நல்லிணக்க நாயகர்கள்-3

2 Min Read

குற்றாலநாதருக்கும் இஸ்லாமிய வணிகர்கள் கொடை

  • இடம்: தென்காசியில் உள்ள அகமதுபேட்டையில் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளை வியாபாரம் செய்யும் மணியம் இசுமாயல் ராவுத்தர் உள்ளிட்ட இசுலாமிய வணிகர்கள் அனைவரும் குற்றாலம், குற்றாலநாதசுவாமி திருவிழாப் பூசைக் கட்டளைக்கும், திருநெல்வேலி காந்திமதியம்மனின் சிறுகாலைச் சந்தக் கட்டளைக்கும் கொடுத்த மகமைக் கொடையை இச்செப்பேடு கூறுகிறது.
  • வியாபாரப் பகுதிகள்: அகமது பேட்டை வணிகர்கள் இல்லாமல், செங்கோட்டை, புளியரை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப்பேட்டை, சுரண்டை முதலிய ஊர்ச்சந்தையில் வியாபாரம் செய்யும் இசுலாமியர்களும் இம்மகமையை மாதா மாதம் அளிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
  • எச்சரிக்கை: இதற்குச் சைவர்கள் ஏதேனும் தீங்கு செய்தால் கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்திலும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் தாய்க்கு வக்கனம் செய்த தோஷத்திலும் போவார்கள் எனக் கூறியுள்ளனர்.
  • சான்றோர்கள்: பட்டயம் எழுதியவர் மாடன் செட்டியார். தானாதபத அன்னைநாதன் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளார். இசுலாமியர்கள் சார்பில் இசுமாயல் ராவுத்தர் கையொப்பமிட்டுள்ளார். கோயில் காவல்காரர் சந்திரகுமார் பிள்ளை செப்பேடு செய்துவைத்தார்.
  • குறிப்பு: இரண்டு செப்பேடு தயார் செய்து குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலுக்கும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. கொடை அளித்த ஆண்டு கி.பி. 1795.

ஆதாரங்கள்

  1. மெக்கன்சி ஆவணம் ஆர் 5371-2: தமிழக அரசு கீழ்த்திசைச்சுவடி நூலகம், சென்னை-5.
  2. தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், மூன்றாம் தொகுதி முதல் பாகம், எண் 1089, பக்கம் 1079-4.
  3. Annual Report on Epigraphy (A) 43 of 1946.

செப்பேடு

  1. சாலிவாகன சகாப்தம் 1717 வருஷம் செல்லா
  2. நின்ற கொல்லம் 964 பெருஷம் கீலக வருஷம் கார்த்திகை மாதம்
  3. 25 தேதி சுவாமி குற்றாலநாதசுவாமி கட்டளைக்கு அசாதுவாலா சாயபு
  4. அனுமதுபேட்டை மணியம் இசுமாயல் ராவுத்தர் முதலான பல
  5. ரும் பேட்டையம் எழுதிக் கொடுத்தபடி பட்டயமாவது சுவா
  6. மிக்கு நித்தியப் பூசையிற் கட்டளை வந்து நடத்தவரும்
  7. படி படித்தரப்படிக்கு நடத்தவரும் வகைக்கு நாங்களெல்லாம்
  8. வசைக் கைத்துக்கொடுத்து ஏறுசாத்து இறங்குசாத்து
  9. கச்சை ஒன்றுக்கு கால்மாகாணி வீதமும் நடை ஒன்றுக்கு மரு
  10. வறும் சட்டை ஒன்றுக்கு மாகாணிப் பண வீதமும் இன்
  11. னொன்றுக்கு அரைமாகாணி வீதமும் இந்தப் படிக்கு திருநெல்
  12. வேலி காந்திமதியம்மன் சிறுகாலைச் சந்த மகைமைப்படிக்கு தென்
  13. காசி அகமது பேட்டையிலுள்ள வணிக சேகரம் செங்கோட்டை
  14. புளியரை பண்புளி கடையநல்லூர் சிவராமப்பேட்டை சுரண்டை
  15. சந்தை முதலானதுரையிலும் மகைமை வைத்துக்கொடுத்த படியி
  16. னாலே மாசம் மாசம் உள்ள பணம் துறைவழியும் கணக்குப்
  17. பார்த்து வாங்கிக்கொண்டு சுவாமிக்குக் கட்டளை யென்றென்றைக்
  18. கும் நடத்தவருவோமாகவும் இப்படி நடத்தவருகுத கட்டளை
  19. தர்மத்துக்கு யாதொரு வக்கனம் செய்தால் பழையமாயுள்ள
  20. பட்டயப்படிக்கு பஞ்சாட்சரத்துக்குட்பட்டவன் கங்கைைக்
  21. கரையில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்திலும் இஸ்லாமான
  22. முகமதய மதத்தில் தாய்க்கு வக்கனம் செய்த தோஷத்தலும்
  23. போவாராகவும் இந்தப்படி சம்மதத்து நித்தியப் பூசைக் கட்டளைக்கு
  24. பட்டய மெழுதிக்குடுத்தோம் பேட்டை மணியம் இஸ்மாயல் ராவுத்தர்
  25. முதலான பலரும் இந்தப் பட்டையம் எழுதினேன் மாடன் செட்டி
  26. யார்தா நாதபத அன்னைநாதன் எழுத்து இந்தப்படிக்கு இசு
  27. மாயல் ராவுத்தர் காருமாறு காவலர் சந்திரகுமார் பிள்ளை
  28. இந்தச் செப்புப்பட்டயம் செய்து எழுதிவைத்து 73
  29. நெதென்காசி சேகரம யலும் ஈடலை முத்துப்பிள்ளை தரி கூ
  30. டாசலபதி துணை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *