1963-ல் ஓர் மழை நாளில் நான் லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்திலிருந்து வெளியே வருகையில் பிரெஞ்சு மாணவர் ஒருவருக்கு எனது குடையில் இடம் கொடுத்து அழைத்துப் போனேன். வழியிலுள்ள தேநீர் விடுதியில் சூடான தேநீர் பருகியபடி பேசிக் கொண்டிருந்தோம். அந்த இளைஞர் சாதாரண உல்லாசச் சுற்றுலாப்பயணி அல்ல. போர்க்களத்திலேயே உயிர் நீத்த மன்னர்கள் குறித்த தனது ஆராய்ச்சிக்கான ஆதாரங்களைத் தேடி அலைபவர்.
“தோல்வி நெருங்கும் போது சரணடைவது. இல்லை ஓடி ஒளிவது என்பதே பெரும்பாலான மன்னர்களின் வழக்கம். ஆளால் உங்கள் திப்பு போர்க்களத்திலேயே போரிட்டு உயிர்நீத்த பெருமைக்குரியவன்” என்று அந்த மாணவர் கூறியபோது எனது நாட்டின் மன்னன் ஒருவனது பெருமையை மனதில் பத்திரமாக்கினேன்.
வரலாற்று நூல்கள் திப்பு பற்றித் தவறான பல கருத்துகளை நம்மீது சுமத்தியுள்ளன. அந்த பிரெஞ்சு மாணவரின் தாக்கத்தால் திப்பு பற்றிய நூல்களைத் தேடிப் படிக்கத் துவங்கினேன் படிக்கப் படிக்க எனது ஆர்வம் வளர்ந்து கொண்டே போனது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களிடையே வாழ்ந்து மடிந்த அந்த மாவீரன் குறித்து எத்தனை அவதூறுகள், புரளிகள், போலித்தகவல்கள், ஆதாரமற்ற நம்பிக்கைகள்?
திப்பு இன்னமும் புதிராகவே உள்ளார். ஆங்கிலேயர்கள் தமது ஆதிக்கப் பேராசையின் பெருந்தடைக்கல்லாக அவரைக் கருதி உண்டாக்கிய அவதூறுகளை மிஞ்சி திப்புவின் உண்மை வடிவத்தைக் காணும் முயற்சி இதுநாள்வரை மேற்கொள்ளப்படவே இல்லை. சிலரது சின்ன முயற்சிகள்கூட முழுமையானதாகவோ, ஆதாரப்பூர்வமானதாகவோ இல்லாமல் போனது.
நான் அந்தப் பெரும் பொறுப்பை ஏற்க முன்வந்தேன். சென்னை, தில்லி, மைசூர், கல்கத்தா, புதுச்சேரி என இந்தியாவின் பல்வேறு அருங்காட்சியகங்கள், ஆவணக் காப்பகங்கள் என ஏறி இறங்கினேன். பிரிட்டிஷ் அருங்காட்சியகம் எனது தேடலுக்கு சரியான அறிவுச்செல்வக் குவியலாக இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியுடன் திப்பு மேற்கொண்ட எண்ணற்ற கடிதத் தொடர்புகள், ரகசியக் குறிப்புகள், அறிக்கைகள், ராணுவக் குறிப்புகள், ஆளுநர்களின் சொந்தக் குறிப்பேடுகள் என காலத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் எனக்குக் கிடைத்தன.
அன்றைய வெள்ளை ஆதிக்கவாதிகளின் ஆசைகள், கனவுகள், திட்டங்கள், சதிகள், செயல்பாடுகள் பற்றிய ஆவணங்கள் இங்கிலாந்தின் பல்வேறு இடங்களில் சேகரித்துப் பாதுகாக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். இந்தத் தேடலில் தொடர்ச்சியாக பிரான்ஸ் தேசத்து அருங்காட்சியகங்களை, ஆவணக் காப்பகங்களை முற்றுகையிட்டேன். திப்பு பற்றி டச்சு ஆவணங்கள், ஒட்டாமன், இரானியக் குறிப்பேடுகள் அள்ள அள்ளக் குறையாத தகவல்களைக் கொடுத்துதவின. இவற்றை மொழிபெயர்ப்பதும், முறைப்படுத்துவதும் பெரும்பாடாக இருந்தது. இத்தகைய முயற்சிகளை ஏன் நமது இந்திய ஆய்வாளர்கள் மேற்கொள்ள முடியவில்லை என்பதற்கான நியாயத்தை எனது கடினமான தேடலும் பெரும் பொருட்செலவும் உணர்த்தின.
ஆவணங்கள் மனித உணர்வுகளையும் வேதனைகளையும் உணர்த்துவதில்லை. மாறாக உணர்வற்ற ஒருதலைப்பட்ச பதிவுகளாகவே அவை இருந்தன. அன்பு, வீரம், காதல், தியாகம் இவை நிறைந்த ஒரு மனிதனின் வரலாறாகவே திப்புவின் வரலாறும் இருந்திருக்கும். அவரது நம்பிக்கைகள், ஆசைகள், உணர்வுகள், வேதனைகள், அவரைச் சுற்றி வாழ்ந்த மனிதர்கள் அவர்களது தியாகம் துரோகம் அவரது வாழ்வில் இடம் பெற்ற பெண்களின் அன்பு, காதல், அவரை எதிர்த்துப் போரிட்ட, சதி செய்த எதிரிகள் – இவையாவும் கலந்த வரலாற்றின் சுவையான வடிவாக இந்நூலை உருவாக்கியுள்ளேன். இந்த வரலாற்றின் உரையாடல்கள் சில கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆதாரப்பூர்வமாகத் தவறு என்று யாரேனும் சரித்திர ஆய்வாளர் சுட்டிக்காட்டும் வரை என் படப்பிடிப்பு சரியானதாக இருக்குமென்றே நம்புவேன்.
திப்புவுக்கு புதிய உருவமும் உயிரும் கொடுத்து ஒரு தேசிய வீரனாகச் சித்தரித்துக் காட்டுவது என்பது எனது நோக்கமல்ல. நமது வரலாறு நமக்குச் சரியான பாடங்களைப் புகட்டுவதாக அமைய வேண்டும். நமது வரலாற்றின் கசப்பான பாடங்களிலிருந்து கற்றுக் கொள்ளத் தவறினால் திருப்பங்கள் வாயிலாக எதிர்காலங்களில் பாதிக்கப்படல் கூடும். திப்பு இந்த மண்ணின் கடந்த கால வரலாற்றிலிருந்து சில கசப்பான உண்மைகளை அனுபவ உண்மைகளாக உணர்ந்தார். இந்தியா எப்போதும் அன்னியர்களின் வலிமையால் அழிக்கப்பட்டதில்லை; நம்மவர்களின் உட்பூசல், பலவீனம், ஒற்றுமையின்மை போன்ற மோசமான நோய்களாலேயே நாம் விழந்தோம். உள்நாட்டின் துரோகிகளாலேயே நமது நாட்டிற்கு அபாயமும் அழிவும் காத்திருக்கிறது. திப்பு கற்ற பாடங்கள் இன்றும் தமக்குத் தேவை.
அன்று நான் சந்தித்த அந்தப் பெயர் தெரியாத பிரெஞ்சு மாணவரின் உணர்வூட்டலில் உருவான இந்த நூலை எப்போதேனும் அவர் காண நேர்ந்தால் அவருக்கு எனது ஆழ்ந்த நன்றிகளை இதில் பதித்துள்ளேன். இந்த நூல் உருவாக உதவிய அத்தனை நல்லோர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றி.
பகவன் S. கித்வானி
மொழியாக்கம்:V.P. குணசேகரன்.
