ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்தில் இந்த ஓலைப்பட்டயம் உள்ளது.
கொங்கு நாட்டு விசயமங்கலப் பகுதியில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் இடங்கை வலங்கைப் பிரிவுகளாக இயங்கி வந்துள்ளனர். செங்குந்த முதலியார், படையாட்சிக் கவுண்டர், ஆசாரிகள் ஆகிய பஞ்சகம்மாளர், நகரத்தார், பள்ளர். மாதாரிகள் ஆகியோர் இடங்கைச் சாதியாகவும், கவரைச் செட்டிகள், தேவாங்கர், சாணார் ஆகியோர் வலங்கைச் சாதியாகவும் தம்மை அழைத்துக் கொண்டனர்.
விசய மங்கலம் மாரியம்மன் திருவிழாவில் இடங்கைக்குரிய சில சிறப்புக்களை வலங்கையார் அணிந்து கொண்டனர். இடங்கையார் ஆட்சேபம் தெரிவிக்க ஒரு வருடம் இந்தத் தகராறு நீடித்தது. அங்கு வந்த அசரத் திப்பு சுல்தானின் அந்தியூர் திவான் கிரிமிரே சாயபு பாட்சாவிடம் முறையிட அவர் ‘பூர்வம் தீர்ந்த பட்டயங்கள் வாங்கிக் கொண்டு ஆதாரங்களுடன் அவர்களைத் திருப்பூருக்கு வரச் சொல்லுகிறார்.
திருப்பூரில் விசாரித்தபின் தவறாக வழக்குத் தொடுத்த வலங்கையார்க்கு 2400 பொன் அபராதம் விதித்து வலங்கை, டங்கையார்க்குப் பூர்வீகம் முதல் என்னென்ன உரிமைகள் உண்டு என்று நிர்ணயம் செய்கிறார். வெற்றி பெற்ற இடங்கையார் வெற்றிக் காணிக்கையாக 1500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் உத்தர விடுகிறார். இந்த விசாரணை 5.2.1797இல் நடைபெற்றுள்ளது.
திப்புவின் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டுக் கிராமங்களில் அமுலுதார், சேனபாகம், சிரஸ்தார் ஆகிய மூன்று அதிகாரிகள் இருந்தனர். அமுலுதார் பெரும்பாலும் இசுலாமியராகவே இருந்தனர். மற்றவர் பெரும்பாலும் அந்தணராக இருந்தனர். விசயமங்கலம், அறச்சலூர், துடுப்பதி, ஊத்துக்குளி அதிகாரிகள் பெயர்கள் குறிக்கப் பெறுகின்றன. திப்புவின் நிருவாகம் பற்றி அறிய இப்பட்டயம் மிகவும் உதவுகிறது.
இடங்கையர்க்குச் செங்குந்தர் தலைமை தாங்கியதால் இந்த ஓலைப்பட்டயம் செங்குந்தர் வெற்றிப் பட்டயம் என அழைக்கப்படுகிறது. பல ஊர்க் கவுண்டர்கள் முன்னிலையில்
இவ்வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தானின் நீதி விசாரணை முறைக்கு இந்தப் பட்டயம் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
மூலம்
ஸ்ரீ சாலியவாகன சகார்த்தம் 1718க்கு மேல் கலியுக சகார்த்தம் 4897 க்கு மேல் செல்லாநின்ற நழ வருஷ தை மாதம் 27ஆம் தேதி நாயற்றுக்கிளமையும் அவிட்ட நச்சேத்திரம் பரிநாம யோகமும் வாலவாகரணமும் யிப்படியாகக் கொற்ற சுபதினத்தில்
ஸ்ரீமது றாசாதிராசன் றாசமாத்தாண்டன் றாசகெம்பீரன் பிரவுளுறாயர் பிரதாபறாயர்நற்பதிறாயர் நரசிங்கறாயர் தேவப்பறாயர்வுடையார் வீரசமந்தராயர் சிக்கிந்ததேவருடையர் கிஷ்ட்டினறாயர்வுடையார் இவர்கள் முதலான அநேக றாயர் பட்டங் காணங்கர் மயிசூர்ச்சமஷ்த்தானம் உபைய காவேரி மத்தஷ்ஷமான சீரங்கப்பட்டணத்தில் ரற்றின சிம்மாசனரூடராய் பிருதுவிராச்சியம் மத்திசம் பண்ணிக் கொண்டிருக்கும்போது, சாமராயர்வுடையார்
யிவர்கள் காரியத்திற்குக் கருத்தராயிய அசுரது நவாப்பு அயிதரலிக்கான் சாயிவு அவர்கள் குமார நவாப் அசறது டீப்புச் சுலுத்தான் பாச்சா சாயபு அவர்கள்கு றாச்சியம் பரிபாலனம் பண்ணுகிறபோது யிவர்கள் காரியத்திற்கு முக்கிஷ்த்ராயியா மசூர் கச்சேரி மகாராயர் றாயேஷ்த்திரி மீரு சாயவு பாட்சா அவர்கள் விசாரணை பண்ணும்போது,
கொங்குமண்டலத்துக்குச் சேற்ந்தா அந்தியூர்க்கச்சேரி ஸ்ரீ திவான் கிரிமிரே சாயிவு பாட்சா அவர்கள், சிரஷ்த்தார் றாமறாயர் அவர்கள், அமுதலிச்சாயிவு பாட்சா அவர்கள், கொங்கு மண்டலம் குரிப்பு நாட்டில் விசையாபுரத்துக்கு அமுலுதாரர் மம்முதல்லி சாயிவு அவர்கள், சேனபாகன் அன்னயன் அவர்கள். சிரச்த்தார் வெங்கிட்டன் அவர்கள், அரச்சலூர் அமுலுதாரர் சுமானுக்கான் சாயிவு அவர்கள், செனபாக கோபால கிஷ்ட்டினய்யனவர்கள், சிரத்தார் சல்லய்யன் அவர்கள், துடுப்பூதி அமுலுதார் மீரண்சாயிபு அவர்கள், சேனபாகச் சின்னப்பன் அவர்கள், சிரஷ்த்தார் வீரறாகுவய்யன் அவர்கள், ஊத்துக்குளி அமலுதார் சாலீ சாயிபு அவர்கள், சிரஷ்த்தார் சேசகிரி அய்யர் அவர்கள், சனபாக சுப்பய்யன் அவர்கள்.
குறிப்பு நாட்டுக் கவுண்டர்களில் அந்தியூர் காழியண கவுண்டன், அனுமந்த கவுண்டன், பொன்னைய கவுண்டன், நெட்டரங்க கவுண்டன், துடுப்பூதி வாரணவாசிக் கவுண்டன், அரசப்ப கவுண்டன், நாகய்ய கவுண்டன், பொன்னய கவுண்டன், றாமய கவுண்டன். சின்னத்தம்பி கவுண்டன், றாமய கவுண்டன், ஊத்துக்குளி சறபண கவுண்டன், பெரியதம்பிக் கவுண்டன், முத்துக் கவுண்டன், செல்லப்ப கவுண்டன், திருப்பூரு பொன்னய கவுண்டன், முதலிபாளையம் முத்துக் கவுண்டன், குன்னத்தூரு சீரங்க கவுண்டன், அறியூரு முத்துவேலப்ப கவுண்டன், ஆவுடையாக் கவுண்டன், கருப்ப கவுண்டன், திங்களூரு குள்ள கவுண்டன், முட்டத்து றாம கவுண்டன், செவியூறு ஈஸ்வரமூர்த்திக் கவுண்டன் மேற்படியார்கள் முதல் இருபத்துநாலு நாட்டுக் கவுண்டர்கள் நாங்களெல்லாருங் கூடி யிடங்கயிலாகிய இருபத்திநாலு நாட்டு யிடங்கய்யாருக்கு நாங்களெல்லாருங்கூடி எளுதிக்கொடுத்த வெற்றிப்பட்டயம்.
பூந்துறைநாடு சபையில் பட்டக்காரர் தேவண கவுண்டர், வய்யாபுரிநாடு முத்துக்காளியப்ப கவுண்டர், காஞ்சி ஓடுபங்கநாடு முதலி பட்டக்கார கவுண்டர் அவர்கள். ஆருநாட்டு முதலி பட்டக்கார கவுண்டர் அவர்கள், பொன்குலுக்கி நாடு முதலி பட்டக்கார் அவர்கள், வாரக்கநாடு சமையப்பட்டக்காரக் கவுண்ட ரவர்கள், குரிப்பு நாடு சமையப்பட்டக்காரக் கவுண்டவர்கள். காங்கய நாடு சமையப்பட்டக்காரக் கவுண்டரவர்கள், கவுண்டரவர்கள்,
தேன்கரைநாடு சமையப்பட்டக்காரக் வேங்கலநாடு சமையம்பட்டக்காரக் கவுண்டரவர்கள், ஒடுவங்கம் சமையப்பட்டக்காரக் கவுண்டரவர்கள், அரையநாடு சமையம்பட்டக்கார கவுண்டவரவர்கள்,
எழுகரைநாடு சமயம்பட்டக்காரக் கவுண்டர், படையாச்சிக் நாடு படையாச்சிக் ஓடுவங்கம்
கவுண்டன். சின்னாயிக் கவுண்டன், கவுண்டன், கருப்ப கவுண்டன், காஞ்சி சமையம்பட்டக்காரர், பச்சைமுத்தாக் கவுண்டன், பூந்துறைநாடு சத்திமங்கலம் ஒடுபங்கம் முத்துக் கவுண்டன், ஆசாரிகள் சின்னத்தட்டான், திருவேங்கிடக் கொல்லன், கதித்தமல ரங்கத்தச்சன், ஆணிமுத்து ஆசாரி, பொம்மதச்சன், முத்துக்கொல்லன், நகரத்தான் தொப்பைசெட்டி, முத்தஞ்சட்டி,
வடமஞ்செட்டி, கோவிந்தசெட்டி, பொக்கிஷக் கொல்லர் வகையில் கரியநாயக்கன் குள்ள சேர்வைக்காரன் முத்துரங்கயன், வெங்கிட்டநாயக்கன், பழ்ழர் வகையில் வீரபத்திரப்பண்ணாடி, குட்டிப்பன்னாடி, யிருளப்பப்பன்னாடி, சோணப்பண்ணாடி மாதாரி வகைகள் குப்பமாதாரி, ரங்கமாதாரி, சின்னமாதாரி… மாதாரி…இவர்கள் மாதாரி… யிவர்கள் முதலாகிய இருபத்து நாலு நாட்டிலுள்ள யிடங்கையாருக்கு செங்குந்த முதலிமார் படையாச்சிக் கவுண்டர் அவர்கள் பஞ்சாளத்தார் பழ்ழர் மாதாரிகள் யிடங்கையோருகளும் வெற்றிப்பட்டையம் கொடுத்த விவரம்.
விசயமாநகரத்தில் மாரியம்மன் திருநாளிலே யிடங்கை யாருக்கும் வலங்கையாருக்கும் யித்தண்டத்தாருக்கும் தண்டம் வந்து வலங்கைக் கவரைச் செட்டியாகிறவன் இடங்கையாருக்குள்ள சிகப்பு கத்தியும் விருதும் நமக்குச் செல்லுமென்று சொல்லிக்கொண்டு யித்தண்டத்தாரும் வழக்காடி ஆறு மாதம் ஒருவருசக் காலமாய் யித்தண்டத்தாரும் சாதியும் கூட்டிக்கொண்டு வழக்காயிருந்த யிடத்தில் மகாறாயர் றாயஸ்த்திரி திவான் கிரி மீரே சாயபு அவர்கள் சீமை விசாரணைக்கு விசயமங்கலத்திற்கு வந்திருந்தயிடத்தில் வலங்கை கவரை தேசம் பெத்திசெட்டி, சேடச்செட்டி, தேவாங்கச்செட்டி, சாணார் முதலான வலங்கைச் சனமும், யிடங்கைக்குச் சேர்ந்த முதலிமார், படையாச்சிக் கவுண்டரவர்கள், ஆசாரியள் இத்தண்டத்தாரும் வந்து வழக்குச் சொன்னபடியினாலே யித்தண்டத்தாரை பூருவந் தீர்ந்த பட்டையங்கள் வாங்கிக் கொண்டு திருப்பூருக்கு வரச்சொல்லிப் போட்டுப் போனபடியினாலே அதே மேரைக்கு வித்தண்டத்தாரும்
திருப்பூருக்கு வந்து பட்டையங்கள் வாசித்துப் பார்த்தயிடத்தில் யிடங்கையார் பட்டையத்தில் பூருவம் காஞ்சிபுரத்தில் தீர்த்த பிரகாரத்துக்கு கத்தியும் பஞ்சவர்ண விருதும் அத்தநாரிக் குஞ்சமும் பகல்த் தீவட்டியும் பஞ்சவர்ணப் பாவாடையும் தெருமேல் மிரவணையும் அன்னமேல் மிரவணையும் குதிரைமேல் மிரவணையும் பல்லக்கின்மேல் மிரவணையும் செல்லுமென்று யிருந்தது.
வலங்கைக் கவரைச்செட்டியள் கொண்டுவந்த பட்டையத்தில் வலங்கை சனத்துக்கு வெள்ளைக்குடை வெள்ளை வெண்சாமரம் வெள்ளைவெட்டுப் பாவாடையும் வலங்கைச் சனத்துக்குச் செல்லுமென்று யிருந்தது. வலங்கைய்யர் கொண்டுவந்த பட்டையத்தில் யிடங்கையார்க்குச் செல்லும் விருது பஞ்சவர்ண விருதும் பஞ்சவர்ணக் குடையும் பகல்த்தீவட்டியும் கவரைச்செட்டி கொண்டு வந்த பட்டையத்திலே யிருந்தபடியாகவே பஞ்சாயத்தாரு… செட்டி வாலிசெட்டி வீரிசெட்டி முதலான பலபட்டறையார் முன்பாகத் தீர்ந்து வலங்கையான்… கொண்டு வந்த பட்டையத்திலே யிடங்கையாருக்குச் சகல விருதும் செல்லுமென்றுயிருக்கிறபோது நீ யில்லாது குமார்க்கம் சண்டை பண்ணிக்கொண்டு யிருக்கக் காரணமென்னவென்று வலங்கைக் கவரைத் தேசம் பெத்திசெட்டியைப் பிடித்து அங்கை செய்து விலங்குபோட்டு அரமனைக்கு ரண்டாயிரத்து நானூறு பொன்னு அவுதாரம் வாங்கி வச்சார்கள். யிடங்கையார் கிட்ட வெற்றிக் காணிக்கு ஆயிரத்தி அயினூறு ரூபா வாங்கி வச்சார்கள். வெற்றிப் பட்டையமுங் குடுத்தார்கள். மிரவணையும் பண்ணி வச்சார்கள். இதெ வெற்றிப்பட்டையமாக அனைவரும் கூடி எழுதிக் கொடுத்த வெற்றிப் பட்டையம். இதெ வெற்றிப்பட்டையமாகக் கட்டிக் கொள்ளவும்.
எழுதினவர் விசயாபுரிக்கெடியில் சிரஷ்த்தார் வெங்கிட்டய்யன் அவர்கள் எழுதினது. கமாச்சியம்மன் துணை. அந்தியூர்க்கச்சேரி ராஜஸ்ரீ திவான் கிரிமீரே சாயிபு அவர்கள், கச்சேரி சிரஷ்த்தார் இராமறயர் அவர்கள், அமுதல்லிக்கான் சாயிபு அவர்கள், விசயாபுரித்துக்கிடியில் அமலுதாரர் மம்முதல்லி சாயபு அவர்கள், சேணபாக அன்னய்யன் அவர்கள், சிரஷ்த்தார் வெங்கிட்டய்யன் அவர்கள், அரச்சலூரு அமுலுதாரர் ராயசம் சுபானு கான் சாயபு அவர்கள், சிரஷ்த்தார் கல்லய்யன் அவர்கள், சேனபாகக் கோபாலகிஷ்ட்டப்பயன் அவர்கள். துடுப்பூதி அமுலுதாரர் மீரான் சாயிபு அவர்கள், ஊத்துக்குளி அமுலுதாரர் சாலீ சாயபு அவர்கள், சிரஷ்த்தார் சேஷகிரி அய்யன் அவர்கள், சேனபாக சுப்பய்யன் அவர்கள், குரிப்புநாட்டுக் கவுண்டர்கள் அனுமந்த கவுண்டன், பொன்னைய கவுண்டன், அரசப்பக் கவுண்டன். குப்பண கவுண்டன், பட்டக்காரக் கவுண்டன், நாகப்பக் கவுண்டன்.பொன்னைய கவுண்டன், றாமைய கவுண்டன், துடுப்பூதி வாரணவாசிக் கவுண்டன், சின்னத்தம்பிக் கவுண்டன், ராமைய கவுண்டன், ஊத்துக்குளி சரபண கவுண்டன்
பெரியதம்பிக் கவுண்டன், முத்துக் கவுண்டன், செல்லைய கவுண்டன்.திருப்பூரு பொன்னைய கவுண்டன், முதலிபாளையம் முத்துக் கவுண்டன், அந்தியூர் காளியண கவுண்டன், குன்னத்தூரு சீரங்கக் கவுண்டன்… கவுண்டன், ஆதியூரு முத்துவேலப்பக் கவுண்டன், ஆவுடையாக் கவுண்டன், கருப்ப கவுண்டன், திங்களூரு குள்ள கவுண்டன், செவியூரு ஈஸ்வரமூர்த்திக் கவுண்டன் இவர்கள் முதலாய் இருபத்தி நாலு நாட்டுக் கவுண்டர்கள் கையொப்பம் இந்தப் பட்டையத்தை யாதாமொருவர் இல்லைப் பொய்யென்று சொன்னவர்
கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலே போகவும், தெய்வ தத்துவாராதி திருவிழக்கதையை நிந்தனை பண்ணின தோசத்திலே போகவும், மாதா பிதாவுக்கு வஞ்சகம் பண்ணின தோஷத்திலே போகவும். காமாச்சியம்மன் துணை உ.
கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள். முனைவர் செ.இராசு. தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு
