திப்பு அரியணை ஏறி ஆட்சிபுரித்த 16 ஆண்டுகளில் பெரும்பகுதியைப் போர்க்களங்களின் இடையே கழித்தார். மரணம் முத்தமிடும் வரை வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்குப் பெரும் தடைச்சுவராகி நின்று அவர்களின் ஆதிக்கக் கனவுகளை சிதறடித்தார்.
பீரங்கி முழக்கங்களுக்கு இடையிலும் தனது சமுதாயத்தின் முன்னேற்றத்தையும், சீர்திருத்தங்களையும் சிந்தித்தவர். சுயச்சார்பும், சுய மரியாதையும் அற்றவர்களால் சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியாது என்ற உண்மையைத் தன் மக்களின் மனங்களில் பதிக்க முயன்றார். தொழிலில், வணிகத்தில் வீரத்தில் தனது நாடு எவருக்கும் பின்தங்கியதாக இருக்கக் கூடாது என்பதற்காக உழைத்தார்.
விவசாயம் நாட்டின் ஜீவநாடி என்பதை உணர்ந்து பல வியத்தகு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். உழுபவனுக்கே நிலம் என்ற புரட்சி கரத் திட்டத்தை 200 ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமைத்தார். விளை நிலங்களாக்குவோருக்கு தரிசு நிலங்கள் உரிமையாக்கப்பட்டன. வரிவசூலில் இடைத்தரகர்களை ஒழித்தார். விவசாயிகளின் தேவைகளுக்கான கடனை உடனடியாக வழங்க உத்தரவிட்டார். உழைக்காத மேல் சாதியினர், நிலங்களின் உடைமையாளர்களாக இருப்பதைத் தடுத்து உழைப்பவர்க்கு நிலம் கிடைக்க விளைவிப்போர்க்கே நிலம் என உத்தரவிட்டார்.
நீர்வளம் காக்கக் குளங்களை உருவாக்கினார். புதிய அணைகள், வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டன. புதிய ஒட்டுரக மா மரங்கள் வழங்கப்பட்டன. கரும்பு, மல்பெரி போன்றவை பயிரிடுவதற்கு ஊக்கமளிக்கப்பட்டது. தமது வழக்குகளை தமக்குள்ளாகவே தீர்த்துக் கொள்ள உரிமை உடைய கிராமப் பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட்டன.
வணிகம் நாட்டின் வளர்ச்சியின் ஆதாரம் என்பதைச் சரியாக உணர்ந்தார். வணிகத்தில் அள்னியரின் கட்டுப்பாடு மேலாதிக்கத்தை அனுமதிக்க மறுத்தார். குறிப்பாக, வெள்ளையர்கள் எந்தப் பொருளையும் தனது அனுமதி இன்றி நேரடியாக வாங்குதற்கோ விற்பதற்கோ தடை விதித்தார். இதனரல் பிரிட்டிஷாரின் பெரும் வெறுப்புக்கு உள்ளானார். திப்புவின் அரசே ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தை நேரடியாகப் பொறுப்பேற்று நடத்த வணிகக் கப்பல்கள் பல உருவாக்கப்பட்டன.
கிழக்கிந்தியக் கம்பெனிக்கு பெரும் லாபம் தந்த மிளகு, ஏலக்காய் முதலியவற்றை அவர்களுக்கு விற்காமல் அரேபியாவுக்கும் விற்றார். சந்தனம், தந்தம் ஆகியவற்றைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார். கிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்ளை லாப வணிகத்திற்கும் பெரும் தடையாக நின்றார்.
நாட்டின் விளைபொருட்களை வாங்கும் முதன்மை வணிகராக திப்புவின் அரசே இருந்ததால், விவசாயிகளுக்கு நியாய விலை கிடைத்தது. அதுபோலவே இன்றைய நியாய விலைக் கடைகள் போல நாடெங்கும் விற்பனை நிலையங்களை நிறுவி இடைத்தரகர்களை அவர் ஒழித்தார்.
சுயசார்பு சுதேசியம் என்பன அன்றே அவரது தாரக மந்திரமாக இருந்தது. தரமான இரும்பைக் காய்ச்சி வடிக்கும் 5 உருக்காலைகள் நாடு முழுவதும் இயங்கின. இறைவனின் பெயர் பொறித்த வலிமையான வாள்கள் அந்தப் பட்டறைகளில் வடிக்கப்பட்டன். துப்பாக்கி, பீரங்கிகள் உருவாக்கும் நுட்பத்தை பிரெஞ்சு பொறியாளர்களைக் கொண்டு நம்மவர்க்குப் பயிற்றுவித்தார். நீர்விசையால் இயங்கும் பீரங்கி கடையும் எந்திரத்தை பிரெஞ்சு உதவியுடன் நிறுவினார்.
100 கப்பல்கள் கட்டி வணிகத்திலும், கப்பல் படையிலும் ஐரோப்பியரை மிஞ்ச விரும்பினார். அதற்கான இரும்பு, மரம், கயிறு என எதற்கும் அன்னியரைச் சார்ந்திருக்க அவர் விரும்பவில்லை.
பட்டு உற்பத்தி, அச்சிடல் காகிதம் தயாரித்தல் இவற்றை நேரடியாகக் கண்டு பயில தனது தூதுவர்களை பாரிசுக்கு அனுப்பினார். முத்து வளர்த்தல், கிரானைட் பாலிஷ், தோல்பதனிடல் போன்றவற்றில் தேர்ச்சி பெற பிறநாட்டு வல்லுனர்களை அழைத்துப் பயிற்சி தர முன்வந்தார். தம் நாட்டுக் குதினரகள், கோவேறு கழுதைகளின் தரத்தை உயர்த்த அரேபிய உயரினக் குதிரைகளை வரவழைத்தார்.
மனிதகுல விடுதலையே வரலாறு அதை உருவாக்குவதே அரசின் கடமை என நம்பினார். உலக வணிகம் எந்த சில நாடுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்து விடக்கூடாது என்ற சுதந்திர உணர்வை செய்வரீதியில் வடிவமைத்தார். அவர்களின் குறுகிய லாப வெறி வியாபாரத் தந்திரங்களுக்கு எப்போதும் பெரும் எதிரியாக நின்றார்.
நாட்டின் வணிகத் தலைமையைத் தனது அரசு ஏற்றுக் கொண்டு உற்பத்தியாளருக்குப் பாதுகாப்பிற்கும் சரியான லாபத்திற்கும் வழிவகுத்தார்.பொதுவுடைமைத் தத்துவத்தின் அரசு மேலாதிக்கம் என்ற கருத்தை வரம்பு மீறாமல் உருவாக்கினார்.
நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய ஜாதி வேறுபாடுகள், மேல்ஜாதி, கீழ்ஜாதி மோதல்கள், சமத்துவமின்மை. உழைப்புச் சுரண்டல், ஆரோக்கியமற்ற சமூக உறவுகள் போன்றவற்றிற்கு முடிவுகட்ட ‘அரசு முதலாளித்துவம்’ (State Capitalism) என்ற கருத்தாக்கத்தை வடிவமைத்தார். சமத்துவத்திற்கான 200 ஆண்டுகள் முந்தைய உன்னதமான பரிசோதனை அது என உறுதியாகக் கூறலாம்.
சோசலிசத்தை ஐரோப்பா சிந்திக்கத் துவங்கும் முன் திப்பு பல சமத்துவத் திட்டங்களை உருவாக்கினார். பெரும் தொழில் திட்டங்களை மேற்கொள்ள நிதி சேர்க்க இன்று அரசுகள் மேற்கொள்ளும் டெபாசிட் முறையை சோசலிச சாயலில் முயன்றார்.
ரூபாய் 500 வரை டெபாசிட் செய்வோர்க்கு 50% லாபப் பங்கு. 5000 முதலீடு செய்வோர்க்கு 25% அதற்கு மேல் முதலீடு செய்வோர்க்கு 12% என்ற சிந்தனை எத்தனை முற்போக்கானது? இதை வட்டி என்று குறிப்பிட விரும்பவில்லை. அவர் தொழில் முதலீட்டாளராக மக்களை பங்குபெறச் செய்து லாபத்தின் பங்கை அவர்களுக்கு வழங்கினார். இதிலும் எந்த நிர்பந்தமும் இல்லை. திரும்பப் பெற விரும்புவோர்க்கு முதலும் லாபமும் உடனடியாகத் திரும்பத் தரப்பட்டன.
மனிதர்களை ஒற்றுமைப்படுத்தி இணைப்பதே அரசியல் என்பது திப்புவின் கருத்து. மதத்தின் பெயரால் வேற்றுமைகள் வளர்ப்பதைத் தடுத்தார். தனி நபர்களின் நிறைவான வாழ்கையே அரசுக்கு வலிமை சேர்க்கும் என்பதை உணர்ந்திருந்தார். விவசாயிகளும் தொழில் புரிவோரும் வளமுடன் வாழ் உதவினார்.
“மாற்றங்களின் போக்கே வாழ்க்கை; மரணம் ஒன்றே மாற்ற முடியாதது’ என்ற தத்துவத்தை உணர்ந்தவர். மாற்றங்களை ஆதிக்க சக்திகள் விரும்புவதில்லை. சமுதாயத்தில் வலிமை பெற்ற அவர்கள் மாற்றங்களுக்குத் தடையாகவே இருப்பர். எனவே மோதல்களும் தாமதங்களும் தவிர்க்க முடியாதன. எனினும் ஏற்றத்தாழ்வு அற்ற ஒன்றுபட்ட சமுதாயத்திற்கு வித்திட அவர் விரும்பினார்.
திப்புவின் ஆட்சியில் 12 நாணயச்சாலைகள் இருந்தன. 15 வகை நாணயங்களை வெளியிட்டார். எனினும் எதிலும் தனது பெயரைப் பொறித்துச் கொள்ளாதவர். இறைவன் ஒருவனே உமையான சுல்தான் என்பதை ஆழமாக நம்பியவர். இந்துக்களின் கடவுளரான பார்வதி, பரமசிவன் உருவம், யானை வடிவம் பதித்த நாணயங்களை வெளியிட்டார். தமது நாணங்களில் இஸ்லாமியத் துறவிகள், நட்சத்திரங்களின் பெயர்களைப் பொறித்தார்.
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய நாள்காட்டி 11 நாட்கள் குறைந்தது என்பதால் சூரியனை அடிப்படையாக கொண்ட இந்துக்களின் காலண்டர் முறைக்குத் துணிவுடன் மாற்றினார். நபிகள் நாயகம் மெக்காவை விட்டு வெளியேறிய நாளிலிருந்து துவங்கும் ஹிஜ்ரா ஆண்டுக்குப் பதில் நாயகர் பிறந்த ஆண்டில் துவங்கும் மௌளுதி ஆண்டு முறையை அமலாக்கினார்.
மது காய்ச்சுவதையும், விற்பதையும் முற்றாகத் தடை செய்தார். புகையிலையைப் பக்குவப்படுத்த சாராயம் கலப்பதற்கு பதில் சர்க்கரைப் பாகு கலக்கும் முறையைப் புகுத்தினார். மஞ்சளில் மாட்டுச்சாணம் கலந்து பக்குவப்படுத்துவதைத் தடுத்தார். ஆடம்பரச் செலவுகளைத் தடை செய்தார்.
திருமணத்திற்கு ஒருவரின் வருவாயில் 1% மட்டுமே செலவு செய்ய வேண்டும் என வகுத்தார்.
ஒரு விவசாயியிடம் விலை தராமல் காய்கறிகளைப் பெற்றதற்காகத் தமது மகளையே தண்டித்தார். அவரது அமைச்சர் பூர்ணய்யா பிராமணர் என்பதால் துரோகம் செய்யக் கூடும் எனச் சிலர் எச்சரித்த போது, எந்த ஒரு குறைக்காகவும் முழுச் சமூகத்தையும் நிந்திக்கக் கூடாது என்ற திருமறை வாசகத்தைக் கட்டிக்காட்டிப் புறக்கணிததார்.
திண்டுக்கல் கோட்டையைப் பின்புறமிருந்து தாக்கலாம் என்ற போது அங்கு ஓர் இந்துக் கோவில் இருந்ததால் அதை ஏற்க மறுத்தார்.
உருது, பாரசீகம், அரபி, கன்னடம், ஆங்கிலம் எனப் பல மொழிகள் அறிந்தவர். அவரது நூலகத்தில் 2000 கையெழுத்துப் பிரதிகளைச் சேர்த்து வைத்திருந்தார். 5 நூல்கள் எழுதப்பட்டன. ஔரங்கசீப்பின் கரங்களால் எழுதப்பட்ட விலை மதிப்பற்ற திருக்குரான் அவரது நூலகத்தில் பாதுகாக்கப்பட்டது.
தமது காலத்தை விஞ்சிய புரட்சிகரமான சீர்திருத்தச் சிந்தனையாளராக அவர் திகழ்ந்தார். சிறந்த மனிதர்களை உருவாக்கினாலே சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று நம்பி அதற்காகப் பாடுபட்டார். அறிவு, ஆவல், உணர்வு, உழைப்பு யாவும் நிறைந்த இந்திய சமுதாயத்தில் மறுமலர்ச்சிச் சிந்தனையாளராக திப்பு விளங்கினார்.
மன்னனாக ஆண்ட போதும் தன்னை ‘குடிமகன் திப்பு’ (Citizen Tipu) என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்ட சமத்துவவாதியாகத் திகழ்ந்தார்.
இந்திய அரசர்களின் ஒற்றுமை ஒத்துழைப்புடன் இந்தியாவை அடிமைச்சங்கிலிக்கு உட்படாது காக்க மரணமடையும் வரை முயன்ற ஒற்றுமையாளர் திப்பு.
திப்புவின் மரணத்தின் பின் இந்தியாவின் 150 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆதிக்கமும் சுரண்டலும் நிறுவப்பட்டன.
உன்னதமானவர்கள் துன்புற்று தோல்வி அடைவதும் அர்ப்பர்கள் அதிகாரம் பெற்று உயர்வதும் சரித்திரத்தில் சாதாரணமாக காணப்படுவது தானே!
முனைவர் ஷேக் அலி
தலைவர், சுல்தான் ஷஹீத் அறக்கட்டளை, மைசூர்.
மொழியாக்கம்: A.R. அருண், கோவை.
(விடுதலைப் போரின் முன்னோடி’ என்ற புத்தகத்தில் இருந்து இக்கட்டுரை எடுக்கப்பட்டது)
