திப்புவும் விவசாயமும்

3 Min Read

மைசூரின் முற்காலப் பொருளாதாரத்தில் விவசாயமே முதன்மையான துறையாக இருந்ததால், திப்புவின் முக்கிய கவனம் இயல்பாகவே விவசாய மேம்பாட்டின் மீது இருந்தது. தவறான நேரத்தில் வரி வசூலிப்பது விவசாயிகள், தங்கள் கால்நடைகளை விற்கத் தூண்டி அவர்களை வறுமையில் ஆழ்த்திவிடும் என்ற கவலையை திப்புவின் ஒரு உத்தரவு வெளிப்படுத்துகிறது. இத்தகைய காலந்தவறிய வரி வசூலிப்பு தவிர்க்கப்பட வேண்டும் என்றும், ‘வளங்களற்ற’ விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு ‘கால்நடைகள் மற்றும் தானியங்கள் வடிவில்’ தக்காவி (விவசாயக்) கடன்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பழைய கால்வாய்கள் மற்றும் கரைகள் பழுதுபார்க்கப்பட வேண்டும், புதியவை கட்டப்பட வேண்டும். அதேபோல, ஆறுகளின் குறுக்கே அமைக்கப்பட்ட பழைய அணைகள் பழுதுபார்க்கப்பட வேண்டும், புதியவை கட்டப்பட வேண்டும். விவசாயிகளை ஒடுக்கிய கிராமத் தலைவர்கள் (‘பட்டேல்கள், ஷான்போக்குகள்’ போன்றவர்கள்) தண்டிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் பெரும்பாலும் முகலாய நிர்வாக மற்றும் முந்தைய ஆட்சிகளின் பாரம்பரியக் கொள்கைகளுக்கு இணங்கவே இருந்தன.

திப்பு தனது சொந்தத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற விருப்பத்தினால் முந்தைய நீர்ப்பாசனப் பணிகளில் தலையிட்டு அவற்றைச் சிதைத்தார் என்ற புக்கானனின் (Buchanan) விமர்சனம், பழைய கட்டமைப்புகளை நல்ல நிலையில் பராமரிக்க திப்பு காட்டிய அக்கறையோடு ஒத்துப் போகவில்லை.

ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்து ஒன்பது மைல் தொலைவில், கிருஷ்ண ராஜ சாகர் என்ற பெரிய ஏரியை உருவாக்கக் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்ட புகழ்பெற்ற நவீன அணை உள்ளது. 1911இல் இதற்கான அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கியபோது, ​​கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட ஒரு பலகை கண்டெடுக்கப்பட்டது: 1798 ஜூன் 12 தேதியிட்ட அந்தப் பலகை, நீர்ப்பாசனத்திற்கு நீர் வழங்குவதற்காக இதே இடத்தில் திப்பு சுல்தான் அணைக்கான அடிக்கல்லை நாட்டினார் என்பதையும், இதன் மூலம் புதிய நிலப்பரப்பைச் சாகுபடிக்கு கொண்டு வருபவர்களுக்கு வருவாயில் கால் பகுதி வரி விலக்கு அளிக்கப்படும் என்பதையும் அறிவித்தது.

அணைக்கான அடிக்கல் நாட்டப்பட்ட ஓராண்டுக்குள்ளேயே திப்புவின் ஆட்சி முடிவுக்கு வந்ததால், அப்பணி முழுமையடையாமல் போனதற்கும், அதன்பின் வந்த ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிலான ஆட்சியால் அது புறக்கணிக்கப்பட்டதற்கும் திப்பு மீது எந்தக் குறையும் கூற முடியாது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கழித்து நவீனப் பொறியாளர்கள் தேர்வு செய்யவிருந்த அதே இடத்தை திப்பு அணையை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுத்தார் என்பது அவரது தொலைநோக்குப் பார்வையையும் ஆர்வத்தையும் பறைசாற்றுகிறது.

விவசாயம் சார்ந்த உற்பத்தித் தொழில்களை மேம்படுத்துவதிலும் திப்பு ஆர்வம் காட்டினார். கரும்புச் சர்க்கரை தயாரிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்குப் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் வெண் சர்க்கரை தயாரிப்பதில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்தப் பகுதிகளிலேயே இவ்வகை உயர்தரச் சர்க்கரையைத் தயாரித்து விற்க வேண்டும் என்றும் அவர் பிறப்பித்த சுவாரஸ்யமான உத்தரவு இதற்குச் சான்றாக அமைகிறது.

திப்புவின் தொலைநோக்குப் பார்வையுடனான புதுமை முயற்சிகளுக்கு மற்றொரு சான்று மைசூரில் பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலை அறிமுகப்படுத்தியதாகும். இத்தொழில் பிற்காலத்தில் மிக வெற்றிகரமான ஒரு தொழிலாக வளர்ந்தது. மல்பெரி மரங்களை வளர்க்கும் பணி குறிப்பிட்ட நில உரிமையாளர்களிடம் (தாலுக்தார்கள்) ஒப்படைக்கப்பட்டது. பட்டுப்புழு வளர்ப்பிற்காக இருபத்தியொரு மையங்கள் (கார்ஹானாக்கள்) நிறுவப்பட்டன. புழுக்கள் மாதந்தோறும் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றும், அவற்றின் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டது. ஆண்டுதோறும் பட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதே திப்புவின் விருப்பமாக இருந்தது.

விவசாய மேம்பாட்டில் அவர் காட்டிய இத்தகைய ஆர்வம் பாராட்டுக்குரியது.

Share This Article