ஹைதர் அலீ மற்றும் மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் ஆங்கிலேயர்களின் மதிப்புக்குரிய எதிரிகளாக இருந்தனர். அவர்கள் ஆங்கிலேயரை கடுமையாக எதிர்த்தனர்; யுத்தங்களில் தோற்கடிக்கவும் செய்தனர். மேலும் பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் அதிகாரத்தை முற்றிலும் தகர்க்கும் வலிமையையும் பெற்றுயிருந்தனர். தீர்க்கமான தேசிய கொள்கைகளையும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட தலைவராகவும் இருந்ததால் இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கியமான மனிதர்களில் ஒருவராக ஹைதர் அலீ இருகிறார்.
மற்றவர்கள் புரிந்துகொள்ளும் முன்பே கடல் படையின் வலிமையை உணர்ந்திருந்தவர் அதன் மூலம் ஆங்கிலேயரின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலையும் அறிந்திருந்தார். மேலும் பிரிட்டிஷ் நலனின் அடிப்படையிலான புதிய ஆற்றலாக. வளர்ந்திருக்கும். அவர்களை வெளியேற்றுவதற்கான கூட்டு முயற்சிகளையும் முயற்சித்தார். அவருடைய மகன் திப்பு கடற்படையை மேலும் வலுப்படுத்தினார். நெப்போலியனுக்கும் கான்ஸ்டான்டினோப்பிள் சுல்தானுக்கும் அவர் கடிதங்கள் எழுதினார்.
ஜவஹர்லால் நேரு, தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா, ஆறாவது பதிப்பு,. லண்டன் 1956 பக்கம் 272 -273
ஹைதர்அலீயையும் திப்புவையும் வீழ்த்துவது மிகவும் கடினமாக அமைந்தது. அவர்கள் ஆங்கிலேயரையும் கூட்டுப்படையையும் எதிர்த்து நின்றனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நான்கு வீரமிக்க போர்களில் நடத்தினர். நான்காவது போரில், ஆங்கிலேயரின் பீரங்கிகளால் சாதிக்க முடியாததை ஆங்கிலேயர்களின் தங்கம் சாதித்தது. அமைச்சர்கள் தங்கள் அரசருக்குத் துரோகம் இழைத்தனர்; ஆனால் திப்புவோ சரணடைய மறுத்து, தனது மண்ணை காக்க வீரத்துடன் போரிட்டு உயிர் துறந்தார் .
-Tara Chand, History of the Freedom Movement of India, revised end., Delhi, 1965, pp.226-227
இறுதித் தோல்வியால் சூழ்ந்த இருளை, திப்புவின் தனிப்பட்ட வீரத்தின் ஒளி மட்டுமே தணித்தது; இறுதியில் திப்புவைச் சூழ்ந்த அந்தப் பேரிடர் அவப்பெயரால் கறைபடவில்லை.
-N.K. Sinha, on Tipu’s last stand at Srinrangapatnam, in Haidar Ali, 3rd edn., Calcutta, 1959, p.274
இந்திய தேசிய வரலாற்ரை பகுப்பாய்வு செய்யும்பொழுது, நமது கடந்த காலத்தைப் பற்றிய புரிதலில், ஹைதர் அலீ மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் கௌரவமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளனர் என்பதை மேற்காணும் மேற்கோள்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. ஆனால் தற்போதும், சில அதிகார மட்டங்களில் கூட இதற்கு முற்றிலும் எதிரான ஒரு வலுவான வகுப்பு வாதபோக்கு காணப்படுகிறது. 1990-ல், ஹைதர் அலீ மற்றும் திப்பு சுல்தான் குறித்த ஒரு தேசியத் தொலைக்காட்சித் தொடர் வரலாறு அல்ல என ஒரு குறிப்பை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது; நமது தொலைக்காட்சி உலகில் மலிந்து கிடக்கும் பிற ‘வரலாற்று’ கற்பனைக் கதைகளுக்கு இத்தகைய மறுப்புக் குறிப்பு ஒருபோதும் இணைக்கப்பட்டதில்லை. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக திப்பு நடத்திய இறுதிப் போரின் இருநூறாவது ஆண்டு நிறைவு நாளான 1999 மே 4 அன்று, இந்திய அரசாங்கமும் அதன் அனைத்து நிறுவனங்களும் நிகழ்ச்சியை முற்றிலும் புறக்கணித்தன. திப்புவின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சிகளை எதிர்த்துப் போராட்டங்கள் கூட நடத்தப்பட்டன. காலனித்துவ ஆட்சிக்கு எதிராகத் தளராத மன உறுதியுடன் போராடிய அந்த இருவருக்கும் எதிராகத் கடுமையான விமர்சனங்கள், சுதந்திர இந்தியாவில் பரவலாகப் திட்டமிட்டு பகிரப்படுவதைக் காணும்போது, மைசூர் போர்கள் குறித்த முக்கிய ஆவணங்களை பதிவு செய்த பிரிட்டிஷ் எழுத்தாளரான லெப்டினன்ட் கர்னல் மார்க் வில்க்ஸ் (Mark Wilks) எவ்வளவு வியப்படைவார்!
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே, இந்திய வரலாற்றுப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள், வில்க்ஸ் மற்றும் இந்தியச் சிந்தனையாளர்களின் பார்வைக்கு முற்றிலும் முரணான ஒரு கண்ணோட்டதிலேயே தொடர்ந்து முன்வைக்கப்பட்டது சிந்திக்கத்தக்க ஒரு விஷயமாகும். இந்த வரலாற்றாசிரியர்கள் கூறுவது சரியா அல்லது தவறா என்பதை அவர்கள் தங்கள் கட்டுரைகளில் முன்வைக்கும் சான்றுகளின் அடிப்படையில் மதிப்பிடலாம். ஆனால், அந்த இரு ஆட்சியாளர்களின் நினைவைப் பாதுகாப்பதில் எழுத்தாளர்கள் காட்டும் மனப்பான்மையும் ஒரு சான்றாக அமைகிறது; அவை கடந்த காலத் தலைமுறையினரின் உணர்வுகளைப் பற்றி நமக்கு நிறைய விஷயங்களை உணர்த்துகிறது.
ஹைதர் அலீ
ஹைதர் அலீயின் பூர்வீகம் அல்லது ஆரம்பகால வாழ்க்கை குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. முகலாயப் பேரரசர் முகமது ஷாவின் (1719-48) ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில், கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிராவின் (Sira) முகலாயப் படைத்தளபதியான (ஃபௌஜ்தார்) தர்கா குலிகானின் கீழ் அவரது தந்தை ஃபத்ஹ் முகமது பணியாற்றினார் என்பது மட்டுமே உறுதியாக அறியப்பட்ட ஒன்றாகும். நிர்வாக ரீதியாக, மைசூர் அரசு சிராவின் (இது ‘கர்நாடக்-இ-பிஜாபுரி’ என்றும் அழைக்கப்பட்டது) பெரிய நிர்வாகப் பிரிவின் (சர்க்கார்) ஒரு பகுதியாக இருந்தது. முகலாயப் படைகள் தென்னிந்தியாவைக் கைப்பற்றியபோது, மைசூர் மன்னர் சிக்க தேவ உடையார் (இறப்பு: 1704) முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பிற்கு (1659-1707) விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தார். முகலாய அதிகாரத்திற்கு மைசூர் உட்பட்டிருந்த இந்தச் சூழல், ஹைதர் அலீயின் பணிவாழ்வு வளர்ச்சியடைந்த விதத்தை ஓரளவு விளக்குகிறது.
சுமார் 1721-22 இல் பிறந்த ஹைதர் அலீ, 1728-இல் சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஹைதர் சாஹிப் என்பவர் ஏற்கனவே மைசூர் அரசில் பணியில் சேர்ந்திருந்தார்; பின்னர், அவரது மூத்த சகோதரர் ஷாபாஸைத் தொடர்ந்து, ஹைதர் அலீயும் சுமார் 1749-இல் மைசூர் படையில் குதிரைப்படை அதிகாரியானார்.
முகலாய இராணுவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும், குறிப்பாக குதிரைப் படையுடன் தொடர்புடையவர்களையும் தங்கள் படையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மைசூர் ஆட்சியாளர்களின் பொதுவான விருப்பமே ஹைதர் அலீ மைசூர் படையில் சேருவதற்குக் காரணமாக அமைந்தது.
இந்தியத் துப்பாக்கிகள அக்காலத்தில் ‘ஃப்ளின்ட்லாக்’ (flintlock) வகையாக இல்லாமல், பெரும்பாலும் ‘மேட்ச்லாக்’ (matchlock) வகையைச் சார்ந்தவையாகவே இருந்தன. தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் குதிரைப்படையின் சிறந்த நகர்வுத் திறன் (mobility) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, குதிரைப்படை போர்களில் மிகவும் பயனுள்ள படைப்பிரிவாகக் கருதப்பட்டது.
எனவே, வேலை இழந்த முகலாயக் குதிரைப்படை வீரர்கள், புதிதாக எழுச்சி பெற்று வந்த உள்ளூர் அதிகார மையங்களிடம் வேலை தேடியது இயல்பான ஒன்றே என்பதை ஹைதர் அலீயின் வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. படையில் முகலாயர்களின் தாக்கம் வலுப்பெற்றதும், அடுத்த கட்டமாக அரசியல் அதிகாரம் அந்தப் புதிய இராணுவப் பிரிவின் பக்கம் சாய்வது மட்டுமல்லாமல், மைசூரின் அரசு அமைப்பில் முகலாயர்களின் அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளும் ஊடுருவத் தொடங்கின.
ஆனால் இது நிகழ்வதற்கு முன்பாகவே, மைசூர் மற்றொரு இராணுவ எதார்த்தத்தை எதிர்கொள்ள நேர்ந்தது: அது, நன்கு பயிற்சி பெற்ற மற்றும் ‘ஃப்ளின்ட்லாக்’ (flintlock) வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் படையினரின் மேலாதிக்கமாகும்.
பல்வேறு வகையான இந்தியப் படைகளை விட ஐரோப்பியக் காலாட்படை மேலோங்கி இருந்தது. 1747-ல் நடைபெற்ற மைலாப்பூர் (சென்னை) போரில், ஒரு சிறிய பிரெஞ்சுப் படை, ஆற்காட்டின் ஃபௌஜ்தாரான (கர்நாடக நவாப்) அன்வருதீன் கானின் முகலாயக் குதிரைப்படையை முறியடித்தது. இது தென்னிந்தியாவின் ஆதிக்கத்திற்காக இங்கிலாந்தும் பிரான்சும் போட்டியிட்ட மூன்று கர்நாடகப் போர்களின் (1763 வரை நீடித்தவை) தொடக்கக் காலமாகும்.
1748-ல் நிஜாம்-உல்-முல்க் ஆசஃப் ஜாவின் மறைவால் காலியான தக்காணத்தின் முகலாய வைஸ்ராய் பதவிக்கு (இதன் கீழ் மைசூர் பெயரளவில் இருந்தது) உரிமை கோரிய சிலருக்கு ஆதரவளித்ததன் மூலம், மைசூர் அரசு பிரெஞ்சுக்காரர்களின் தரப்பில் நின்று இரண்டாவது மற்றும் மூன்றாவது கர்நாடகப் போர்களில் ஈடுபட்டது. 1753-ல் திண்டுக்கல்லின் ஃபௌஜ்தாராகவோ அல்லது தளபதியாகவோ நியமிக்கப்பட்டுப் போர்களில் தீவிரமாகப் பங்கேற்ற ஹைதர் அலீக்கு, ஐரோப்பியப் போர் முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அவர் அவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1755-56 காலகட்டத்திலேயே, தனது பீரங்கிப் படை, ஆயுதக் கிடங்கு மற்றும் பட்டறை ஆகியவற்றை ஒழுங்கமைக்க அவர் பிரெஞ்சுக்காரர்களின் சேவையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ராஜதந்திரத் திறன்கள் மட்டுமின்றி, அவர் திரட்டிய ஆயுத வலிமையும் ஹைதர் அலீயின் விரைவான எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. முகலாயப் பாணியில் அமைக்கப்பட்ட குதிரைப்படைக்கும், துப்பாக்கி ஏந்திய காலாட்படைக்கும் இடையிலான ஒரு சிறந்த ஒருங்கிணைப்பே ஹைதர் அலீயின் எழுச்சிக்கு பெரும் காரணமாகயிருந்தது . சில தற்காலிகப் பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும், இந்த ஒருங்கிணைப்பு வெல்ல முடியாததாகத் திகழ்ந்தது. ஐயத்திற்கு இடமின்றி, காலாட்படைக்குப் பயிற்சி அளிப்பதில் ஐரோப்பிய முறைகளின் மதிப்பை உணர்ந்த முதல் முக்கியமான இந்தியத் தளபதி ஹைதர் அலீ ஆவார்;
இந்தியப் படைகளில் அரிதாகவே காணப்பட்ட ‘பிளின்ட்லாக்’ (flintlock) வகை துப்பாக்கிகளைத் தனது வீரர்களுக்கு வழங்கவும் அவர் முயன்றார். இதுவே அவரை ஒரு குறிப்பிடத்தக்க தளபதியாக மாற்றுகிறது. மைசூரில் ஹைதர் அலீ அதிகாரத்தைக் கைப்பற்றியது மிக விரைவாக நிகழ்ந்தது. அப்பகுதியின் அரசருக்கும், அவரது செல்வாக்கு மிக்க அமைச்சரும் ஹைதர் அலீயின் ஆதரவாளருமான நஞ்சராஜுக்கும் இடையே நிலவிய அதிகாரப் போட்டியில் தலையிட்ட ஹைதர் அலீ, அரசரின் பக்கம் நின்றார். பெயரளவு அதிகாரம் மட்டுமேயிருந்த நஞ்சராஜாவை அரசர் விரும்பவில்லை. நஞ்சராஜை அகற்றிவிட்டு, 1760-61 காலகட்டத்தில் மாநிலத்தின் முழு அதிகாரத்தையும் ஹைதர் அலீ கைப்பற்றினார்; இருப்பினும், அவர் அரசருக்குப் பதிலாகத் தானே அந்தப் பதவியை ஏற்க முயற்சிக்கவில்லை. அப்போதைய ஆட்சியாளர் (சிக் கிருஷ்ண ராஜா) 1766-இல் காலமானபோது, அவர் முறைப்படி பதவியில் அரசரை அமர்த்தினார்.
ராஜாவுக்கான அரசவை மற்றும் அரண்மனை சார்ந்த சடங்கு முறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டன. உண்மையில், ஹைதர் அலீ தனது அதிகாரத்திற்கான அங்கீகாரத்தை முற்றிலும் மாறுபட்ட ஒரு மூலத்திலிருந்தே—அதாவது முகலாய அரசியல் அமைப்பின் கட்டமைப்பிற்குள் அமைந்திருந்த ஒரு மூலத்திலிருந்தே—பெற முயன்றார். தக்காணத்தின் வைஸ்ராய் (ஆளுநர்) பதவிக்கு உரிமை கோரிய பசாலத் ஜங்கிடமிருந்து, 1761-ஆம் ஆண்டில் ‘ஹைதர் அலீ கான்’ என்ற பட்டத்தையும் ‘சிரா’ (Sira) பகுதியின் ‘ஃபௌஜ்தார்’ (இராணுவ மற்றும் நிர்வாக அதிகாரி) பதவியையும் ஹைதர் அலீ பெற்றார்.
இந்தப் பதவியின் மூலம், மைசூர் ராஜாவை விடத் தான் உயர்ந்தவர் என்று அவர் உரிமை கோர முடிந்தது. 1761-ல் சிராவும், அதைத் தொடர்ந்து 1763-ல் நாகர் (பெட்னூர்) எனும் முக்கிய நகரமும் ஹைதர் அலீயின் கைவசமானபோது, மேலாதிக்கத்திற்கான அந்தப் உரிமை மேலும் வலுவடைந்தது. வடக்கே மேற்கொண்ட வெற்றிகள் மற்றும் மலபார் பகுதியில் கைப்பற்றிய நிலப்பகுதிகள் ஆகியவற்றின் மூலம், மைசூர் ராஜா ஆண்ட அசல் ஆட்சிப்பகுதியை விடப் பல மடங்கு பெரிய நிலப்பரப்பைத் தான் ஆளுவதற்கான உரிமையை அவரால் கோர முடிந்தது.
உள்நாட்டிலும், ஹைதர் அலீயின் ஆட்சியானது மைசூர் அரசின் (ஏற்கனவே இருந்த) நிறுவனக் கட்டமைப்புகளையும் முகலாய நிர்வாகக் கூறுகளையும் இணைத்த ஒரு கலவையாகத் திகழ்ந்தது. விவசாய வருவாயில் அரசின் பங்கை அதிகரிக்கவும், நிர்வாகத்தை மையப்படுத்தவும் முகலாய முறைகள் பயன்படுத்தப்பட்டன. அவருக்கு முந்தைய காலத்தில், தேஷ்முக் மற்றும் பாளையக்காரர்கள் போன்ற உள்ளூர் அதிகாரிகளும், கௌடாக்கள் மற்றும் படேல்கள் போன்ற கீழ்நிலை அதிகாரிகளும் பல்வேறு உரிமைகளைக் கொண்டிருந்தனர். இதனால், விளைச்சலில் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் பங்கு மிகவும் குறைவாகவே இருந்தது.
உள்ளூர் அதிகாரிகளை ஜமீன்தார்களாகக் கருதிய ஹைதர் அலீ, அவர்களின் உரிமைகள் மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ முடியாத புனிதமானவை அல்ல என்ற முகலாயக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார். அவர்களின் இடைத்தரகர் பங்கை நீக்க விரும்பிய அவர், விவசாயிகளின் விளைச்சலின் மீது (உபரி அல்லது குத்தகைக்கு இணையான) நிலவரியை நேரடியாக விதித்து, சம்பளம் பெறும் அதிகாரிகள் மூலம் அதை வசூலித்தார். விவசாயிகளிடமிருந்து நேரடியாக வரி வசூலிக்கும் இம்முறையே, பிற்காலத்தில் மன்றோவின் ‘ரயத்வாரி’ முறைக்கு அடிப்படையாக அமைந்தது. உண்மையில், 1792-ல் திப்பு சுல்தானிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாரமஹால் மாவட்டத்தில் வருவாய் வசூலித்ததில் தனக்குக் கிடைத்த அனுபவத்தையே மன்றோ இதற்காகப் பெரிதும் பயன்படுத்திக்கொண்டார்.
இவ்வாறு பெருமளவில் அதிகரிக்கப்பட்ட நிதி வளங்களை மையப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படைகளைப் பராமரிக்கும் கடமைக்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையை தற்காலிகமாகவோ அல்லது மாற்றத்தக்க வகையிலோ வழங்கும் ‘ஜாகீர்’ எனும் முகலாய முறையை ஹைதர் அலீ முழுமையாக ஒழித்துவிடவில்லை. குதிரைப்படையைப் பராமரிப்பதும், குதிரைகளின் பராமரிப்பு நிலையைச் சரிபார்க்க அவற்றின் மீது முத்திரையிடுவதும் ஒரு ஜாகீர்தாரின் கடமையாக திப்பு சுல்தானின் ஆணை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஜாகீர்தார்கள் மூலம் படைகளைப் பராமரிக்கும் முறை அக்காலகட்டத்தில் வழக்கொழிந்து வந்தது. புதிய போர்முறைகளுக்குப் பெரிய அளவிலான நிரந்தரப் படை தேவைப்பட்டது. அத்தகைய படைக்கு நேரடியாக ஊதியம் வழங்க வேண்டியிருந்ததால், ஹைதர் அலீ வருவாயை நேரடியாக வசூலிக்க வேண்டியிருந்தது. இதனால் ஜாகீர்களை வழங்கும் அளவைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இம்முயற்சியில் அவருக்கு முகலாயர்களின் முன்னுதாரணங்களும் துணையாக இருந்தன. சிறந்த நிதி மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக, 1574-75 ஆம் ஆண்டில் அக்பர் பெருமளவில் ஜாகீர்களைத் திரும்பப் பெற்றிருந்தார். அதேபோல, பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காளத்தின் நஜிம்களும் (ஆளுநர்கள்) ஜாகீர் முறையை பெரும்பாலும் கைவிட்டிருந்தனர்.
தனது பேரரசின் பெரும்பகுதிகளில் வருவாயை நேரடியாக வசூலித்ததன் மூலம், ஹைதர் அலீ தனது ராணுவத்தை மேம்படுத்துவதிலும் விரிவுபடுத்துவதிலும் வளங்களைச் செலுத்த முடிந்தது. அந்தந்த தளபதிகளின் வளங்களுக்கு ஏற்ப வெவ்வேறு அளவிலான படைகளைக் கொண்டிருந்த பாரம்பரிய இந்திய ராணுவங்களைப் போலன்றி, ஐரோப்பிய ராணுவங்களின் படைப்பிரிவு முறையைப் பின்பற்றி, நிலையான எண்ணிக்கையிலான வீரர்கள் மற்றும் அதற்கேற்ற துப்பாக்கிகள், போக்குவரத்து வசதிகளைக் கொண்ட ‘ரிசாலா’ எனும் அமைப்பை ஹைதர் அலீ உருவாக்கினார். உதாரணமாக, ஒவ்வொரு காலாட்படை ரிசாலாவிலும் 1,000 வீரர்கள் இருந்தனர்; அதன் அதிகாரிகளை ஆட்சியாளரே நேரடியாக நியமித்தார்.
ராணுவத்தின் இந்த நவீன அமைப்புடன், ஐரோப்பிய அல்லது ஐரோப்பிய பாணியிலான மஸ்கெட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் முறையான காலாட்படைகளும் உருவாக்கப்பட்டன. 1767-ஆம் ஆண்டிற்குள், அவரிடம் 4,000 பழைய பாணி ‘மேட்ச்லாக்’ (matchlock) துப்பாக்கி வீரர்களுக்கு மாறாக, நவீன துப்பாக்கிகள் ஏந்திய 8,000 காலாட்படை வீரர்கள் இருந்தனர்; இவர்களுடன் 5,000 ‘கிரனேடியர்’ சிப்பாய்களும், மஸ்கெட் துப்பாக்கிகள் ஏந்திய 1,000 ‘டோபாஸ்’ (இந்தோ-போர்த்துகீசிய கலப்பினத்தவர்) வீரர்களும் அவரது படையில் இடம்பெற்றிருந்தனர். வெடிமருந்து மூலம் இயங்கும் ‘பான்’ ரக ராக்கெட்டுகளை (இவை பிற்காலத்தில் இங்கிலாந்தில் ‘கான் கிரீவ்’ ராக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட வழிவகுத்தன) ஏவுகணை வீசுவதில் நிபுணத்துவம் பெற்ற தென்னிந்தியப் பாணியிலான ராக்கெட் வீரர்களையும் அவர் தொடர்ந்து பணியில் அமர்த்தினார்.
தனது காலாட்படை மற்றும் தளவாடங்களை விரைவாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல, பெரிய அளவிலான காளைகள் மற்றும் வண்டிகளைக் கொண்ட போக்குவரத்து அமைப்பை உருவாக்கியதன் மூலம் உள்ளூர் அளவிலான புதுமையையும் அவர் அறிமுகப்படுத்தினார். இருப்பினும், தந்திரோபாய ரீதியான விரைவான நகர்வுகளுக்குக் குதிரைப்படை மிக முக்கியம் என்பதில் ஹைதர் அலீ உறுதியாக இருந்தார். 1767-இல் அவரிடம் 800 ‘சிறந்த முகலாயக் குதிரைகள்’ மற்றும் 12,000 பிற குதிரைப்படை வீரர்கள் இருந்தனர்.
அதே ஆண்டில், பீரங்கிப் படை மற்றும் குதிரைப்படை ஆகிய பிரிவுகளில் அவருக்குச் சேவை செய்ய 210 ஐரோப்பியர்கள் (பெரும்பாலும் பிரெஞ்சுக்காரர்கள்) இருந்தனர். ஹைதர் அலீ ஒரு கடற்படையை உருவாக்கவும் முயன்றார்; 1766-ஆம் ஆண்டிற்குள் அப்படையில் 2 பெரிய கப்பல்கள், 7 சிறிய கப்பல்கள் மற்றும் 40 ‘காலிவாட்’ ரகக் கப்பல்கள் இருந்தன. கடலில் கப்பல்களை வழிநடத்த ‘ஸ்டானெட்’ என்ற ஐரோப்பிய அதிகாரியை அவர் பணியில் அமர்த்தினார்.
இவ்வாறு, நிர்வாகத்தின் பிற துறைகளில் பாரம்பரிய இந்திய அம்சங்களைத் தக்கவைத்து மேம்படுத்திய அதே வேளையில், தனது ராணுவத்தில் முடிந்தவரை நவீனமயமாக்கலை அறிமுகப்படுத்த ஹைதர் அலீ முயன்றார். இருப்பினும், உள்ளூர் ஆட்சியமைப்புகள் மற்றும் முகலாயர்களின் நிதி மற்றும் நிர்வாக நடைமுறைகளால் வரையறுக்கப்பட்ட அரசியல் மற்றும் கருத்தியல் கட்டமைப்பிற்குள்ளேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஹைதர் அலீயின் ஆட்சியில், நவீன அடிப்படையில் தொழில்நுட்பம் மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் இடம்பெறவில்லை; அறிவியல் அல்லது அறிவொளி நோக்கிய அணுகுமுறையைப் பெறுவது என்பது பற்றிய பேச்சிற்கே இடமிருக்கவில்லை. இத்தகைய முயற்சிகள் இல்லாததால், இராணுவத்தை நவீனமயமாக்கும் செயல்முறையானது ஐரோப்பியர்களின் – குறிப்பாக பிரெஞ்சுக்காரர்களின் – இருப்பை பெரிதும் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அது குறுகிய காலத்திற்கு மட்டுமே வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்க்க முடிந்தது.
இருப்பினும், குறுகிய காலத்தில் கிடைத்த வெற்றி குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் போர் (1767-69), ஹைதர் அலீ சென்னை கோட்டைச் சுவர்களுக்கு அருகிலேயே வந்து நின்று ஒரு உடன்படிக்கையை அவர்கள் மீது திணித்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. மைசூர், மராத்தியர்கள், நிஜாம் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோரின் பெரும் கூட்டணியால் உருவான அடுத்த போர் (1780-84) நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே ஹைதர் அலீ காலமானார் (7 டிசம்பர் 1782); அப்போரில் மைசூர் விரைவில் தனித்துவிடப்பட்டாலும், முதல் போரைப் போலவே இந்தப் போரும் இரு தரப்பினரும் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளைத் திரும்ப ஒப்படைத்துக்கொள்வதன் மூலம் (மார்ச் 1784) முடிவுக்கு வந்தது.
மைசூர் ஆங்கிலேயர்களை இத்தகைய உறுதியுடன் எதிர்த்து நின்றதற்கான காரணங்களில் ஒன்று, நிச்சயமாக ஹைதர் அலீயின் ஆளுமையிலேயே அமைந்திருந்தது. ஹைதர் அலீ ஆட்சி செய்த பகுதிகளை 1800-ல் பார்வையிட்ட புக்கானன், “அவரது நீதி, ஞானம் மற்றும் மிதமான போக்கு ஆகியவற்றின் காரணமாக, அனைத்துத் தரப்பு மக்களும் ஹைதர் அலீயின் நினைவை மிகுந்த மரியாதையுடன் போற்றுகின்றனர்” என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வில்க்ஸ் சித்தரிப்பதைப் போல வெறும் ‘பேராசையோ’ அல்லது ‘மிருகதன்மையான உந்துதல்களால்’ இயங்கிய ஒரு மனிதரால், தனது குடிமக்களிடமிருந்து இத்தகைய நன்மதிப்பைப் பெற்றிருக்க முடியாது
(பேராசிரியர் இர்பான் ஹபிப் எழுதிய கட்டுரையை தழுவி எழுதப்பட்டது)
துரை அப்பாஸ்
.
