1565-இல் விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப்பின் மைசூர் பாளையக்காரர்களின் கைகளுக்கு வந்தது. இவர்களே மைசூர் உடையார் பரம்பறையினர் ஒளரங்கசீப் காலத்தில் மைசூரை ஆண்ட சிக்கதேவராயர், இவர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து ஜகதேவ் என்ற விருதைப் பெற்றார். அப்போது மைசூர் சாம்ராஜ்யம் இன்றைய கர்நாடகத்தில் எட்டில் ஒரு பகுதியே. பின் ஆட்சிக்கு வந்த சிக்கதேவராயர் மகன் செவிடு, ஊமை. திறமையற்ற அவன் காலத்தில் அவனது அமைச்சர்கள் நஞ்சராஜ், தேவராஜ் ஆகியோரின் பிடியிலேயே நாடு முற்றாக 40 ஆண்டுகள் வீழ்ந்து கிடந்தது.
மைசூர் ராணுவத்தின் தளபதியாக இருந்த ஹைதர் அலி தனது திறமையினாலும் வலிமையினாலும் முன்னணி பெற்று அமைச்சர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் உடையார்களிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கியதாக பொய் வரலாற்றை உருவாக்கினர் வெள்ளையர்.
ஹைதர் அலி ஆஜ்மீரிலிருந்து குல்பர்காவில் குடியேறிய ஆத்மஞானி அலி முகமதுவின் வம்சா வழியினர். மைசூர் படையில் சேர்ந்த பதே முகமதுவின் வீரத்திற்குப் பரிசாக மைசூர் அரசு புத்திக் கோட்டா என்ற ஊரை மானியமாக வழங்கினர். அவரது இரண்டாவது மகனே ஹைதர் அலி.
1749 தேவனஹள்ளி முற்றுகையில் ஹைதர் காட்டிய வீரத்தை வியந்த நஞ்சராஜ் அவரைப் படைத்தளபதி ஆக்கினார் ஹைதரின் போர்த்திறத்தால் மைசூர் பேரரசாக அமைந்தது. ஹைதரை ஒழித்து விட விதவை ராணி, குண்டுராவ் என்ற அதிகாரியுடன் சதி செய்தாள். ஹைதர் பழைய தளபதி நஞ்சராவின் உதவியுடன் வென்று மைசூரின் ஆட்சித் தலைமையை ஏற்தார். மராட்டியருடனும், ஹைதராபாத் நிஜாமுடனும் மோதி நமது அரசை மேலும் விரிவுபடுத்தினார்.
1782-இல் இரண்டாவது மைசூர் போரின்போது ஹைதர் மரணமடைய திப்பு பொறுப்பேற்று போரில் வென்றதுடன் திப்புவின் சகாப்தம் துவங்குகிறது.
15 ஆண்டுகள் போட்டியும், சூழ்ச்சியும் முற்றுகையிட்ட மைசூரைக் காக்கப் போராடியபடியே களப்பலியானார் திப்பு. திப்புவின் வீழ்ச்சியுடன் இந்தியா எமது கைகளில் என்று எக்காளமிட்ட வெல்லெஸ்லி பிரபு, திப்புவை வீழ்த்த உதவியவர்களுக்கு தானமாகச் சில பகுதிகளை வழங்கியது போக எஞ்சிய மைசூரை வழங்க தமக்கு அடங்கி ஆளும் நபர் யார் என ஆலோசிக்கத் துவங்கினார்.
திப்புவின் அமைச்சர் பூர்ணய்யா, திப்புவின் மூத்த மகன் பத்தே ஹைதர் பதவிக்கு வருவதே நாட்டின் அமைதிக்கு உதவும் என்று வாதாடினார். திப்புவின் பரம்பரையினர் ஆட்சிக்கு வருவது தமக்கு ஆபத்து என உணர்ந்த வெள்ளையர் அவர்கள் அனைவரையும் வேலூர் கோட்டையில் சிறை வைத்தனர். அவர்கள் கணக்கு தவறாகப் போகவில்லை. 1806ல் வேலூர் கோட்டையில் வெடித்த முதல் சிப்பாய்கலகத்திற்கு திப்புவின் வாரிசுகளே காரணமாக இருந்தனர். இதைக் காரணம் காட்டி அவர்களை கல்கத்தாவில் குடியேற்றினர் . 1860-ல் அவர்களுக்காக வழங்கப்பட்ட மானியங்களை நிறுத்தினர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடி, தியாகங்கள் பல செய்த பெருமைக்கு உரியவர்களாக திப்புவின் புதல்வர்கள் நிகழ்ந்தனர்.
அரை நூற்றாண்டுகாலம் தென்னிந்தியாவின் பெருமைமிகு வரலாற்றின் படைப்பாளிகளாகத் திகழ்ந்த வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்த விடுதலைப் போரின் முதல் களப்பலியாள ஹைதர், திப்பு ஆகியோர் வந்ததும் சென்றதும் இந்திய வரலாற்றின் ஒளி மிகுந்த அத்தியாயம்.
(திரு சுஜாவுதீன் சர்க்கர் சுலை எழுதியுள்ள திப்புவின் அரசியல் நூலிலிருந்து தொகுத்தவர் திரு எம் பாண்டியராஜன் திருச்சி.
