பொருளாதார ஜனநாயகம்
ஜனநாயகத்தின் நுணுக்கங்களையும், அது திறம்பட செயல்படுவதற்கான முன்நிபந்தனைகளையும் அரசியல் கோட்பாட்டாளர்களும் அரசியலமைப்புச் சட்ட வல்லுநர்களும் புரிந்துகொள்ளத் தவறியதை அண்ணல் அம்பேத்கர் விமர்சிப்பதோடு அரசியல் ஜனநாயகத்தில், சமத்துவம் என்பது ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு என்றே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எல்லா மனிதர்களும் அரசியல் ரீதியாக சமமானவர்கள், ஆனால் பெரும்பாலான அரசியலமைப்பு வல்லுநர்களும் அரசியல் விஞ்ஞானிகளும், மனிதர்கள் பொருளாதார ரீதியாக சமமானவர்கள் என்பதைப் பற்றி அரிதாகவே பேசுகிறார்கள்.
இந்தப் புரிதல் முழுமையற்றது என்று கூறிய அவர், புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவில் அதைச் சரிசெய்யுமாறு பரிந்துரைத்தார். ஆகவே அரசு சோசலிசம் என்ற கருத்தாக்கத்தை முதன்மைப் படுத்தி முன்மொழிந்தார். இந்தியாவில் பொருளாதார ரீதியாக அனைவருக்கும் ஜனநாயகம் இருப்பதை உறுதி செய்வதற்காக, அம்பேத்கர் தனது ‘அரசுகளும் சிறுபான்மையினரும்’ (1947) என்ற நூலில் அரசு சோசலிசம் என்ற கருத்தை பிரதானமாக முன்மொழிந்தார்.
அரச சோசியலிசம் என்பது ஒரு சோசலிசப் பொருளாதார கட்டமைப்பாகும். இதில் முக்கியத் தொழில்கள் அரசால் சொந்தமாகக் நடத்தப்படும். அந்த அரச சோசியலிசம் என்பது அரசியல் சட்டத்தால் சமூகத்தில் நிறுவப்படும். இந்த நடைமுறை பிற்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பணக்காரர்களின் தலையீட்டால், அரச சோசியலிசம் என்ற கருத்தாக்கம் எதிர்காலத்தில் சிக்கல்கலை சந்திக்கும் என்பதை அவரால் முன்கூட்டியே உணர முடிந்தது. ஆகவே தன் கருத்தை நிரந்தரமாக நிறுவனப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அது சமூகத்தின் அரசியல் கட்டமைப்பின் வடிவத்தை வகுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, பொருளாதாரக் கட்டமைப்பைத் தொடாமல் விட்டுவிடும். தற்போதைய அரசியலமைப்புககளின் இயலாமையை, விலகலை விமர்சித்து பொருளாதார ஜனநாயகத்தின் திறவுகோளாக அரச சோசியலிசதை அரசமைப்பின் நிழலிலேயே நிலைநிறுத்த விரும்பினார்.
பொருளாதார ஜனநாயகம் எப்படி இருக்கும்?
அம்பேத்கரைப் பொறுத்தவரை, அது ஒடுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கும் வர்க்கங்கள் இல்லாத வர்க்க சமத்துவத்தை நிலைநிறுத்தும் ஒரு சமூகமாக இருக்கும். செல்வந்தர்கள் ஜனநாயக நிறுவனங்களை எளிதில் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, தங்களுக்குச் சாதகமாக அவற்றை வளைக்கக்கூடும் என்பதை அம்பேத்கர் நன்கு அறிந்திருந்தார். நீண்ட காலப் போக்கில், இது ஏழைகளிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும்.
எனவே ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையே அதிகரித்து வரும் ஏற்றத் தாழ்வுகளையும், சமூக ஒழுங்கிற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் கட்டுப்படுத்தும் விதமாக, வகுப்புவாதங்களை ஊக்குவிக்கும் அமைப்புமுறைகளை ஒழிக்க அவர் விரும்பினார். ஆகவே ‘வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிறுவுவதன் மூலம் மட்டுமே இதைச் சரி செய்ய முடியும்’. அரசியல் ஜனநாயகத்திற்கு பொருளாதார ஜனநாயகத்தின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்று சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதாகும். பணக்காரர்களுக்குச் சாதகமான கொள்கைகளை விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரங்களின் போது பணக்காரர்களால் நிதியளிக்க முடியும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே வலுவான ஓர் தொழிலாளர் கட்சியை முன்மொழிந்தார்
தொழிலாளர் கட்சி
பொருளாதார சமத்துவத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த அண்ணல் அம்பேத்கர், ஒரு வலுவான தொழிலாளர் கட்சியைப் பரிந்துரைத்ததோடு தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளின் வடிவில் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டால் மட்டுமே ஒரு வலுவான தொழிலாளர் கட்சி சாத்தியமாகும் என்று நம்பினார். ‘தங்களுக்குப் பின்னால் ஆதரவளிக்க ஒரு தொழிலாளர் அரசாங்கம் இருந்தால், தொழிற்சங்கங்கள் இன்னும் அதிக செயல்திறன் கொண்டவையாகத் திகழும். அரசாங்கத்தைக் கைப்பற்றுவதே தொழிலாளர் வர்க்கத்தின் இலக்காக இருக்கவேண்டும்.
அந்த இலக்கு காங்கிரஸ் மற்றும் இந்து மகாசபை ஆகியவற்றின் தன்னிச்சையான போக்குகளையும், இந்திய சமூகம் குறித்த அவர்களின் தான் தோன்றித் தனமான தமது கண்ணோட்டங்களையும் கட்டுப்படுத்தவும் உதவும். “மேலும் இது தொழிலாளர்களை தேசியவாதம் என்ற பெயரில ஏமாற்றப்படுவதிலிருந்து தொழிலாளர்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள முடியும்”. ஒருவேளை அந்த தொழிலாளர் கட்சி ஒரு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தால் பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூகத்தில் வளர்வதைக் கட்டுப்படுத்த முனையும்.
சமூக ஜனநாயகம்
சமூகம் ஜனநாயகமாக இருந்தாலன்றி, ஒரு ஜனநாயக அரசாங்கம் இருக்க முடியாது. ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பு, பொருளாதார ஜனநாயகம் என்ற நோக்கத்தை மட்டும் கொண்டிருக்காமல் சமூக ஜனநாயகத்திலும் வேரூன்றியிருக்கும் போதுதான் வெற்றிகரமாகச் இயங்க முடியும் என்ற உண்மையை அம்பேத்கர் புரிந்து தெளிவு படுத்தினார். இங்கே நடக்கும் தவறு என்னவென்றால், அரசாங்கம் என்பது சமூகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட மற்றும் தனித்த ஒன்று என்று நம்புவதுதான்.
உண்மையில் சட்டமியற்றும் அமைப்பின் உத்தரவுகளைச் செயல்படுத்தும் முகவர்களாக, நடுநிலையாளர்களாக அரசு அதிகாரிகள், மன்ற உறுப்பினர்கள் செயல்படுகிறார்களா என்பதையும் அம்பேத்கர் கேள்விக்குள்ளாக்கினார். “ஜனநாயக அரசாங்க முறை நற்பலன்களைத் தருமா என்பது, அச்சமூகத்தை உருவாக்கப் பாடுபடும் ஒவ்வொரு தனிநபரின் மனப்பான்மையைப் பொறுத்தே அமையும்”. பல ஜனநாயக மாதிரிகள் தனிநபர்கள் நடுநிலையானவர்கள் என்றும், அதிகாரத்துவ மனப்பான்மையுடன் சிந்திப்பவர்கள் என்றும் வெறும் அனுமானங்களை மட்டுமே கொண்டிருப்பதால், அம்பேத்கரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது (அம்பேத்கர், 1922). தனிநபர்களிடம் காணப்படும் வர்க்கச் சார்புநிலை ஓர் ஜனநாயக அரசாங்கத்திற்குத் தீங்கானது விரோதமானது என்று அம்பேத்கர் கருதினார்.
பாகுபாடு என்பது பொதுவாக ஒரு தனிநபரின் நடத்தையாகவே பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப அந்தத் தனிநபர் மீது தண்டனை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. ஆனால், ஒட்டுமொத்த சமூகமே பாகுபாட்டைக் கடைப்பிடித்தால் அல்லது பாகுபாட்டையே ஒரு விழுமியமாக ஏற்றுக்கொண்டால் அந்த சமூகம் என்னவாகும் என்று அம்பேத்கர் கேள்வி எழுப்புகிறார். அத்தகைய சூழலில் ஜனநாயகம் ஒருபோதும் செழிக்க முடியாது; ஏனெனில், சமூகத்தின் விழுமியங்கள் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு முரணானவையாக அமைந்துவிடுகின்றன. “இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில், பாகுபாடு என்பது மிகப் பெரிய அளவிலும் இடைவிடாத வகையிலும் கடைப்பிடிக்கப்படக்கூடிய சூழல் நிலவும்போது, அங்கு அடிப்படை உரிமைகளுக்கு எந்த அர்த்தமும் இருப்பதில்லை.”
இவ்வகையில், இந்து சமூகம் பொருளாதார மற்றும் சமூகத் தளங்கள் இரண்டிலும் சமத்துவமின்மையை முக்கியமாகக் கருதுகிறது. ஒரு உண்மையான ஜனநாயகம் நிறைந்த சமூகம் என்பது பொது மனசாட்சியையும் தார்மீக ஒழுங்கையும் கொண்ட சமூகமாகயிருக்கும் என்பது அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்த சமூக ஜனநாயகத்தின் இறுதி மற்றும் மிக முக்கியமான அம்சமாகும். “சமூகத்தில் தார்மீக ஒழுங்கு மிக ஆழமாக செயல்படுவது ஜனநாயகத்திற்கு அவசியமானது என்று நான் கருதுகிறேன்” .
இந்த அறநெறியானது பொது மனசாட்சியின் ஒரு பகுதியாகவும், அதைவிட மிக ஆழமான மற்றும் முதிர்ச்சியான, கருணை மற்றும் மாந்த நேய சமூகத்தில் பிணைப்பின் மூலம் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்ட, மேம்பட்வர்களாக ஒவ்வருவரும் சமூகத்தில் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என அம்பேத்கர் விரும்புவதை நாம் காண முடிகிறது. இந்து சமூகத்தில் ‘பொது மனசாட்சி’ என்று ஏதும் இல்லை என்றும், அதனால் பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்தையே அது அதிகம் கொண்டிருக்கிறது என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்..
இந்து சமூக ஒழுங்கு
இந்து சமூகத்தின் மிகவும் வெறுக்கத்தக்க அம்சங்களில் ஒன்று சாதி அமைப்பு. சாதிகள் என்பவை ஒன்றுக்கொன்று படிநிலையாக அமைக்கப்பட்ட அகமண அலகுகள் ஆகும். அது வெறுப்பு வாதத்தையும் பாகுபாட்டையும் ஊக்குவிக்கும் தரவரிசையை அளவுகோலாகவும், அவமதிப்பின் அளவுகோலாகவும் உள்ளது. சாதி அமைப்பின் இந்த அம்சம் சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதனிடமும் மிகவும் கேடு விளைவிக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளது. அது மனப்பூர்வமான, உதவிகரமான பரஸ்பரங்களை பகிரும் சமூக கூட்டுறவை சிதைக்கிறது.
ஆகவே இதை ‘படிநிலை ஏற்றத்தாழ்வு’ என்று அம்பத்கர் விளக்குகிறார். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர் பணக்காரர் மற்றும் ஏழை அல்லது உயர்ந்தவர் மற்றும் தாழ்ந்தவர் போன்ற இருமை எதிர்நிலைகளை ஏற்க மறுத்தார். ‘[படிநிலை ஏற்றத்தாழ்வு] அமைப்பு… சாதி அமைப்பின் ஆன்மாவாகும்’ (அம்பேத்கர், 1956). சாதி நடைமுறைகள் காரணமாக, ஒருவர் தனது சொந்த விருப்பமான தொழிலைச் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தியாவில் ஏன் ஜனநாயகம் வளரவில்லை என்று சிந்தித்தால் இதற்கான விடை மிகவும் எளிமையானது. இந்து மதம் சகோதரத்துவத்தைக் கற்றுக்கொடுப்பதில்லை. மாறாக, அது சமூகத்தை வர்க்கங்கள் அல்லது வர்ணங்களாகப் பிரிப்பதையே போதிக்கிறது. இந்து சமூக அமைப்பு தற்செயலாக ஜனநாயகத்தன்மை அற்றதாக மாறவில்லை. அது ஜனநாயகத்தன்மை அற்றதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது வார்த்தைகளில்: ‘சமூகப் படிநிலையாக்கம் என்பது தனிநபரின் வளர்ச்சியைத் தடுப்பதாகும், சமூக வளர்ச்சியை திட்டமிட்டு தடுத்து ஜனநாயகத்தை வேண்டுமென்றே மறுப்பதாகும்’. ஆகவே வர்க்க அமைப்பைக் காட்டிலும் சாதி அமைப்பு மிகவும் நுட்பமானது, மோசமானது என்று விளக்குகிறார் ,
தீண்டாமை
தீண்டாமை என்பது இந்து மதத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும். இந்துக்கள் தீண்டாமைப் பழக்கத்தின் மூலம் தங்கள் மத அடையாளத்திற்குப் பொருள் தருகிறார்கள். ‘இந்தியா முழுவதிலும் உள்ள தீண்டத்தகாதவர்கள், இந்துக்கள் தங்கள் மதத்தின் பெயரால் அவர்கள் மீது சுமத்தியுள்ள அவமானங்களுக்கும் அநீதிகளுக்கும் எதிராகப் போராடுகிறார்கள்’ (அம்பேத்கர், 1947). தீண்டாமைப் பழக்கம் என்பது வெறும் சடங்கு ரீதியானது மட்டுமல்ல; அது இந்துக்கள் மற்றும் தலித்துகள் ஆகிய இருவரின் அன்றாட வாழ்விலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் குற்றத்தின் மிகத் தனித்துவமான அம்சத்தை கிராமங்கள் அனுதினமும் காணுகின்றன. அங்கு தலித்துகளை மனிதர்களாக பொருட்படுத்துவதில்லை, அவர்களின் அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.
அமைப்பு ரீதியான பாகுபாடு
இந்து சமூக அமைப்பின் இதயத்தில் சாதிப் படிநிலை ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆகவே இந்துக்கள் ஒருவருக்கொருவர் சாதி நிலையை அறிந்து தெரிந்து கொள்ளாமல் பரஸ்பரம் பழக முடியாது. தீண்டாமை எனும் சாபம் இந்து சமூகத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வலுவான ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது, இந்துக்கள் சாதி அமைப்பின் மூலம் சமூக பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். இது ஆழமாக அமைப்பு ரீதியாகவே சமூகத்தில் தொழில்படுகிறது. உலகளாவிய மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட தர்மம் கூட பயனாளியின் சாதியை அடிப்படையாகக் கொண்டது. இந்துக்கள் தங்கள் சாதி மற்றும் மதத்திற்கு அப்பால் சிந்திக்கும் திறனற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
தொழில்துறையை எடுத்துக் கொண்டால் அதிக சம்பளம் வாங்கும் உயர் பதவியில் உள்ள அனைவரும், அந்தத் தொழிலதிபரின் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். பிறருக்கு வழங்கும் தர்மம் கூட சாதிய வரையறைக்குள் வகுக்கப் படுகிறது. தன் சாதியை சேர்ந்தோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர, இந்தியாவில் உள்ள அனைத்து காரியங்களும் மத ரீதியானவை… சாதியரீதியானவை…
இவ்வாறு, அரசியலிலும், தொழில்துறையிலும், வர்த்தகத்திலும், கல்வியிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடமில்லை. தீண்டாமை குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறிய ஒரு முக்கியமான கருத்து என்னவென்றால், தீண்டாமையே வறுமைக்குக் காரணம், மாறாக வறுமை தீண்டாமைக்குக் காரணம் அல்ல (அம்பேத்கர், 1947)
துரை அப்பாஸ்
