ஹைதர் அலியின் மூத்த மகனான திப்பு, 1782 டிசம்பர் 29 அன்று தனது 32-வது வயதில் தந்தையின் அரியணையை ஏற்றுக்கொண்டார். அரியணை ஏறிய திப்புவிற்கு முன் பெரும் சவால்கள் காத்திருந்தன. பதவி ஏற்ற உடன் தன் தந்தையால் தொடங்கப்பட்டு நீண்டுகொண்டிருக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை வழிநடத்த வேண்டிய உடனடித் தேவை திப்புவிற்கு இருந்தது.
அது நாள் வரை யுத்தத்தில் தளபதியாக நின்று எதிர்ப்புப் போரை வழிநடத்தியவர் இன்று தலைவானார். மன்னன் என்றால் மஞ்சத்திலும், தலைவன் என்றால் தளவாடங்களுக்கு பின்னே தஞ்சம் அடைந்துகொள்வதுமே அரச நீதி, ராஜதர்மம்..திப்புவோ மன்னர் மன்னன் அல்லவே! மக்களின் மண்ணன் ஆயிற்றே! தலைவன் அல்ல தளகர்த்தன், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை வழிநடத்திய முன்கள வீரன்.
யுத்தம் தொடங்கியது, களம் கடினமாகயிருந்தது. களத்தின் கடிவாளமோ திப்புவின் கரங்களில் இருந்தது., கட்டுப்பாட்டில் இருந்தது. ஆகவே யுத்த வெற்றியும் அதன் நீட்சியாய் மார்ச் 1784இல் ஏற்பட்ட மங்களூர் உடன்படிக்கையும் அதன் சாராம்சங்களும் திப்புவிற்கு சாதகமாகின. யுத்த ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றார் திப்பு.
தொடர்ந்து மராட்டியர்கள் மற்றும் நிஜாமுடன் நடைபெற்ற போர் 1785முதல் 87 வரைநீடித்தது. இது இராணுவ வெற்றிகளுடன் முடிந்தாலும், அமைதி உடன்படிக்கை நிபந்தனைகள் திப்புவுக்கு சாதகமற்றதாகவே இருந்தன. தனது முதன்மை எதிரியாகக் கருதப்பட்ட அன்னிய சக்திகளான ஆங்கிலேயருடன் உள்ளூர் எதிரிகளான மராட்டியர் மற்றும் நிஜாம்கள் ஒன்றிணைந்துவிடக் கூடாது என்பதில் திப்பு கொண்டிருந்த எச்சரிக்கையின் காரணமாக தனக்கு சாதகம் அற்ற சில நிபந்தனைகளையும் திப்பு ஏற்றுக்கொண்டார்.
இவ்விஷயத்தில் திப்புவின் அணுகுமுறை ஹைதர் அலீயின் அணுகுமுறையோடு ஒத்துப்போயிருக்கக்கூடும். ஹைதர் அலீ தனது சொந்த அதிகாரத்தையே முதன்மையாகக் கொண்டு செயல்பட்டவர். முகலாய அரசாங்கத்தில் ஒரு சாதாரண பதவிக்கான நிலையற்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் தனது உயரிய அதிகாரத்திற்கான உரிமையை நிலைநாட்டிக்கொள்வதிலேயே அவர் திருப்தி அடைந்திருந்தார். அதே சமயம், தன்னை உடையார் ஆட்சியின் பாதுகாவலராகவும் அதன் அடிப்படையில் குடிமக்களின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் கோர அவரால் முடிந்தது.
நடைமுறையில், அவரது நிர்வாகம் முகலாய நிர்வாக மரபுகளைப் பெரிதும் சார்ந்திருந்தது; தனக்கென்று புதிய நிர்வாக நடைமுறைகளை வகுப்பதிலும் அல்லது முகலாய நிர்வாக முறைகளில் வேறுபட்ட எல்லைகளுக்கு அப்பால் செல்ல வேண்டிய அவசியத்தை அவர் உணரவில்லை. ஹைதர் அலீ நவீனமயமாக்கலை மேற்கொள்ள முயன்ற ஒரே துறை இராணுவம் மட்டுமே. அன்றைய காலத்தில் மிகச் சிறந்த நிலையிலான ஒரு இராணுவத்தை திப்புவிடம் ஒப்படைத்தார் ஹைதர்அலீ. திப்புவின் வெற்றிகளுக்கு ஹைதர் அலீயால் ஒழுங்கு படுத்தப்பட்ட இராணுவம் முக்கிய காரணமாக இருந்த போதிலும் இது மட்டும் திப்பு சுல்தானுக்குப் போதுமானதாக இருக்கவில்லை.
தன் மீதான விசுவாசத்தை மிகவும் உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்ற அவரது தனிப்பட்ட லட்சியதை கடந்து, ஏகாதிபத்திய சக்திகளான ஆங்கிலேயரை எதிர்கொள்ளத் தன் குடிமக்கள் அல்லது அவர்களில் ஒரு பகுதியினர் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளக்கூடிய ஒரு நோக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் திப்புவின் ஆட்சியின் அடிப்படையாக இருந்தது. ஆகவே தன் அதிகாரத்தை முதன்மைப் படுத்தாமல் மக்கள் அதிகாரத்தை முதன்மைப் படுத்தினார் திப்பு.
மன்னர் ஆட்சியில் மக்கள் ஆட்சியை நிகழ்த்தினார், இதற்கு அவர் பெற்ற கல்வி அறிவும் ஓர் முதன்மை காரணம். பாரசீக மொழியில் அவர் பெற்றிருந்த கல்வி (முறையான கல்வி பெறாத அல்லது கல்வியறிவு அற்றவராகவே கருதப்பட்ட ஹைதர் அலீயிலிருந்து மாறுபட்டவர் திப்பு), அவரை இஸ்லாமிய வரலாறு மற்றும் இறையியலில் நன்கு தேர்ச்சி பெற்றவராக மாற்றியது. இது திப்புவின் பாதையைத் தீர்மானிக்க உதவியது. அவரின் பாதை இராஜ பாதையாக இல்லாமல் மக்கள் பாதையாகியது.
அதனாலேயே அரியணை ஏறியது முதலே, டெல்லியில் உள்ள முகலாய அரசவையிடமிருந்து எந்தவொரு கீழ்நிலை அதிகார அங்கீகாரப் பட்டத்தையும் பெறத் தேவையில்லாத, ஒரு சுதந்திரமான சுய சார்பு கொண்ட ஆட்சியாளராகவே திப்பு தன்னைக் கருதினார். எனவே, அவர் தனது நாணயங்களிலிருந்து முகலாயப் பேரரசரின் பெயரையும் பட்டத்தையும் நீக்கினார்.
மேலும், வரலாற்றுஆசிரியர் வில்க்ஸ் கூற்றுப்படி, ஜனவரி 1786 முதல் ‘பாதுஷா’ (Padshah) என்ற பட்டத்தை தனக்காகப் பயன்படுத்தத் தொடங்கினார். துருக்கியின் சுல்தான் மற்றும் பிரான்சின் மன்னர் போன்ற முழுமையான இறையாண்மை கொண்ட ஆட்சியாளர்களுக்கு இணையான நிலையை இப்போது திப்புவால் கோர முடிந்தது. இவர்கள் இருவரும் 1787 மற்றும் 1788இல் திப்புவின் தூதுவர்களை நேரில் வரவேற்றனர்.
இந்தத் தூதுக்குழுப் பயணங்கள் அவருக்கு இராணுவ வளங்கள் , வணிக நன்மைகள் போன்ற குறிப்பிடத்தக்க பொருள்சார் உதவிகளை வழங்கியிருக்காவிட்டாலும், இதன் மூலம் அவர் பெற்ற இராஜதந்திர அந்தஸ்து அவரது உள்நாட்டுப் புகழை வலுவாக உயர்த்தியது. முழுமையான இறையாண்மை கொண்ட ஓர் அரசாக திப்புவின் அரசு மலர்ந்து வளர்ந்தது.
முகலாய அரசவையுடனான திப்புவின் விலகல் மற்றொரு பரிமாணத்தையும் எட்டியது. முகலாயப் பேரரசரைப் போன்ற அதே அரசியல் பாணியில் அவர் தன்னை ஒரு ஆட்சியாளராக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ‘பாதுஷா’ அல்லது ‘ஜில்-இ-இலாஹி’ (கடவுளின் நிழல்) போன்ற பட்டங்கள் முகலாயப் பேரரசர்களாலும் பயன்படுத்தப்பட்டவை என்பது உண்மைதான்.
ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டின் முகலாய அரசியல் கட்டமைப்பில் இல்லாத ஒரு மதரீதியான கொள்கை வழி தன்மையை திப்பு தனது ஆட்சியதிகாரத்திற்கு அளித்தார். திப்பு தான் வெளியிட்ட நாணயங்களில் தனது சொந்தப் பெயரைப் பொறிக்கவில்லை; மாறாக, நாணயங்களில் உள்ள வாசகங்கள் இறைவனை சர்வ வல்லமை படைத்த ஆட்சியாளராகக் குறிப்பிடுகின்றன; அத்துடன் இறைத்தூதர் முஹம்மது மற்றும் ஹைதர் (அதாவது அலீ – இறைத்தூதரின் உறவினரும் இஸ்லாமிய வீரர்களுக்கு முன்மாதிரியானவருமானவர்) ஆகியோரின் பெயர்களையும் அவை தாங்கியுள்ளன. அலீயின் நினைவாக அவரது ‘இரட்டை ரூபாய்’ நாணயம் ‘ஹைதரி’ என்றும், அலீயுடன் தொடங்கும் பன்னிரு இமாம்களை நினைவுகூரும் வகையில் ‘ஒற்றை ரூபாய்’ நாணயம் ‘இமானி’ என்றும் அழைக்கப்பட்டன.
திப்புவின் அரச அடையாளங்களில் பெரிதும் வலியுறுத்தப்பட்ட புலிச் சின்னமானது, ‘ஹைதர்’ (இதற்கு சிங்கம் அல்லது புலி என்று பொருள்) என்ற பட்டப்பெயரைக் கொண்ட அதே இஸ்லாமிய வீரருடன் அவரைத் தொடர்புபடுத்தும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. அவரது அரசாங்கத்திற்கான அதிகாரப்பூர்வமான பெயரான ‘சர்கார்-இ-குதாடத்’ (இறைவனால் வழங்கப்பட்ட அரசாங்கம்) என்பது, அது சாதாரணமானதொரு அரசாங்கம் அல்ல, மாறாக இறைவனால் பணிக்கப்பட்ட ஒரு நோக்கத்தைக் கொண்ட அரசாங்கம் என்ற திப்புவின் எண்ணவோட்டத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.
முஸ்லிம் குழந்தைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படை நெறிமுறைகளைக் கற்பிப்பதற்காகவே ஒரு ‘காஜி’யை (மத நீதிபதி/ஆசிரியர்) நியமிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், அரசாங்க போக்கின் முன்னுரிமையை வெளிப்படுத்தின. அதே வேளையில் பிற சமய உணர்வுகள் மறுக்கப்படவில்லை என்பது முக்கியமாகும்.
ஹைதர் அலீயின் காலத்தில் இல்லாதவாறு, திப்புவின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாம் அவரது அதிகாரத்திற்கான ஒரு முக்கிய கருத்தியல் சார்ந்த ஆதாரமாக மாறியது. முகலாயப் பேரரசரால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப் பட்டங்களை மதிப்பதற்கும், பெயரளவிலேனும் அவருக்கு விசுவாசமாக இருப்பதற்கும் பழகியிருந்த தனது முஸ்லிம் அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் விசுவாசத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் இது உதவியது என வாதிடலாம்.
ஆனால், இஸ்லாத்தை முன்னிறுத்துவதன் மூலம் அவரின் ஆதரவாளர்களிடம் ‘புனிதப் போர்’ (கஸ்வா) உணர்வை ஏற்படுத்தவும் இது உதவியது. 1783இல் ஜைனுல் அபிதீன் ஷுஸ்தாரி மூலம் இராணுவ அமைப்பு மற்றும் போர் உத்திகள் குறித்த கையேடு ஒன்றை அவர் தொகுக்கச் செய்தபோது, அதற்கு ‘ஃபத்ஹுல் முஜாஹிதீன்’ (புனிதப் போர் வீரர்களின் வெற்றி) என்று குறிப்பிடத்தக்க வகையில் பெயரிட்டார்.
இந்தப் புனிதப் போர் ஏகாதிபத்திய அந்நிய சக்திகளான ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்படவிருந்தது. கான்ஸ்டான்டிநோபிளுக்கு அனுப்பப்பட்ட தனது தூதர்களுக்கு அவர் எழுதிய அறிவுறுத்தல்களில், ஆங்கிலேயர்கள் தங்கள் படையெடுப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் மூலம் எவ்வாறு ஒரு பெரும் ஆபத்தாக மாறியுள்ளனர் என்பதை விவரித்திருந்தார். இருபது கோடி ரூபாய் வருவாய் கொண்ட வங்காளப் பகுதி, மூன்று கோடி ரூபாய் வருவாய் கொண்ட கர்நாடகப் பகுதி, மற்றும் தலா மூன்று கோடி ரூபாய் வருவாய் கொண்ட சூரத், குஜராத் போன்ற பகுதிகள் என மொத்தம் இருபத்தி ஆறு கோடி ரூபாய் வருவாய் கொண்ட பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியுள்ளனர் என்ற விவரம் உதுமானிய சுல்தானிடம் தெரிவிக்கப்பட வேண்டியிருந்தது.
ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையிலான பகைமையின் காரணமாகவே ஹைதர் அலீயும் திப்புவும் பிரெஞ்சுக்காரர்களுக்கு உதவினர். மராட்டியர்கள் ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்த 1782-ல் தங்களுக்குள் தனி அமைதி ஒப்பந்தத்தைச் செய்துகொண்டதன் காரணமாகவே, 1785இல் திப்பு மராட்டியர்களை எதிர்த்துப் போரிட வேண்டியிருந்தது.
முஸ்லிம் இறையியலின் கோட்பாடுகளுக்கு மாற்றமான ஆங்கிலேயர்களே என்றும் இஸ்லாத்தின் முக்கிய எதிரிகள் என்றும் திப்புவால் கருதப்பட்டனர். மற்ற அனைத்து விரோதங்களும் இரண்டாம் பட்சமானவை. அனைத்து நட்புறவுகளும் இந்த அடிப்படையிலேயே வரையறுக்கப்பட்டன.
1857-ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களைப் போலவே திப்புவின் விஷயத்திலும், ஒரு அந்நிய எதிரிக்கு எதிராக வலிமையையும் தீவிரத்தையும் பெற மதம் ஏன் துணைக்கு அழைக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மத உணர்வு சில சமயங்களில் கட்டுப்பாட்டை மீறிச் செல்லவும் கூடும்.
திப்புவின் மீதான கட்டாய மதமாற்றம் மற்றும் கோயில் இடிப்பு குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை. இதற்கு நேர்மாறான சான்றுகளோ மிகவும் உறுதியானவை. ஹைதரைப் போலவே திப்புவும் இந்துக்களை அரசுப் பணியில் தொடர்ந்து அமர்த்தினார். அவரது இறுதி காலம் வரை இருந்த முக்கிய அமைச்சர்களில் பூர்ணையாவும் ஒருவர். ஆனால் இன்னும் பல நம்பிக்கைக்குரிய உயர் அதிகாரிகளும் திப்புவின் அமைச்சரவையில் இருந்தனர்.
1800-ஆம் ஆண்டில், திப்புவைப் பற்றிய தனது கட்டுரையில், திப்பு சுல்தானின் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் பிராமணர்கள் இருந்ததாக புக்கானன் குறிப்பிடுகிறார். திப்பு தனது கடிதங்கள் மற்றும் உத்தரவுகளில், கருவூலத்தில் மராத்தி மற்றும் கன்னட கன்ஹாரி எழுத்தர்களாக இந்துக்கள் நியமித்ததையும், பிற அலுவலகங்களில் ‘ஹிந்தவி’ எழுத்தர்களை நியமித்ததையும் குறிப்பிடுகிறார்.
திப்புவின் உத்தரவுகளில் ஒன்று, 1792-93-இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் தனது பிராமண அதிகாரிகளை ஒன்றுகூட்டியது பற்றியது. அங்கு தனது பணியாளர்களின் அனைத்துத் தவறுகளையும் மன்னிப்பதாக திப்பு அறிவித்தார். அதன்பின்னர் பிராமணர்கள் முறைப்படி நீராடி, அவருக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் அரசு செலவில் விருந்து அளிக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் சுல்தான் பிறப்பித்த மற்றொரு உத்தரவு, பழைய ஆட்சியாளர்களால் வெளிப்படையாக உடையார் ஆட்சியின் கீழ் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து நில மானியங்களும் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. மேலும், எந்தவொரு ஆவணச் சான்றுகளும் இன்றி வருவாய் விலக்குடன் கூடிய மானியங்களை அனுபவித்து வந்த ஜோதிடர்கள் மற்றும் சாஸ்திரிகளின் விவகாரங்கள் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களது மானியங்களும் அங்கீகரிக்கப்பட முடியும் என்று உத்தரவிட்டது.
பதவியிலிருந்து நீக்கப்படாத உடையார் ராஜ குடும்பத்தினரைத் திப்பு கண்ணியத்துடன் நடத்தினார்; ‘புலி’ அவரது சின்னமாக இருந்தபோதிலும், இந்திய மரபில் யானைக்கு அளிக்கப்படும் நீண்டகால மதிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் யானையும் நாணயங்களில் அவரது சின்னமாக இடம்பெற்றிருந்தது.
ஹைதரைப் போலவே திப்புவும் வெறும் ‘சகிப்புத்தன்மை’ என்பதையும் தாண்டிச் செயல்பட்டார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் தனது இறுதிப் போரை எதிர்கொள்வதற்கு முன்னதாக, இறைவனிடம் வேண்டுவதற்காக முல்லாக்களுக்கும் பிராமணர்களுக்கும் சம அளவில் காணிக்கைகள் கொடுக்கப்பட்டது’ என்ற விஷயத்தை வில்ஸ் பதிவு செய்கிறார்.
1792இல், ஆங்கிலேயப் படை திப்புவின் ராஜ்ஜியத்தின் மையப்பகுதிக்குள் நுழைந்தபோது அந்தப் படையெடுப்பை வர்ணித்த வரலாற்றாசிரியர் அப்பகுதியின் செழிப்பைக் குறிப்பிட்டு, பின்வரும் கருத்தைத் தெரிவிகிறார்.
ஹைதரால் நிறுவப்பட்ட அரசின் அதன் அமைப்புமுறையின் செயல்பாட்டினாலோ அல்லது திப்பு தனது சொந்த நடத்தைக்காக ஏற்றுக்கொண்ட கொள்கைகளால் அல்லது இந்த காரணங்களின் ஒருங்கிணைந்த விளைவால் அவரது நாடு எங்கும் மக்களால் நிறைந்திருந்தது. நிலங்கள் மண்ணின் திறனுக்கு ஏற்ப முழுமையாகப் பயிரிடப்பட்டிருந்தது. போர்க்களத்தில், அவரின் கடைசித் தோல்வி வரை, அவரது துருப்புக்களின் ஒழுக்கமும் விசுவாசமும், அவரது இராணுவத்தில் நிலவிய சிறந்த ஒழுங்குமுறைகளுக்கு சமமான வலுவான சான்றுகளாக இருந்தன.
அவரது ஆட்சி நேர்மையாகவும் சுயசார்புடனும் இருந்ததால், அது ஒரு ராஜதந்திரமிக்க திறமையான ஆட்சியாளரின் ஆட்சியாகவே இருந்தது. தனது நாட்டின் எதிர்கால மேன்மைக்கு அடிப்படையாக அமையவிருக்கும் தன் குடிமக்களை திப்பு ஒடுக்கவில்லை. மாறாக, அவர்களை அவர் பேணிப் பாதுகாத்தார். மேலும், அவரது கோபங்கள் பொதுவாகவே தனது எதிரிகளாகக் கருதிய ஆங்கிலேயர் மீதும் அவர்களது ஏகாதிபத்திய நலன்கள் மீது பிரயோகித்தார்.
.ஆகவே, திப்பு எதைச் செய்ய விரும்பினாரோ, அதில் தனது சொந்தக் குடிமக்களான இந்து பெரும்பான்மையினர் மீது போர் தொடுப்பது என்பது நிச்சயமாக இடம்பெறவில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, மறுக்க முடியாத பல தடைகள் இருந்தபோதிலும், தனது மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தி, அதன் மூலம் தனது ராஜ்யத்தின் சொந்த வளங்களை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமே திப்புவின் கருத்தியலாகவும் அரசியலாகவும் இருந்தது. ஆட்சிதிறனாகவும் அரசின் நோக்கமாகவும் இருந்தது.
ஆகவே திப்புவின் இறையாட்சியில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும், பழங்குடிகளும் ஏனைய மக்களும் இறையான்மையுடனே வாழ்ந்தனர். அனைவருக்கும் சமூக அரசியல் பொருளியல் மற்றும் பண்பாட்டு தளங்களில் சம உரிமையும் சமவாய்ப்பும் சமவள பங்கீடுகளும் வழங்கப்பட்டது.
திப்புவின் புனிதப்படை அந்நிய ஏகதிபத்திய சக்திகளை எதிர்ப்பதற்கும் தன் மக்களின் இறையாண்மையைக் காப்பதற்கும் களமாடியது. அந்த புனிதப்படையோ இந்துக்களையும் கிறித்தவர்களையும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியே கட்டி எழுப்பப்பட்டிருந்தது. திப்பு தன் இறையாட்சிக்கு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மானுட சமநிலைக்கான விழுமியங்களின் வழிநின்று இந்திய இயங்கியலை புகுத்தியிருந்ததாலேயே திப்புவின் ஆட்சி முறையும் வரலாறும் இந்திய சூழலுக்கு ஏற்ற இயங்குதன்மை கொண்ட அணுகுமுறையாக இன்றும் அணுகப்படுகிறது.. மக்களால் போற்றப்படுகிறது.
திப்பு இந்திய வரலாற்றில் இறவாமல் இருப்பார். மக்கள் நலனை முதன்மைப்படுத்திய அவரின் கருத்தியலும் அரசியல் கண்ணோட்டமும் காலத்தின் தேவையாகும். ஆகவே மது ஒழிப்பு , போதைப் பொருள் ஒழிப்பு, நரபலி ஒழிப்பு, அரச சோசியலிசம், தேசிய மூலதனம் திரட்டுதல், இயற்கை வள பாதுகாப்பு, தொழில்நுட்பம், மத சுதந்திரம் , வழிபாட்டு உரிமை, உழைப்பவருக்கே நிலம் உழுபவனுக்கே நிலத்தின் அதிகாரம், என அதிகாரத்தை மக்களுக்கு வழங்கியது மக்கள் மயப்படுத்தியது, இதில் இறுதிவரை திப்பு சமரசம் செய்துகொள்ளவேயில்லை.
ஆகவே தன் மக்களுக்காக இறுதிவரை சமரசம் அற்று சமர்களத்திலே சமராடிய புனிதப் படையின் தலைவன் புனித மரணத்தை எய்தினார்.
துரை அப்பாஸ்
