நாட்டின் தொழில், வணிகம் முனைவோரை அழைத்து திப்பு ஆற்றிய உரை
“நமது மக்களின் கலாச்சார, ஆன்மீக மேன்மை குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். அது அவர்களது புகழுக்கும். மேன்மைக்கும் காரணமானது. பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாகி செழுமை பெற்ற இந்த பாரம்பரியத்தை இன்றும் என்றும் எவரும் அபகரிக்க அனுமதியோம். நமது சமுதாயத்தின், அரசின், மக்கள் அமைப்புகளின் கடமை எள்ன?
அடிப்படையில் முதலாவதாக நமது மக்களுக்கு வளமான வசதிமிக்க வாழ்வை அளிக்க வேண்டும். உணவு உடை, வீடு, பிள்ளைகளுக்கான கல்வி, மகிழ்ச்சிக்கான ஓய்வு, இவற்றின் தேவை உணர்ந்து வசதிகளை உருவாக்குவது நமது கடமை. மக்களுக்குப் பொருளாதார நிறைவை உண்டாக்காமல் விட்டால், மக்கள் உரிமை, சமூகநீதி இவையெல்லாம் பொருள் அற்றதாகி விடும்.
”நமது பொருளாதார, வர்த்தகக் கொள்கைகள், வளர்ச்சியுடன்கூட உன்னதமானதாகவும், உறுதிமிக்கதாகவும் அமைய வேண்டும். பழைய உற்பத்தி முறைகளிலேயே நாம் முடங்கிப்போய் விடக் கூடாது. நமது மக்களின் திறமையையும் நமது மண்ணின் பெருமையையும் உணர்த்தும் வகையில் புதிய, புதிய துறைகளில் நாம் ஈடுபட வேண்டும். வளர்ச்சி வாய்ப்புள்ள சில துறைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.
“மைசூரில் பட்டுத் தொழில், சிறப்பாக உருவாக்க விரிவான ஆணைகள் பிறப்பித்துள்ளேன். நமது மக்களின் திறமையை மேம்படுத்துவதற்காகப் பயிற்சிகள் தர பட்டுப்பூச்சி வளர்ப்பின் வல்லுநர்களை வெளிநாட்டிலிருந்து வரவழைத்துள்ளேன். இதற்கென 18 பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மல்பெரிசெடி வளர்க்க அனைத்து உதவிகளும் வழங்கப்படும். வளர்ச்சிப் பணிகளில் நீங்கள் நேரடிக் கவனம் செலுத்த வேண்டும். பட்டு உற்பத்தியில் உலகின் முதலிடத்தை பிடிக்க வேண்டும். இதுவே எனது லட்சியம்.
“முத்து வளர்ப்பு மலபாரில் மேற்கொள்ளப்பட உள்ளது. வெளிநாடுகளிலிருந்து முத்துவளர்ப்பு வல்லுநர்கள் வர உள்ளார்கள். அவர்கள் நம்மவர்களுக்குப் பயிற்சியளிப்பதால், முத்துக்கள் பளபளப்பது போலவே செல்வமும் கொழிக்கும்! நல்ல தொழிலும்கூட. இளைஞர்களை இதில் ஈடுபட வைக்க அரசு உதவித்தொகை வழங்கும். துவக்க காலத்தில் அந்தப் பகுதி நிர்வாகங்களுக்கு இழப்பு ஏற்படுமானால் அதையும் ஈடுசெய்வோம். உங்கள் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கலாம் அல்லவா?
“நமது குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளின் தரத்தை உயர்த்துவது அவசியம். இதற்காக உயரினக் குதிரைகளை அரேபியாவிலிருந்து வரவழைத்துள்ளேன். உயர்ரக இன உற்பத்திக்கு முன் வருவோர் கட்டணமின்றி இலவசமாகப் பெறலாம். நமது பொருளாதார மேம்பாட்டிற்கான எமது சில திட்டங்கள் இவை. இந்த நல்ல திட்டங்களைக் குறித்து நீங்களும் சிந்தியுங்கள். உயர்தர உற்பத்தி, வணிகம், தரக்கட்டுப்பாடு, பொருளாதார மேம்பாட்டிற்கான உங்கள் ஆலோசனைகளுக்கு எப்போதும் எங்களிடம் முழுமையான வரவேற்புண்டு.
உங்கள் வளமும் செழிப்பும் நாட்டின் வளமும் செழிப்புமாகும். எனது லட்சியம் உங்களால் சரியாக உணரப்பட்டு நமது நாட்டின் குடிமகள் ஒவ்வொருவனும் இதனால் பயன் பெற உதவ வேண்டும்.
