கலைச் சொல்லை மட்டுமா காத்தார் கலைஞர்?

7 Min Read

சொற்களின் போர்க்களம்:

அம்பேத்கர் நூற்றாண்டு ஆகிய 1991 களில் “தலித்” (மராத்தி) எனும் சமூக, அரசியல் “கலைச்சொல்” தமிழ்ச் சிற்றிதழ் களங்களிலும் மனித உரிமை, குடியுரிமை இயக்கச் செயல்பாட்டுத் தளத்திலும் நன்கு பரவலாகத் தொடங்கியிருந்தது. இன்னொரு பக்கம், 70 – களிலிருந்தே தமிழ்நாட்டளவில் அரசுத்துறைக் “கலைச் சொல்லாக” ஆதி திராவிடர் என்பது ஏற்பு பெற்று நிலை பெற்றிருந்தது.

அம்பேத்கர் நூற்றாண்டு ஆகிய 1991 களில் “தலித்” (மராத்தி) எனும் சமூக, அரசியல் “கலைச்சொல்” தமிழ்ச் சிற்றிதழ் களங்களிலும் மனித உரிமை, குடியுரிமை இயக்கச் செயல்பாட்டுத் தளத்திலும் நன்கு பரவலாகத் தொடங்கியிருந்தது. இன்னொரு பக்கம், 70 – களிலிருந்தே தமிழ்நாட்டளவில் அரசுத்துறைக் “கலைச் சொல்லாக” ஆதி திராவிடர் என்பது ஏற்பு பெற்று நிலை பெற்றிருந்தது.

அந்த கலைச் சொல்லுக்கு ஒன்றரை நூற்றாண்டு அளவிலான அறிமுகம் இருந்து வந்திருக்கிறது. பண்டிதர் அயோத்திதாசர், தாத்தா ரெட்டமலை சீனிவாசனார், எம்.சி.ராஜா, தந்தை சிவராஜ், தந்தை பெரியார் போன்ற பல முன்னோடிகள் தமிழ்ச் சமூகத்தில் அந்த சொல்லை நன்கு ஊன்றி நிலைப்படுத்தி இருந்தனர்.

ஆனால் காந்தியின் அரசியல் நுழைவும் அவருடைய சிந்தனைகளால் வழிநடத்தப்பட்ட தமிழகக் காங்கிரசாரும் பிறரும் “அரிஜன்” என்கிற மத வழிபட்ட கலைச் சொல்லையே பயன்படுத்தி வந்தனர். அதை ஒட்டியே 1937 – இல் அமைந்த ராஜாஜியின் ஆட்சியும் அதைத் தொடர்ந்து 47, 52, 62, 67 – வரையிலான காலங்களில் அமைந்த காங்கிரஸ் ஆட்சிகள் (சென்னை மாகாணம்) அரிஜன நலத்துறை என்கிற அரசுத் துறை ஏற்பு பெற்ற கலைச் சொல்லுடனேயே எல்லா சட்டங்களையும் திட்டங்களையும் அமல்படுத்தி வந்தனர். அந்த சொல்லுக்கு சமூக, சமய அரசியல் ரீதியாக கடுமையான கண்டனங்கள் பல முனைகளில் இருந்தும் தமிழ்நாட்டில் தெரிவிக்கப்பட்டு வந்தன.

70 – களில் தான் தமிழ்நாட்டில் “ஆதிதிராவிடர்” என்கிற சமூக வரலாற்றுக் கலைச்சொல் அரசுத் துறையின் அலுவல் முறையிலான பயன்பாட்டுக்கு வந்தது. அதை முன்மொழிந்து நிலைநிறுத்தியவர்கள் அன்றைய தலித்துத் தலைவர்களும் வழிமொழிந்து ஏற்றுக்கொண்டு ஆட்சியரின் அங்கமாக்கியவர்கள் எம்.ஜி.ஆர்,கலைஞர் என்கிற திராவிட இயக்க அரசியல் தலைவர்கள் தான். ஆனால், 2000 ஆவது ஆண்டுக்குப் பிறகு ஆதிதிராவிடர் எனும் கலைச்சொல் அட்டவணைச் சாதிகளில் ஒரு பிரிவினை மட்டுமே குறிப்பதாயிருக்கிறது என்றும் மற்ற எல்லா பிரிவினரையும் குறிக்கும் சொல்லாய் இல்லை. எனவே அம்பேத்கர் பயன்படுத்திய ஆங்கிலத்தில் Scheduled Caste என்பதற்கு இணையாய் பட்டியலினத்தவர் அல்லது சாதிகள் இன்றே இருக்க வேண்டும் என்று குறுங்குழுவாக நின்று குதர்க்கம் பேசினர் சிலர்.

ஆதி திராவிடர் என்பதில் இருந்த வரலாற்றுச் சத்தை இழந்தாலும் இழப்போமே ஒழிய அம்பேத்கர் பயன்படுத்திய உண்மையான நோக்கத்தில் இருந்தே விலகி Scheduled என்பதன் சமூக, அரசியல், சமூகவியல் சாரத்தையும் இழக்கத் துணிந்து விட்டனர்.

கலைச் சொல்லை மட்டுமா காத்தார் கலைஞர்? AI படம் 1.1

நிரல் படுத்துதலின் நெடிய வரலாறு:

அம்பேத்கர் scheduled என்ற கலைச்சொல்லைப் படைத்தளித்ததன் கருத்துருவாக்கச் சூழல் என்ன? இந்து வர்ண சாதி அமைப்பில் அவர்ணர்கள் என்று சுட்டி வெளியே நிறுத்தப்பட்ட மண்ணின் மைந்தர்களின் பல்வகைத் திறன்களும் ஆற்றல்களும் உழைப்பு நிலையில் இந்து நால்வர்ண சாதி அமைப்பில் காலந்தோறும் நன்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டே வந்துள்ளது. ஆனால் சமய சமூக, அரசியல் பொருளியல், அதிகாரம் என்று வரும்போது மட்டும் உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையின் பெயரால் விலக்கி வைப்பது நேர்கிறது. தலித்துகளது அதிகாரம் பெறும் உரிமையைச் சிதறடிப்பதற்காகவே மையத்தை நோக்கிக் குவிய விடாமல் விளிம்பை நோக்கி விலக்கித் தள்ளுகிறார்கள். அதற்கு இசைவாக கருத்தியல் தளத்திலும் வரலாற்று வழியிலும் தத்துவமற்றவர்கள், கலை இலக்கியமற்றவர்கள், நாகரிகம் (civilization, tradition) பண்பாடு அற்றவர்கள் இவற்றுக்கெல்லாம் அடி ஆதாரமாக எழுத்தறிவு மரபு அற்றவர்கள் (literacy tradition) முத்தாய்ப்பாக நெடுங்காலமாகவே இப்படி ஒழுங்கும் செம்மையாக்க நாட்டமும் இல்லாமல் போய்விட்டபடியால் நவீன வாழ்வியல் களங்களில் போட்டி போட்டு முன்னேறும் ஊக்கமற்றவர்கள் என்று சனாதன நால்வர்ண சாதி கருத்தியலாளர்கள், கருத்துருவாக்கம் செய்யத் தொடங்கியிருந்தனர். இந்த அதிகார வெறிபிடித்த கற்பிதத்தை நொறுக்கித் தள்ளும் நோக்கோடு தான் மண்ணின் மைந்தர்கள், தலித்துகள் காலந்தோறும் இயற்கையின் அமைவுக்குள் சிறப்பாக வினைபுரிந்து தான் உணவு, உடை, உறையுள் என பல ஆக்கங்களை சமூகத்திற்கு படைத்தளிக்கின்றனர். ஆனால், அவர்களது உழைப்பின் முழு பலனும் பல அடிப்படை உரிமைகளும் சில சிறப்பு உரிமைகளும் வேறு எங்கோ போய் சேர்ந்து விடுவதால் மிகத் தனித்துவமானதோர் அடிமை நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர்.

மெய் நடப்பில் தலித்துகள் தொடர்ச்சியான தன் ஒழுங்கும் செம்மையாக்க நாட்டமும் மானிடப்பற்றுறுதியும் கொண்டவர்கள் அதன் கடந்த கால சாட்சியம் தான் அவர்கள் பூர்வ பௌத்தர்கள் என்பது என்று வாதிட்டு மையத்தை நோக்கி குவிவதில் ஒழுங்குறுதி மிக்கவர்கள், சீர்மை மிக்கவர்கள், செம்மை அடைதலுக்கு இசைவான குழுப் பிணைப்பு கொண்டவர்கள் என்ற பொருளில் scheduled “நிரல்படுத்தப்பட்டது” என்ற சொல்லைப் படைத்தளித்து பயன்படுத்தி வந்தார். ஒரு வேளை கெடு வாய்ப்பாக முன்பு சுமத்தப்பட்ட அடிமைத் தளையின் காரணமாக கடந்த காலத்தில் இவற்றில் ஏதேனும் விடுபட்டிருந்தாலும் எதிர்காலத்தில் அந்தக் கலைச்சொல்லை நடு அச்சாக பற்றிக் கொண்டே முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதுதான் அவரது விழைவு. இக்கருத்துகளை அவரது பல ஆக்கங்களின் விவாதச் சாரத்தில் கண்டுணரலாம்.

தற்குறித்தனத்தை தாங்கிப் பிடிக்கவா தமிழ்ப் பற்று?

ஆனால்,அவரது இந்த கருத்து உருவாக்கத்திற்கான வரலாற்றுச் சத்துகளை எல்லாம் இழந்து விட்டு Scheduled என்பதற்கு “அட்டவணை- பட்டியல்” என்று சக்கையாக மொழிபெயர்ப்பதும் ஆதிதிராவிடர் என்ற தமிழ்நாட்டின் வரலாற்று வழிபட்ட கலைச்சொல்லை “திராவிட” ஒழிப்பில் முடிகிறது என்கிற ஒரே காரணத்திற்காக ஆழமான காழ்ப்போடு எதிர்த்து விட்டு வேண்டுமானால் தொல் தமிழர் என்று பயன்படுத்தலாம் என்று போலி மொழி- இன ஓர்மையோடு அம்பேத்கரின் சமூக வரலாற்று அடிக் கருத்தைச் சிதைக்கிறார்கள். ஆதி-திராவிடர்க்கு மாற்று தொல் தமிழராம்? அறிவு எல்லை மீறிய அபத்த மொழிப் பற்றி இல்லையா இது?

தொல் தமிழர் என்கிற கலைச்சொல் வரலாற்று துறையில் ( history department) பயன்படுத்தக்கூடியது.எழுத்தறிவு தோன்றுவதற்கு முன் ( ஏடறிந்த வரலாறு என்று காரல் மார்க்ஸ் குறிப்பிடுவது) கல், மரம், உலோகம் ஆகியவற்றை பயன்படுத்தி வாழ்ந்து வந்த மொத்த தமிழ் பேசும் மக்கள் தொகுதியையும் (Tamil ethinic group) குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருவதாகும். இதில் தலித்துகள் என்கிற குறிப்பான குழுவினது கடந்த காலம் எங்கே சிறப்பாக வெளிப்படுகிறது. ஆனால், ஆதிதிராவிடர் என்கிற கலைச்சொல் ஆரியர் x திராவிடர் என்கிற பண்பாட்டு இருமை எதிர்வுகளும் அதில் அம்பேத்கர் சுட்டியது போல் தனித்துவமான அடிமைத் திணிப்பும் நன்கு தொனிப்பதை யார் ஒருவரும் எளிதாக உணரலாம்.

உண்மையில் இந்தக் கலைச் சொல்லை தீண்டாமைக்குட்பட்ட அத்தனை குடிகளுமே இயல்பாக ஏற்றிருக்க வேண்டும்.ஆனால் அம்பேத்கருக்கு முன்பே பண்டிதர் அயோத்திதாசர் வழியாக இந்தக் கருத்துலகத்தை நன்கு அறிந்து வந்திருந்த “பறையர் குடி” இந்த “ஆதிதிராவிடர்” என்கிற கலைச்சொல்லை ஆகுபெயராக தாங்கியவுடன் மற்றைய தீண்டாமைக்குட்பட்ட குடிகள் அது “பறையர்களது” வரலாற்று வழிபட்ட இயற்பெயர் போலவும் அதைக் கொண்டே ஓரடையாளத்திற்குள் எல்லோரையும் அடக்கி தங்களுக்கெல்லாம் ஓரவஞ்சனை செய்து விட்டது போலவும் போலி கண்ணீர் வடிக்க தொடங்கி ஆதிதிராவிடர் கலைச் சொல்லை எதிர்க்கத் தொடங்கினர். திராவிட இயக்கத்தினரும் கலைஞரும் அந்த சொல்லுக்கும் அது சுட்டும் அம்பேத்கரிய வரலாற்று நோக்குக்கும் எப்போதும் சார்பாகவே இருந்து வந்தனர்.

தலித் வரவேற்கத்தக்கது, ஆதிதிராவிடர் வரலாற்று வழிபட்டது:

இதற்கிடையே மார்க்ஸ், லெனின் கருத்துகளில் பயிற்சி பெற்ற எழுத்தாளர் ஒருவர் 90 – களில் பரவலாகி வந்த தலித் என்கிற சொல்லையே கலைஞர் அறிந்திருக்கவில்லை என்றும் அந்த சொல் சுட்டும் புதுக் கருத்து நிலையிலும் அவருக்கு ஆர்வமில்லை என்று பொத்தாம் பொதுவாக கூர்ந்து ஆராயாமல் குற்றம் சாட்டினார்.

தலித் என்கிற புதிய கலைச்சொல் தமிழ் நிலத்தில் 90 – களில் பரவலாகி வந்ததையும் கலைஞர் உணர்ந்தே வந்திருக்கிறார் என்பது சான்றுகள் வழியாக எளிதாக மெய்ப்பிக்கத்தக்கதே (விரிப்பின் பெருகும்) ஆகும்.அதைக் கடந்து ஆதிதிராவிடர் என்கிற கலைச் சொல்லிலேயே கலைஞருக்கு அந்த முழு வரலாற்று பரிமாணமும் அறுபடாமல் கிடைத்து வருவதால் அதனை இழந்து விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு தொடர்கிறார்.தலித் என்கிற சொல்லோடும் கருத்து நிலையோடும் அவருக்கு எந்த பகையும் காழ்ப்பும் இல்லை.ஆனால் 90 – களில் சிற்றிதழ் செயல்பாட்டுத் தளத்தில் பரவலாகி வந்த சொல்லை முதன்மையாக அரசுத் துறையில் நிலைநிறுத்த ஒன்றரை நூற்றாண்டுகளாக புழங்கி வந்த ஆதிதிராவிடர் என்கிற கலைச்சொல்லை இழக்க அவர் தயார் இல்லை என்பதே அவரது நிலைப்பாடு.

அம்பேத்கர் தலைமை வகித்து இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டம் மட்டுமல்ல அதுவல்லாத அவரது அடிப்படை சிந்தனைகள் பலவற்றோடும் திராவிட இயக்கத்தவருக்கு நெடுங்காலப் பழக்கமும் பயிற்சியும் உண்டு. கலைஞருக்கு அம்பேத்கரியலில் ஓர் ஆட்சியாளராக நல்ல ஓர்மை உண்டு. அம்பேத்கருக்கு முன்பே பலரும் தலித்துகளின் மேம்பாடு, முன்னேற்றம், விடுதலை என்று சிந்தித்தாலும் அம்பேத்கருடைய சிந்தனை வழியாகத் தான் தலித்தியம் ஒரு சமூக விஞ்ஞான தகுதியை அடைகிறது. ஆனாலும் அம்பேத்கரின் விஞ்ஞானபூர்வமான தலித் விடுதலை வாதம் வெற்றி பெற அவர் பிறந்த மராட்டியத்திலோ சிறப்பான சீர்திருத்த அறிவு மரபு கொண்ட வங்கத்திலோ வேறு மாநிலங்களிலோ சாதகமான சூழல் இன்றும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் விஞ்ஞானபூர்வமான தலித் அரசியலின் வளர்ச்சி நிலைபெறுவதற்கு களமாக திராவிடவியலால் பதப்படுத்தப்பட்ட சமூகப் பண்பாட்டுச் சூழல் இங்கு நிலவுவதைச் சொல்லலாம். கலைஞரின் ஆட்சியியல் அதில் சிறப்பான பங்களிப்பு செய்து வந்துள்ளது என்பதை தமிழ்நாட்டின் தலித் அரசியல் கருத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியலாளர்கள் யாரும் மறுப்பதில்லை.

-பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம்
தி. அ. பெ அமைப்பாளர்

Share This Article