூர் பிடிபட்டது குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் அர்ச்சகர்கள் திப்புவின் படை வீரர்களால் கோயிலுக்குச் சேதம் தேரலாம் என்று அஞ்சி கருவறையில் இருந்த கிருஷ்ணன் சிலையை அப்புறப்படுத்தி ஊருக்கு வெளியே மறைத்துவிட்டனர். செய்தி அறிந்த திப்பு அர்ச்சகர்களை அழைத்துத் தாமே முன்நின்று மீண்டும் சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்வித்தார். மேலும் குருவாயூர் வட்டத்தின் வரிவசூல் முழுமையும் கிருஷ்ணன் கோயிலுக்கு அளித்தார். குருவாயூரனுக்கு திப்பு அளித்த இந்த நல்கை அவரது காலம் வரை கோயிலுக்குக் கிடைத்தது.
மராட்டிய கொள்கையும் திப்புவின் கொடையும்
மூன்றாம் மைசூர் போரின்போது பரசுராம் பாவே என்பவர் தலைமையில் வந்த மராட்டிய படை தார்வாரை கைப்பற்றியது. அடுத்து சிருங்கேரி நகரை தாக்கி சிருங்கேரி மடத்தையும் கொள்ளையடித்தது. சுமார் 17 லட்சம் வராகன் மதிப்புள்ள மடத்து சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மடத்து ஆச்சாரியார் சச்சிதானந்த பாரதியும் அவரது நான்கு சீடர்களும் பாதுகாப்புக் கருதி கர்க்கலாவிற்கு தப்பிச் சென்றனர். மராட்டியர் கொள்ளையடித்த பொருள்களில் மிக முக்கியமானது தங்கத்தால் செய்யப்பட்ட சாரதாதேவி திருவுருவச் சிலையாகும். இச்சிலை மடத்தின் மூல விக்கிரமாக வழிபாடு செய்யப்பட்டு வந்தது. கி.பி 14-ஆம் நூற்றாண்டில் சிருங்கேரி மடத்தின் பதினோறாவது சங்கராச்சாரியாரால் ஸ்தாபிக்கப்பட்ட இச்சிலை மராட்டியர்களால் கவரப்பட்டது சங்கராச்சாரியாருக்குப் பெரும் வருத்தத்தை அளித்தது. மராட்டியர் செய்த இந்தக் கொடுமைக்கு மருந்தாக திப்பு மீண்டும் சிருங்கேரி மடம் செயல்பட வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்தார்.
க.இலக்குமிநாராயணன்,
காப்பாட்சியர், அரசு அருங்காட்சியம், சேலம்
