மைசூர் உடையார்களின் படையில் நான்கு தலைமுறையாகப் பணியாற்றியது திப்புவின் குடும்பம். ஷாபாநாயக், பத்தேநாயக், ஐதர்நாயக் ஆகியோர் மைசூர்ப்படையில் பணியாற்றினர்.
தேவனஹள்ளிப் போரிலும் (1746) மராட்டியப் போரிலும் (1757) தம் பேராற்றலால் பெரு வெற்றிக்குக் காரணமாக இருந்த இளைய குதிரைவீரர் ஐதர்அலி மைசூர் உடையார் இம்மடி கிருஷ்ணராஜ உடையாரால் (1734-1766) அரண்மனை அத்தாணி மண்டபத்தில் பாராட்டப்பட்டு ‘பத்தே ஐதர் பகதூரி’ என்று பெரிதாகப் புகழப்பட்டார். மைசூரில் செல்வாக்குப் பெற்ற தேவராஜா, நஞ்சராஜா ஆகிய தளவாய்களின் நிர்வாகக் கோளாறு காரணமாகவும் மைசூர் அரச குடும்பத்தின் வலிமையற்ற போக்கினாலும் நாட்டு மக்கள் நலனுக்காக நிர்வாகத்தை ஏற்கவேண்டிய சூழ்நிலை ஐதர் அலிக்கு ஏற்பட்டது.
ஏறக்குறைய 1761ல் ஐதர் அலி முழு நிர்வாகத்தை மேற்கொண்டார். ஐதர் அலியும்,திப்பு சுல்தானும் 1799 வரை ஆட்சி செய்தனர். மைசூர் பரம்பரை அரச மரபினரான உடையார் மரபினரை அவர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யவில்லை. ஐதர், திப்பு ஆட்சிக்காலத்தில் (1734-1799)
1) இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் (1734-1766)
2) நஞ்சராஜ உடையார் (1766-1772)
3) ஏழாவது சாமராஜ உடையார் (1773-1776)
4) எட்டாவது சாமராஜ உடையார் (1776-1799)
ஆகிய மன்னர்களை மைசூர் வரலாறு குறிக்கிறது. 18.4.1792 அன்று எழுதப்பட்ட பட்டாலிக் கிரையப் பட்டயத்தில் “ராயஸ்ரீபெட்ட சாமராச உடைய அய்யனவர்கள் ஒபய காவேரி மத்தியரங்கமான சீரங்கப்பட்டணத்தில் ரற்றின சிம்மாசன ரூடராய் பிருத்துவிராச்சியம் பண்ணுகுற நாளையில் அவர்கள் காரியத்துக்குக் கர்த்தராயெ ஸ்ரீடீபு சுலுத்தான் சாயிபவர்கள் நாளையில்” எழுதப்பட்டதாகக் குறிக்கப்படுகிறது.
1765ஆம் ஆண்டு ஐப்பசி 2ம் நாள் எழுதப்பட்ட கோயமுத்தூர்ச் செப்பேட்டில் “மைசூர் சமஸ்தானம் சீரங்கப்பட்டணம் கிருஷ்ணராசுடையராசா ராச்சிய பரிபாலனம் பண்ணி ஆண்டருளிய னாளையில் அயிதரல்லி நவாபு பாதர் சாயபு என்ற தொடர் காணப்படுகிறது.
1799ஆம் ஆண்டு எழுதப்பட்ட பல்லடம் கஸ்பா நாரணபுரம் செப்பேட்டில் “மயிகுரு சமஸ்தானம் தளவாய் டிப்பு சுலுத்தான் பாட்சா அருளாநின்ற காலத்தில்” என்ற தொடர் காணப்பட்டது.
மதுரை நாயக்க மரபில் முதல் மன்னனான விசுவநாத நாயக்கனும் தளவாய் அரியநாத முதலியாரும் மதுரைக் கோட்டையைச் சுற்றி பார்வையிடும்போது 72 கொத்தளங்கள் கோட்டையில் இருந்ததால் அவர்கள் ஆட்சிப் பகுதியில் 72 பாளையங்களை ஏற்படுத்தி ஒவ்வொரு பாளையம் சார்பிலும் ஒரு கொத்தளத்தில் வீரர்களை நிறுத்த ஏற்பாடு செய்தனர் என்றும் மெக்கன்சியின் ஆவணங்கள் கூறுகின்றன. அவர்களில் பழைய பாளையக்காரர்களும் புதிய பாளையக்காரர்களும் இருந்தனர்.
ஐதர் அலி, திப்பு சுல்தான் அவர்கள் ஆட்சிக் காலத்தில் பாளையங்கள் நிலை என்ன என்பதைப் பல ஆவணங்கள் கூறுகின்றன. நிகரவரி வருவாயில் 10 ல் 7 பங்கு அல்லது நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திய எந்தவொரு பாளையக்காரரும் எவ்விதத் தொல்லைக்கும் ஆளாகவில்லை. ஆனால் வரி வசூலில் கண்டிப்பு இருந்தது.
போர்க்காலத்தில் போர் நடவடிக்கையால் பட்டம் இழந்த பல பாளையக்காரர்கட்கு ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆணைப்படி அவர்கள் அதிகாரிகள் பட்டம் சூட்டி பாளையக்காரர்கள் ஆக்கியுள்ளனர். தாராபுரம் துக்குடி பொருளூர் பாளையக்காரன் நல்ல பெரியாக்கவுண்டன் மெக்கன்சியின் உதவியாளர்கட்கு எழுதிக் கொடுத்த ஆவணத்தில்,
“என் தோப்பனார் தெய்வகதியான பிறகு எனக்கு அக்காலத்துக்கு மைசூர் சமஸ்தானத்துக்குத் துரையான அயிதர் அல்லிகான் சாயபு துரை அவர்கள் அரசாட்சி நாளையில் இந்தச் சீமைக்கு அதிகாரியாக வந்த பீமராவ் அவர்கள் உத்தரவுப்படிக்கு நாடனைவரும் கூடிப் பட்டமும் கட்டி. நல்ல பெரியாக் கவுண்டன்”
என்று பேரும் வணங்கப் பண்ணினார்கள்” என்று கூறியுள்ளார். (மெக்கன்சி ஆவணம் டி.. 2967)
அதேபோல் பழைய கோட்டைப் பட்டக்காரர் சிறையில் இருந்தவரை திப்புசுல்தான் அதிகாரிகள் விடுதலை செய்து பழைய கோட்டைக்கு அழைத்து வந்து பட்டம் சூட்டிப் பட்டக்காரர் ஆக்கியதாக 1807ஆம் ஆண்டு சூலை மாதம் 12ஆம் தேதி எழுதப்பட்ட பழையகோட்டை ஆவணம் கூறுகிறது.
“என்னையும் என்னைச் சேர்ந்த சனங்களையும் விடுதலை பண்ணி, நானும் என்னைச் சேர்ந்த சனங்களும் காரையூருக்கு வந்து சேர்ந்திருக்கும் நாளையிலே திப்பு சுலுத்தான் பகதூரவர்கள் காரியத்துக்கு கர்த்தராகிய சுபூர் சாயபு அவர்கள் நாளையில் நாளது வருஷம் சுபதினத்தில் நாடனைவரும் கூட்டிவந்து எனக்குப் பட்டாபிஷேகம் பண்ணி நல்ல சேனாபதிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடி என்ற பேரை வணங்கப் பண்ணினார்கள்” என்பது அந்த ஆவணமாகும் (மெக்கன்சி ஆவணம் டி.2835)
தலையநாட்டுப் பட்டக்காரர் சவுந்தர பாண்டிய வள்ளல் கவுண்டர் இறந்துவிட அவர் மகன் வள்ளல் கவுண்டருக்குத் திப்பு சுல்தானின் அலுவலர்கள் முடிசூட்டியதாக ஓர் ஆவணம் கூறுகிறது.
“ராச்சியம் பிரபுத்துவம் பண்ணப்பட்ட திப்பு சுலுத்தான் துரைத்தனத்தில் அரமனை மனுஷாள் இருந்து நாடூரு பாளையப் பட்டார் அனைவரும் வந்து பட்டமும் கட்டிவச்சு கனகசபாபதி பாண்டிய வள்ளல் எண்ணப்பட்ட பேர் வௌங்கப் பண்ணினார்கள்” (மெக்கன்சி ஆவணம் டி.3039)
திண்டுக்கல் பாளையக்காரர் குருவப்ப நாயக்கருக்கு ஐதர்அலி பல விருதுகள் கொடுத்ததை ஒரு ஆவணம் கூறுகிறது.
“அயிதரல்லிகான் பஹதூரவர்கள் மிகவும் சந்தோஷிக்க சீரங்கப் பட்டணத்திலிருந்து பச்சப் பல்லாக்கு, சிங்கமுக விருது, வெட்டுப்பாவாடை விசறப்பட்டது. 2 அவகோஜா சிக்குடுமண், பச்சக்கல், பெரிய கடுக்கள் காதிலே போடுகுறது 4, வஸ்திரங்கள் வெகுமதி அஞ்சு இதுகௌ எல்லாம் குடுத்து திண்டுக்கல் சீமை அதிகாரமும் பெத்த பறமனாவும் அனுப்பிவித்து வுங்களுக்குள்ள தண்டுகவை பவுசுதாரி அதிகாரத்துடனே கூடி சீமை அதிகாரமும் பெத்து இருக்கக் கடவதென்று காகித பத்திரங்கள் அனுப்பி வைத்தார்கள்” (மெக்கன்சி ஆவணம் 3351)
திப்பு சுல்தான் ஒரு முறை விருப்பாட்சி வந்தபோது இடையகோட்டை பாளையக்காரன் முத்து வெங்கடாத்திரி நாயக்கரை “பெத்தபிள்ளைபோல்” நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகளும் தக்க மரியாதை செய்தனர். இதனை ஆவணம் பின்வருமாறு கூறுகிறது.
“மகாராசமானிய ராசஸ்ரீ டீபு சுல்தான் நவாபு அவர்களும், பெரிய பாளையமும் வந்து விருப்பாட்சியிலே இறங்கியிருந்த முன்னிலும் அவர் பேட்டி செய்து கொண்ட முன்னுக்கு சிருது வெகுமதியும் குடுத்து நவாபு சையது சாயபு அவர்களைப் பார்த்து இந்த இடையகோட்டை குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கனை பெத்தபிள்ளை மரியாதியாயி நடப்பிவிச்சுக்கொள் என்று உத்தரவு செய்தார்கள். அந்த முன்னுக்கு சையிது சாயபு அவர்கள் குதிரையும் குடுத்து வெகுமதியும் குடுத்து அனுப்பி வச்சார்” (மெக்கன்சி ஆவணம் 2829)
இடையகோட்டை
பாளையக்காரர் குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கன் மகன் முத்துமலையாண்டி மீனாட்சி நாயக்கன் ஆட்சிக்கு வந்து இறந்தவுடன் அவனுடைய மனைவியர் வசந்தக் சுத்தூரியம்மாள், பொன்னம்மாள் அவர்கள் இருவரையும் சையது சாயபு பட்டக்காரர்கள்
ஆக்கியுள்ளார். மேற்கண்ட ஆவணம் “அவர் பெண்சாதி வசந்தக் கத்தரியம்மாள், பொன்னம்மாள் அவர் நாளையில் சையது சாயபு அவர்கள் திண்டிக்கல்லுக்குத் தருவிச்சு வெகுமதியும் செய்து பட்டக்குரிப்பும் நேமுகம்
செய்து அனுப்பிவித்தார்” என்று கூறுகிறது.
மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை 1981மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளியிடப்பட்ட “பாளையப் பட்டுக்களின் வமிசாவளி” என்ற தொகுதிகளில் அச்சாகியுள்ளன. ஐதர்அலி, திப்புசுல்தான் காலங்களில் பாளையக்காரர்கள் பட்டம் சூட்டப் பெற்றதையும் பட்டாபிஷேகம் செய்யப் பெற்றதையும் பதவிகளும் விருதுகளும் பெற்றதையும் பாளையக்காரர்களின் மனைவிமார்கள் கூட பாளைய ஆட்சி பெற்றதையும் விளக்கமாகக் கூறுகின்றன. இவை அனைத்தும் கும்பினியாட்சிக் காலத்தில் எழுதியவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலை 1761 முதல் 1799 வரை இருந்தது,
திப்பு சுல்தானின் மறைவிற்குப் பின் 1799 கும்பினியாரின் லே யே முழுக்கட்டுப்பாட்டில் கொங்கு மண்டலம் முழுவதும் வந்துவிட்டது. அப்போது பாளையக்காரர்கள் திப்பு காலத்தைவிட அதிக வரி கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சிறிது வரி பாக்கியிருந்தால்கூட பாளையங்கள் ஜப்தி செய்யப்பட்டன. ஏலம் விடப்பட்டுள்ளது. பாளையக்காரர்கள் விரட்டப்பட்டுள்ளனர். பலர் கைதானார்கள். பலர் கொல்லப்பட்டார்கள். பாளையம் ஆண்ட குறுநில மன்னர்போல வாழ்ந்தவர்கட்கு 30, 40 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. பெரும்பாலான பாளையக்காரர்கள் உயிருக்குப் பயந்து கும்பிளி அதிகாரிகள் காலில் விழுந்து கெஞ்சி வாழ்ந்துள்ளனர். இதையும் கும்பினிகால ஆவணங்களே கூறுகின்றன.
ஏறத் திம்மய்ய நாயக்கர் திப்பு ‘காலத்தில் தன் பாளையத்துக்கு 2703 பொன் வரி செலுத்தி வந்தார். கும்பினி நிர்வாகம் வந்தவுடன் வரி 6000 பொன்னாக உயர்த்தப்பட்டது. கும்பினிக் காகிதப்படி பணம் செலுத்துவதில் பாக்கி ஏற்பட்டது. ஆயர்துரை என்பவர் வந்து பாளையத்தை ஜப்தி செய்துவிட்டார். ஒரு வருடம் கழித்து ஏற திம்மய நாயக்கனுக்கு மாதம் 100 ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டது (மெக்கன்சி ஆவணம் எண் 2829)
சிஞ்சுவாடி பாளையக்காரர் சின்னப் பொம்ம நாயக்கன் 14 கிராமங்களை நிர்வாகம் செய்தவர். ஆண்டுக்கு 7004 பணம் வரி கட்டியவர். கும்பினிக்கு விரோதி என்று கூறி அவனைத் தூக்கிலிட்டு அவர் மகன் குமார பாளையக்காரர் முத்து மலையாண்டி சம்பே நாயக்கனைத் திண்டுக்கல்லில் சிறை வைத்தார்கள். கும்பினிக் கலெக்டர் காரோ துரை அவர்கள் “கடாட்சம் வைத்து” பாளையக்கார் முத்து மலையாண்டி சம்பே நாயக்கனுக்கு மாதம் 13 பணம் சம்பளம் கொடுக்க ஏற்பாடு செய்தாராம். (மெக்கன்சி ஆவணம் எண் 3130) 13 பணம் சம்பளம் பெற்ற பாளையக்காரரின் குடும்பத்தில் 15 உறுப்பினர்கள் இருந்தனர்.
நிலக்கோட்டை பாளையக்காரர் கூளப்ப நாயக்கர் “விறலிவிடு தூது” இலக்கியம் பெற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரித்த பரம்பரை. ஆண்டுதோறும் 5900 ரூபாய் வரி செலுத்தி வந்தார்கள்.
ஆயுதங்களை மலையில் ஒளித்து வைத்திருந்தார் என்ற ஒரே குற்றத்திற்காக நிலக்கோட்டை பாளையத்தை ஜப்தி செய்ய ஆர்டீசு துரை காலத்தில் “சிறாது சிப்பாய்களும் கும்பினி மனுஷாளும் வந்தனர். பாளையக்காரர் ஓடிவிட்டார். அவர் தலையைக் கொண்டு வந்தால் 1000பொன் இனாம் என்றும், அவருடைய குஞ்சு குழந்தைகளையும் மனைவியையும் கொண்டு வந்தால் 50 பொன் என்றும் அறிவித்தார்கள்.
மனைவி அகப்பட்டுக் கொண்டதால் பாளையக்காரரும் பிச்சைக்காரர் வேடத்தில் வந்து ஆர்டீசுதுரை காலில் விழுந்து கெஞ்சினார். பத்து நாள் கழித்து அவர் ஆயுதங்களைப் பறிமுதல் செய்ததால் அதற்கு 131 பொன் கொடுத்தார்கள். பின்னும் பலநாள் கழித்து மாதம் 50 ரூ சம்பளம் கொடுத்து அனுப்பினார்கள்.
பின்னர் பேரீஷ்துரை வந்தபோது கேட்டுக் கொண்டதில் (5900 பொன் கொடுத்த பாளையத்துக்கு) 11750 பொன் வரி நிர்ணய செய்து பாளையத்தைக் கொடுத்தார்கள்.
“மழை அருந்ததாயிருந்ததினாலேயும், காச்சலில் சனம் இறந்த போனதுனாலேயும், சாகுபடியில்லாமல் இப்படி நாலா விதத்திலும் வருசத்துக்கு 4000, 3000 தக்கு விழுந்தது.” அதற்காக நிலக்கோட்டை பாளையம் ஜப்தி செய்யப்பட்டது. (மெக்கன்சி ஆவணம் எண் 3161)
ரெட்டியாம்பாடி பாளையக்காரர் முத்துக்காடி தொப்ப நாயக்கர் இறந்துவிட அவர் தம்பி ராமசாமி தொப்பய்ய நாயக்கர் பாளையக்காரர் ஆனார். அண்ணன் இறந்ததற்காக இராமேசுவரம் சென்றிருந்தபோது அவர் பாளையம் கும்பினியால் ஜப்தி செய்யப்பட்டு கும்பினி மிட்டவாக்கி அதனை ஆய்க்குடி பாளையக்காரருக்கு விற்று விட்டார்கள். திரும்பி வந்த பாளையக்காரர், “கும்பினியார் தயவுகோரி” விண்ணப்பித்தார். ஒரு பயனும் இல்லை.
“என் ரெட்டயாம்பாடிக்குச் சேர்ந்த குப்பம்பாளையத்தில் குடியிருப்புக்காரனாய் ரொம்பவும் நொந்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு நானும் என்னைச் சேர்ந்த ஆண்கள் 3 பெண்கள் 6 வேலைக்காரர்கள் 4 ஆக சனம் சீவனத்துக்கு மார்க்கமில்லாமல் மிகவும் இளப்பத்துடனே மகா ராஜஸ்ரீ கும்பினியாரவர்கள் கடாட்சத்துக்குப் பாத்திரவானாக யிருக்கிறேன்”
“இப்படிக்கு ரெட்டையம்பாடி சபத்தி சமீன்தாரி றாமசுவாமி தொப்பனாயக்கர் 1816 யேப்பிரல் 30 தேதி” (மெக்கன்சி ஆவணம் 3256)
பின்னர் ரெட்டையாம்பாடி 17 கிராமங்கள் அடங்கிய பாளையத்தைக் கும்பினியார் ஏலம் விட்டார்கள். ஆய்க்குடி ஜமீன்தார் குமாரக் கொண்டம நாயக்கள் ஏலத்தில் எடுத்தார்.
கும்பினி உத்தரவுக்கு விரோதமாக நடந்தார் என்று கூறிப் பல பாளையக்காரர்களையும், அவர்கள் மக்களையும் கும்பினியார் தூக்கிலிட்டார்கள். விருப்பாட்சி பாளையக்காரர் கும்பள நாயக்கரையும் அவர் மூத்தமகன் பட்டத்துக்குரிய முத்துவேல் நாயக்கரையும் அவர்கள் பாளையப்பட்டான விருப்பாட்சியி லேயே தூக்கிலிட்டார்கள்.
“கும்பினியாரவர்களுக்கு விரோதியான தம்பாக் கவுண்ட னையும் (தீரன் சின்னமலை) லக்கனாயக்கரையும் ஆதரிச்சது போலேயு ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு ஆளனுப்பிவிச்சார் என்றும் கும்பினியார் உத்தரவுக்கு விரோதியாக நடந்தார் என்றும் ஆயாசனத்துளாலே எள் தொகப்பனாராகிய குப்பள நாயக்கரையும் அவருடனே கூட இருந்த என் தமயன் முத்துவேல் னாயக்கரையும்
துற்மதி வருஷம் கார்த்திகை மாதம் விருப்பாட்சியில் தூக்குப்போட்டு தெய்வகதியானார்கள்” (மெக்கன்சி ஆவணம் எண். 3259)
மேற்கண்ட ஆவணங்களின் மூலம் ஐதர்அலி, திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் பாளையக்காரர்கள் நிலையும், கிழக்கிந்திய கும்பெனியார் காலத்தில் பாளையக்காரர்கள் நிலையும் தெளிவாகத் தெரிகிறது. ஐதர்அலி, திப்புசுல்தான் ஆகியோர் மிக அதிக வரி வாங்கினர்; பாளையக்காரர்களைக் கொடுமைப்படுத்தினர் எனச் சிலர் எழுதியுள்ளது தவறு என்றும் தெரிகிறது.
திப்பு சுல்தானின் அதிகாரியாக மீரா சாயபு திண்டுக்கல்லில் இருந்தபோது அங்கு சர்க்கார் பள்ளிக்கூடமும், சர்க்கார் தர்ம வைத்தியசாலையும் இருந்தன. தமிழ், கிரந்தம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. அதற்காகச் சர்க்கார் சம்பள ஆட்களை நியமித்திருந்தார்கள்.
கோபால கிருஷ்ண அய்யன், 26.6.1816, (மெக்கன்சி ஆவணம் டி 3013; ஆர் 8267)
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் மின்னக்கல்லுக்கு உத்திண்டமல்ல சமுத்திரம் என்று பெயர். அங்குள்ள அக்கிரகாரத்தில் கோபால கிருஷ்ணர் கோயில் உள்ளது. அங்கு மைசூர் கன்னட பிராமணர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். திருப்பணியும் செய்துள்ளனர். அக்கோயிலுக்கு திப்பு சுல்தான் ஜோடிகை மானியமாக 575 ராஜகோபால வராகன் கொடுத்ததாக அக்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது.
(நாமக்கல்-சேலம் மாவட்டக் கல்வெட்டுக்கள்) முனைவர் செ இராசு தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்
