கோடை விடுமுறை சுற்றுலாவை குடும்பத்தினருடன் பெங்களூர் & மைசூரில் கழித்தோம்.
மைசூரில் திப்புவின் வரலாற்று நினைவுச் சின்னங்களைக் காணச் சென்றபோது ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள திப்புவின் கோடைகால அரண்மனையான ‘தரியா தவ்லத் பாக்’ (Dariya Daulat Bagh) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பட்டு ஆடை (Silk Pyjama/Dress) கண்ணில் பட்டது.
பட்டு தொழிலை மேம்படுத்த திப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை. ஆங்கிலேயர் வசப்படுத்த முனைந்த பட்டுத் தொழிலை உலக தரத்தில் மாற்றினார்.
சீனாவிலிருந்து பட்டுப் பூச்சிகளைக் கொண்டுவந்து மைசூர் பட்டுத் தொழிலுக்கு அவர் அடித்தளமிட்டார். இது அவர் ஒரு நவீனப் பொருளாதாரச் சிந்தனை கொண்ட ஆட்சியாளராகச் செயல்பட்டார் என்பதைக் காட்டுகிறது.
கோவில்களுக்கு அவர் வழங்கிய கொடைகளுக்கான சான்றுகள் இப்போதும் உள்ளன .
திப்புவின் கோட்டைக்கு மிக அருகிலேயே புகழ்பெற்ற ரங்கநாதசுவாமி கோவில் எவ்வித பாதிப்பும் இன்றி கம்பீரமாக நிற்கிறது. திப்பு இக்கோவிலுக்குப் பல கொடைகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும் வழங்கியுள்ளார்.
மைசூர் அரச குடும்பத்தின் குலதெய்வமாக வழிபடப்படும் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கும் திப்பு சுல்தான் பெரும் கொடைகளை வழங்கியுள்ளார்.
சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அவர் வழங்கிய பச்சை நிறக் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு தங்கக் பதக்கம் (Pendant) இன்றும் கோவிலின் முக்கிய ஆபரணங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் பிரெஞ்சு வீரர்களுக்காக ஒரு கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட திப்பு சுல்தான் அனுமதி அளித்தார்.
சிருங்கேரி சாரதா பீடத்தைப் போலவே, நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில், மேல்மல்கோட்டை கோவில் போன்ற கர்நாடகாவின் புகழ்பெற்ற பல இந்து ஆலயங்களுக்கு அவர் மானியங்களும், வழிபாட்டுப் பொருட்களும் வழங்கியுள்ளார்.
கேரளாவின் மலபார் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த சாதிய வர்ணாசிரமக் கொடுமைகளுக்கு எதிராக திப்பு சுல்தான் மிக முக்கியமான முற்போக்கு நடவடிக்கை எடுத்தார். ஒடுக்கப்பட்ட இந்துப் பெண்கள் தங்களது மார்பை மறைத்து மேலாடை அணிய அன்றைய சாதியக் கட்டமைப்பு தடை விதித்திருந்ததை அறிந்தார். இது ஆன்மீக அல்லது மத வழிபாட்டு மரபு சார்ந்ததல்ல, மாறாக மனிதர்களை இழிவு படுத்தும் வர்ணாசிரம அடக்குமுறை என்பதை உணர்ந்து, “மனிதப் பிறவிகளில் ஒரு பிரிவினரை இப்படி ஆடையின்றி இருக்கச் சொல்வது காட்டுமிராண்டித்தனம்” என்று சாடிய திப்பு சுல்தான், தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெண்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்தமான மேலாடைகளை அணிந்து தங்களை மறைத்துக் கொள்ள முழு உரிமை உண்டு என்று அதிரடி அரசாணை பிறப்பித்தார்.
இந்தியாவின் முதல் “அரசு வர்த்தகக் கழகத்தை” உருவாக்கி உள்நாட்டுப் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த ஓமன், பாரசீகம் (ஈரான்), துருக்கி, பெகாசு (மியான்மர்) மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் மைசூர் அரசின் வர்த்தக மையங்களையும் (Trading Factories) தூதரகங்களையும் நிறுவினார்.
மிளகு, சந்தனக்கட்டை, ஏலக்காய் போன்ற உள்நாட்டுப் பொருட்களின் ஏற்றுமதி மீது அரசு ஏகபோக உரிமையைக் கொண்டு வந்து, லாபம் நேரடியாக அரசு கஜானாவிற்கும் விவசாயிகளுக்கும் சேருமாறு செய்தார்.
ஐரோப்பாவில் நடக்கும் தொழிற்புரட்சியை உன்னிப்பாகக் கவனித்த திப்பு, மைசூரிலும் தொழில்முனைவோரை ஊக்குவித்தார்.
துப்பாக்கித் தொழிற்சாலைகள், காகித ஆலைகள், கண்ணாடி உற்பத்தி நிலையங்கள் மற்றும் சர்க்கரை ஆலைகளைத் தொடங்கினார். இதற்காகப் பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலிருந்து தொழில்நுட்பக் கலைஞர்களை வரவழைத்தார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிலச்சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். இடைத்தரகர்களின் (ஜமீன்தார்கள்) சுரண்டலை ஒழித்து, விவசாயிகளிடம் நேரடியாக வரி வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.
காவிரியின் குறுக்கே கம்பீரமாக நிற்கும் கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டப்பட்டிருக்கும் அதே இடத்தில், முதன்முதலில் ஒரு பெரிய அணையைக் கட்டத் திட்டமிட்டு, அதற்கான அடிக்கல்லை நாட்டியவர் திப்பு சுல்தான்தான். (இதற்கான கல்வெட்டு ஆதாரம் இன்றும் அங்குள்ளது).
மைசூர் ராணுவத்தை உலகத்தரத்திற்கு உயர்த்திய பெருமை இவருக்கு உண்டு. இரும்பு உருளைகளால் செய்யப்பட்ட உலகின் முதல் ராணுவ ஏவுகணைகளை (Mysorean Rockets) போர்க்களத்தில் பயன்படுத்தினார். இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டு மிரண்டுபோன ஆங்கிலேயர்கள், திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த ஏவுகணைகளை லண்டனுக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்துதான் தங்களது ‘காங்க்ரீவ் ஏவுகணை’ (Congreve Rocket) தொழில்நுட்பத்தையே உருவாக்கினர்.
அன்றைய இந்திய மன்னர்கள் மரபு வழிப் போர்க்கருவிகளையே நம்பியிருந்தபோது, பிரிட்டிஷ் படைகளையே திணறடித்த ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே தயாரிக்கும் கட்டமைப்பை உருவாக்கினார். புதிய முயற்சிகளைத் துணிச்சலுடன் நிர்வாகத்தில் புகுத்திய அவரது அந்தச் சிந்தனைதான் அவரை ஒரு நவீன ஆட்சியாளராகக் காட்டுகிறது.
இந்திய மன்னர்களில் சிலர், ஆங்கிலேயர்களுடன் சமரசம் செய்துகொண்டு தங்களின் பதவிகளையும், சொத்துகளையும் தக்கவைத்துக் கொண்டனர். ஆனால், திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களிடம் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் தன் உயிரையே போர்க்களத்தில் ஈகம் செய்தார்.
போர்க்களத்தில் வாளேந்தி நிற்பவன் வெறும் வீரன். ஆனால், நாட்டின் பொருளாதாரம், சமூக நீதி, தொழில்நுட்பக் கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையோடு, சவால்களை எதிர்கொண்டு நாட்டை வழிநடத்துபவனே ‘தீரன்’. அந்த வகையில், ராணுவ பலத்தையும் தாண்டி அவரது ஒட்டுமொத்த ஆளுமை மற்றும் நிர்வாகத் திறனின் காரணமாகவே வரலாறு அவரை ‘தீரன் திப்பு சுல்தான்’ என்று இன்றும் போற்றுகிறது.
நூ.ஜமாலுதீன்
