விடுதலைப் போரின் முன்னோடி திப்புவின் ஆட்சித்திறன் 2

12 Min Read

‘இறைவன் அரசு’ என்று தனது ஆட்சியையும், ‘இந்தியாவை பிரிட்டிஷ் அடிமைப்படுத்துவதிலிருந்து தடுக்க அனுப்பப்பட்ட வீரன்’ என்று தன்னையும் பிரகடனப்படுத்தி ஆட்சி புரிந்தவர் திப்பு, தனது படையைக் கூட ‘புனிதப்படை’ என்றே குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஷ் சரித்திர ஆசிரியர்கள் திப்புவை மிகவும் தரக்குறைவாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தாலும் தனது அரசை இறைவவனின் திருக்கரங்களால் பாதுகாக்கப்பட்டது என்றே அவர் நம்பினார்.

அன்றைய காலகட்ட அரசர்கள் அனைவருக்கும் உண்டான அல்லது அனுமதிக்கப்பட்ட குண இயல்புகளும், குணக்கோளாறுகளும் திப்புவிடம் காணப்படுவதை இன்றைய ஜனநாயகச் சூழலில் பார்த்து எடைபோடுவது தவறு. தனது ஆட்சிக்குத் துரோகம் செய்ய நினைத்தவர்கள் எதிரிகளுடன் உறவாடியவர்கள் ஆகியோரிடம் கொடுங்கோலனாகத் திப்பு நடந்துகொண்டார் என்பதைக் குறிப்பிடுவதில் தவறு ஏதும் இல்லை.

வருவாய் மற்றும் நிதித்துறை, ராணுவத்துறை, சட்டத்துறை, வணிகத்துறை. கடல்துறை, நிதிக் காப்பகம் மற்றும் நாணயத் துறை என ஏழு துறைகளாகப் பிரிக்கப்பட்டு திப்புவின் அரசு திறம்பட நிர்வகிக்கப்பட்டது. கடல் வளத்தைப் பற்றி எந்த இந்திய அரசும் அக்கறை செலுத்தாத அந்தக் காலத்தில் கடல் கடந்து வந்த அன்னியரின் ஆதிக்கத்தைத் தடுக் கடல் வலிமையை வளர்க்க திப்பு தனித்துறையை உருவாக்கியது அவரது தொலைநோக்கைப் பிரதிபலிக்கிறது.

உள்ளாட்சி திறம்பட நடைபெற ஒவ்வொரு பகுதிக்கும் அமல்தார் (ஆட்சித் தலைவர்) தாரப்தார் (ராணுவத் தலைவர்) சிரஸ்தார் (கணக்குத் தலைவர்) என தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

திப்பு தமது நாட்டின் கடல் சார்ந்த பகுதியை ‘யான் சுபா’ எனவும் மலைப்பகுதியை ‘தாரன் சுபா’ எனவும், சமவெளியை ‘காப்ரா சுபா’ எனவும் மூன்று வகைகளாகப் பிரித்தார் பாரசீக மொழியை ஆட்சி மொழியாக ஏற்பதால் உலக அளவில் புகழ்பெற்ற சிறந்த இஸ்லாமிய அரசை நிறுவ முடியும் என்று நம்பினார். பல நகர்களின் பெயரை அழகிய பொருள் பொதிந்த பார்சிய மொழிக்கு மாற்றினார். பாரசீக மொழியைப் பள்ளிகளில் பயிற்றுவித்தார். தனது அரச நாணயங்களிலும் பார்சி வாசகங்களைப் பொறித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் உருவானது எனினும் குடிமகன் நேரடியாக சுல்தானிடம் மனுக் கொடுக்கவும் வாய்ப்பளித்தார். அவற்றைப் படித்து, குறிப்புடன் தமது பார்வைக்கு உடன் அனுப்ப அதிகாரிகளை நியமித்திருந்தார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக் கருதினார். இந்து இஸ்லாமியச் சட்டங்கள் இரண்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டன. ராஜத்துரோகிகள் யாராக இருந்தாலும், மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்கவும். சுதந்திரமாக விவாதிக்கவும் திப்பு தயாராக இருந்தார். அவர்களின் கருத்துக்களை மிகுந்த கவனத்துடன் கேட்பார். தனது வாதத்திறமையாலோ அதிகாரத்தாலோ அவர்கள் கருத்தை ஒடுக்க நினைக்காதவர், புகழ், பேராசை என எவற்றுக்கும் ஆட்படாதவர், மக்களுக்கான உரிமைகள், நீதி ஆகியவற்றை உடன் கிடைக்கச் செய்தார்.

திப்பு வெள்ளையர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே விளங்கினார். அவர்களை அச்சுறுத்தும் வகையில் எங்கும் எதிலும் புலிச்சின்னத்தைப் பொறித்தார். துப்பாக்கி, பீரங்கி, ஆவணங்கள், சிம்மாசனம் என சகலத்திலும் புலி கர்ஜித்தது. படைவீரர்களின் உடைகளைக் கூட புலிவரியுடன் அமைத்தார்.

புலியின் தலை கொண்ட அவரது தங்க சிம்மாசனத்தின் மேல் ஹூமா என்கிற சொர்க்கலோகப் பறவை வைரங்களுடன் ஜொலித்தது.

திப்பு ஓர் உன்னத இயற்கை நேயராக, விலங்கினக் காவலராகத் திகழந்தார். பறவைகள், விலங்குகள் யாவும் மனிதரைப் போலவே கடவுளால் படைக்கப்பட்டன அவற்றை அழிப்பதால் உலகின் சமன் நிலை பாதிக்கப்படும் என நம்பினார். கானுயிர்க் காப்பகங்கள் பலவற்றை அமைத்தார் சில வகை விலங்குகளை வேட்டையாடக் கூடாதெனத் தடுத்தார். காவிரியின் கரையில் அமைந்திருந்த ஆயுதத் தொழிற்சாலை ஒன்றின் கந்தகக் கழிவுகள் ஆற்றுமீனை அழித்து விடக்கூடும் என்பதால் அதை மாற்றி நிறுவச் செய்தார்.

உன்னத புகழுக்குரிய இறைவன் வெறும் களிமண்ணுக்கு உயிர்தந்து உயிர்கள் அனைத்தையும் உருவாக்கினார். சிறப்புமிக்க மனித இனம் அதை ஆட்சி செய்து காப்பதற்காகவே திறமையும் உரிமையும் தந்தார். அதையுணர்ந்து பலவீனமானவர்களிடம் கருணையுடனும், ஆதரவற்றவர்களிடம் அன்புடனும் அனைத்துயிர்களின் நலனையும் பாதுகாப்பதும் நமது கடமை’ என்று அறிவித்தார் அவர்.

திப்பு அளவு முறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். தொலைவை அளக்க கோஸ் (KOS) என்ற முறையை அறிமுகப்படுத்தினார். 2 3/4 மைல்கள் கொண்டது 1 கோஸ், ஒரு அஞ்சல்காரர் 33 3/4 நிமிடங்களில் 1 கோஸ் தொலைவு செல்லலாம் எனவும் கணக்கிட்டார்.

முகமதிய நிலவு நாள்காட்டிக்கு பதில் இந்துக்களின் சூரிய நாள்காட்டியை ஏற்றார். மாதங்களுக்கும் புதிய அகரவரிசையில் புதிய பெயர்களை வைத்தார்.

தனது அதிகாரிகளுக்குத் துல்லியமான, விரிவான குறிப்புகளை எழுதி அனுப்புவார். தனது கையொப்பமாக ‘நபியே எஜமான்’ என முத்திரை இடுவது அவரது பழக்கம். ஓய்வு, பொழுதுபோக்கு என்பனவற்றை மறந்த கடும் உழைப்பாளி. தனது ராணுவத்திற்கு இரவில் போரிடுவது. காடுகளில் சமவெளிகளில் போரிடுவது. ராணுவ மரியாதை செலுத்துவது போன்ற அனைத்து விஷயங்களிலும் கவனமாக உத்தரவுகளைப் பிறப்பிப்பார்.

விவசாயம் நாட்டின் ஜீவநாடி என்பதையுணர்ந்து விசாயிகளுக்குத் தாராளமாக கடன் வழங்கினார். விவசாய வருவாய்த்துறைக்கு 127 விதிகளை விதித்தார்.

உழுபவனுக்கே நிலத்தை உடைமையாக்கச் செய்தார். தரிசாக நிலத்தை வைத்திருக்கும் மேல் சாதியினரின் நிலங்கள் உழுபவருக்குத் தரப்பட்டன. வறுமையும், பஞ்சமும் நமது அறியாமை, சோம்பல் ஊழல் இவற்றின் விளைவே என்றார். விவசாயக் கடனைத் தாமதமின்றி வழங்கச் செய்தார். அமல்தாரர்கள் கடுமையான தண்டனைகள் தரக் கூடாது மற்றும் மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என உத்திரவிட்டார்.

1790-ல் காவிரி நடுவே ஓர் அணை கட்ட அடிக்கல் நாட்டினார். அதில் இறைவனின் இந்த அரசு கட்டும் அணையின் நீரால் தரிசு நிலங்களை விளைநிலமாக்குவோர்க்கு நிலம் உடைமையாகும் என்றார். குத்தகைதாரர் 15 ஆண்டுகள் ஒரு நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்தால், அவர்கள் சரியான குத்தகைப்பணம் கொடுத்திருந்தால் அவர்களை வெளியேற்றக் கூடாது என உத்திரவிட்டார்.

விளைச்சல் மேற்கொள்ளாத நிலங்கள் அரசால் எடுக்கப்பட்டு நிலமில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டன. புதிய விளைநிலங்களை உருவாக்குவோர்க்கு 3 ஆண்டுகள் வரிவிலக்கு அளித்தார். விளைச்சல் தவ ம் போதும் வறட்சியின் போதும் வரி வசூலிக்காமல் உதவினார். விவசாயிகளின் வாழ்க்கைத் தரம், விளைச்சல் இவற்றுக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டது.

திப்புவிடம் ஆலோ கர்களும், நம்பிக்கையாளர்களும் மட்டுமே இருந்தனர். அமைச்சர்கள், கண்காணிப்பாளர்கள் என எவருமில்லை. தமது ஆட்சியில் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பரிசுகள் வழங்கி உற்சாகமூட்டினர்.

சிறந்த சாலைகள் அமைத்தார். படைகளின் விரைவான முன்னேற்றத்திற்கும். வியாபாரத்திற்கும், அவை பெரிதும் உதவின. 10 மைக்கு ஓர் ஓய்வு விடுதி கட்டினார். வழி நெடுகக் காவலர்களை நியமித்துப் பாதுகாப்பான பயணத்திற்கு வழி செய்தார். மலபார் முழுமையையும் இணைக்கும் சாலைகள் அமைத்தார். அவரது எல்லைக் காவல் படை பலம் பொருந்தியதாக இருந்தது.

மக்களின் மகிழ்ச்சி, கலை, கலாச்சார முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தினார். அடிப்படைத் தேவையான உணவு, உடை, அனைவருக்கும் வேலை கிடைக்கச் செய்து பொருளாதார, சமூக வளர்ச்சி முன்னேற்றத்திற்குத் திட்டமிட்டார் தொழில்களில் புதுமையைப் புகுந்த முயன்றார்.

பட்டு உற்பத்தியில் மைசூர் முதலிடம் பெற பிரெஞ்சு விற்பன்னர்களை அழைத்துப் பயிற்சி தந்தார். முத்து உற்பத்தி, உயர்தரக் குதிரை, கோவேறு கழுதை உருவாக்கம் இவற்றுக்கும் பிறநாடுகளின் தொழில்நுட்பத்தை நாடினார். தொழில் வளர்ச்சிக்கு தொழில் அதிபர்கள் திறந்த மனதுடன் ஆலோசனை கூறவும் செயல்படவும் வேண்டினார். தொழில் முனைவோரின் வளமே நாட்டின் வளம் எனக் கருதினார். புதிய தொழில்கள் உருவாக்கத்தின் மூலம் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க விரும்பினார்.

திப்புவின் அரசே முதன்மையான வர்த்தகராக பொறுப்பு ஏற்றது. உற்பத்தியாளர்களிடமிருந்து அரசே நியாய விலைக்குப் பொருள்களை வாங்கவும். மக்களுக்கு விற்கவுமான ‘அரசு முதலாளித்துவம்’ வளர்த்தார். இதன் காரணமாக அன்னிய நாட்டு வர்த்தகர்கள் தமது நாட்டு உற்பத்தியாளர்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்காமல் தடுத்தார். குறிப்பாக எதிரிநாடுகளுடன் வர்த்தகம் செய்வதைத் தடைகூடச் செய்தார்.

பிற நட்பு நாடுகளுடன் வணிகத் தொடர்பை வளர்த்தார். அரசு தொழில் முயற்சிகளுக்காக மக்களிடமிருந்து முதலீடுகளை வரவேற்றார். சிறிய முதலீடுகளுக்கு அதிக லாபமும், அதிக முதலீட்டிற்கு குறைந்த லாபமும் தந்து சமத்துவத்தை வளர்க்க முயன்றார். தமது நாட்டின் விளைபொருள்களான மிளகு, ஏலக்காய், சந்தனம், தந்தம், பட்டு இவற்றிற்கு நல்ல விலை கிடைக்கச் செய்தார் என்று வரலாற்றாசிரியர் கோபால் எழுதுகிறார்.

வணிகர்கள் பிறநாடுகளுக்குச் சென்று ஏற்றுமதி வியாபாரம் மேற்கொள்ளவும் உற்சாகப்படுத்தினார். ஏற்றுமதியாளர்களுக்கு உதவிகள் பல வழங்கப்பட்டன. பல நாடுகளில் அவர்கள் தங்கவும் அவர்களுக்கு உதவவும் அலுவலகங்கள் அமைக்கப்பட்டன.

நிதி நிர்வாகத்தில் திப்பு அதிகக் கவனம் செலுத்தினார். பல சீர்திருத்தங்களைப் புகுத்தினார். வருவாய்த் துறைக்கான அவரது சட்டங்கள் முன்மாதிரியானவை; அவரது ஆழ்ந்த அறிவையும், தொலைநோக்கையும் உணர்த்துவன. தமது அரசின் கீழ் இருக்கும் கடைநிலை ஊழியரின் சம்பளம் குறித்துக் கூட அவர் சிந்தித்தார். ‘மிகுந்த நிதி நெருக்கடிக்கு அவர் உள்ளாகி இருந்த காலகட்டத்தில்கூட பொதுமக்கள் துன்புறுத்தப்படாமல் மகிழ்ச்சியுடனேயே வாழ்ந்தனர். பிற அண்டை நாட்டு மக்களை விட அவரது குடிமக்கள் நிறைவான வாழ்க்கையைப் பெற்றிருந்தனர் என்கிறார் டாக்டர். கோபால்.

தான் ஒரு சிறந்த இஸ்லாமிய அரசனாகத் திகழ விரும்பினார். மனித குலத்தின் மேன்மைக்கும், சுயமரியாதைக்கும், சகோதரத்துவத்திற்கும் ஆதாரமாக இறைவன் வழங்கியவை இஸ்லாமியத் தத்துவங்கள் என ஆழமாக நம்பினார். திருமறையை மக்கள் ஆழ்ந்து படிக்கத் தூண்டினார். பல பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஒருவனே என்பதை ஆழமாக நம்பினார். உலக மக்களை ஒருங்கிணைப்பதாக மதங்கள் இருக்க வேண்டுமென விரும்பினார். தமது மதத்தைக் கூட தமது ஆதிக்கப்பரவலுக்கும் லாப வேட்கைக்குமான சாதனமாகவே பிரிட்டிஷார் பயன்படுத்துகின்றனர் எனச் சாடினார். இந்திய இன மக்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கவும், பகைமை கொள்ளவும் அவர்கள் காரணமாயினர் என்று குற்றஞ்சாட்டினார்.

ஒரு நல்ல இஸ்லாமியனாக வாழ்வதற்கு அடிப்படை மது ஒழிப்பு என்பதால் பூரண மதுவிலக்கை அமலாக்கினார். பாங் எனும் போதைப்பொருளைத் தடை செய்தார். சாராயம் காய்ச்சுவோருக்கு மாற்றுத்தொழில் உருவாக்கினார். மதுவால் வரும் வருமானத்தைவிட மக்களின் உடல் தலமும் மனவளமும் அதிக மதிப்புமிக்கவை என்றார்.

பின்னாளில் திப்புவுக்குத் துரோகம் செய்த மீர் சாதிக் “மதுவிலக்கால் உண்டாகும் வருமான இழப்பு பற்றிக் குறை கூறியபோது மது ஒழிப்பு எனது ஆத்மார்த்தமான லட்சியம். நமது மக்களின் ஆரோக்கிய வாழ்வும், ஆன்மீக மேன்மையும் இளைய தலைமுறையினரின் பண்பாடும். பொருள் இழப்பை விடவும் மதிப்பு வாய்ந்தவை” என்று உறுதிபடக் கூறினார்.

மதத்தையும், அரசியலையும் கலக்காத மதச்சார்பற்ற மன்னன் திப்புவே. ஆனாலும், அவர் தன்னை ஒரு புனிதமான இஸ்லாமியராகவே வடிவமைத்துக் கொண்டார். இந்துக்கள் பலர் அவரது அரசில் பல மேலான பதவிகளை வகித்தனர். இந்துக்களுக்கு சுதந்திரமான வழிபாட்டு உரிமைகள் இருந்து வந்தன.

தவறு நடக்கும்போது இஸ்லாமியர்கள் என்பதற்காக அவர் என்றுமே தனிச்சலுகை எதுவும் காட்டியதில்லை. இந்துக் கோயில்கள் பல அவரது மானியங்களைப் பெற்றுத் திகழ்ந்தன. சிருங்கேரி மடத்தை மராட்டிய மன்னர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றி சங்கராச்சாரியரின் ஆசிகளை இறுதிவரை பெற்றவர் திப்பு. மத விவகாரங்களைக் கண்காணிக்கத் தனி அமைச்சகத்தை நிறுவியவர் திப்பு.

சீரங்கப்பட்டணத்தில் சிறப்புடன் திகழும் ரங்கநாதர் கோவிலின் காலை பூஜை முடிந்தவுடன் ஒலிக்கும் முரசின் ஒலி கேட்டு இறைவனை வணங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் திப்புவும் அவரது தந்தை ஹைதர் அலியும். அவர்கள் வணங்கும் அல்லாவும். ரங்கநாதரும் வேறுவேறு என அவர்கள் கருதவில்லை.

மஸ்கட்டில் மசூதி கட்ட பெரும் நிதி உதவி வழங்கினார் திப்பு. ‘இறைவனின் தோட்டத்து மலர்கள் பல நிறம் கொண்டவை. அவை அனைத்தும் அன்பு எனும் தேன் நிறைந்தவை அதுபோலவே மதங்களும் அன்பை வளர்க்கும் பல நெறிகள் என்கிற குரானின் வாசகத்தை உணர்ந்து அனைத்து மதங்களையும் போற்றினார் திப்பு என மஸ்கட்டிலிருந்து வந்திருந்த மௌல்வி புகழ்ந்தார். (குர்ஆனில் இந்த கருத்தில் எந்த வசனமும் இல்லை)

திப்புவின் நீதித்துறை முறையான விசாரணை, நியாயமான தண்டனை மேல்முறையீடு செய்வதற்கான உரிமை ஆகியவற்றிற்கு வழி வகுத்தது. மக்களுடன் முரண்படுவது என்பது நமக்கு எதிராக நாமே போர் புரிவதாகும். மக்களே நமது கேடயமும் வாளும் ஆவார்கள் அவர்களே நமக்கு வாழ்வு தருபவர்கள். நமது பலம் முழுவதையும் நமது எதிரிகளை அழிக்கவே நாம் பயன்படுத்த வேண்டும்’ என்பது திப்புவின் கொள்கை.

பிரிட்டிஷாருடன் சேர்ந்து துரோகம் செய்த 16 நபர்களை அவர்களது முந்திய சேவை கருதி, அவரது அமைச்சர்கள் எதிர்த்த போதும் மன்னித்தார். ‘சவுக்கடி தருவதும், துன்புறுத்துவதும் மனிதாபிமானமற்ற தண்டனைகள். அது குற்றவாளியை மேலும் புண்படுத்துவதேயாகும். அதனால் பயன் எதுவும் விளையப் போவதில்லை. அவர்கள் அந்தத் தண்டனை வழங்கியவரை நிந்திப்பதே விளையும்’ என்று கருதினார். ஆனால், தீர விசாரணை செய்து முடித்த பின் வழங்கும் தண்டனையில் எந்தத் தொய்வும், தயக்கமும், கருணையும் இருக்கக் கூடாது என்பது அவரது கட்டளை.

‘சட்டப்படியான விசாரணையும், தண்டனையும் நமது நன் மரபைப் பாதுகாக்க உதவ வேண்டும். மக்களுக்குக் கடமை, உரிமை, பொறுப்பு ஆகியவற்றை உணர்த்தும் வலிமை உள்ளதாக சட்டம் இருக்க வேண்டும்’ என ஆணையிட்டார்.

மிகுந்த கலை உணர்வும், அழகுணர்வும், கற்பனை வளமும மிக்கவர் திப்பு. அவரது கோடை அரண்மனை முகலாயச் சக்கரவர்த்திகளின் மாளிகை போல் அழகிய தோட்டம் சூழ, ஒவ்வொரு அங்குலமும் அழகிய வண்ண ஓவியத்துடன் மிளிர்வதை இன்றும் கூடக் காணலாம். சுவரில் ஓட்டும் முறையை பிரான்ஸிலிருந்து கற்றுவந்து பயன்படுத்தினார். திப்புவின் மூன்று அரண்மனைகளில் ஒன்று வெற்றி பெற்ற பிரிட்டிஷாரால் முற்றாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

ஹைதர், திப்பு மற்றும் அவரது தாயார் புதைக்கப்பட்ட “கும்பாஸ்” எனும் திப்புவால் கட்டப்பட்ட சமாதி கலை அழகுடன் திகழ்கிறது.

நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளி என தனது அரசில் பள்ளிகள் பல உருவாக்கிக் கல்வி தர முன் வந்தார். ‘தனது பிள்ளையைப் படிக்க வைக்காத தந்தை தன் கடமையை மறந்தவன் ஆகிறான்’ என்பது அவரது கட்டளை. பள்ளிகளில் பார்சி மொழி கற்பிக்கப்பட்டது மதக்கல்விக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது.

திப்பு நல்ல நூல்களைத் தேடிப்படிக்கும் இயல்பு கொண்டவர். அவரது நூலகம் சிறப்பு வாய்ந்தது. பிற நாடுகளிலிருந்தும் புத்தகங்களை வாங்கிச் சேகரித்தார். 2000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவரது நூலகத்தில் இருந்தன.

திப்பு ஒரு பெரும் சீர்திருத்தவாதி. தொன்மையான கலாச்சாரத்தைப் போற்றுபவர். எனினும் நாகரிகமற்ற மூடத்தனங்களை எதிர்த்தவர். மலபாரில் பெண்கள் மேலாடை இல்லாமல் இருப்பதைப் பெண்கள் மீதான அநீதி என்று கருதினார். வறுமைதான் அதற்குக் காரணம் என்றால் அரசு அதைப் போக்க முன்வர வேண்டும் என விரும்பிய மனிதாபிமானி திப்பு.

சீர்திருத்தங்களை மக்கள் மனம் புண்படாத வகையில் நட்புரீதியில் அவர்கள் மத உணர்வுகளைக் காயப்படுத்தாத வகையில் கொண்டுவர விரும்பினார்.

‘ஏழை மக்கள் தங்கள் வயிற்றுக்காக இரவும், பகலும் உழைக்கின்றனர். உழைத்துக்கொண்டே இறந்து போகின்றனர். அவர்கள் ஓடும் ஆறுகளின் அழகைக் காணவோ, மேகத்திரள்களைக் கண்டு மகிழவோ, வனங்களையும். சோலைகளையும் ரசிக்கவோ, சிலாகிக்கவோ அவர்களுக்கு நேரமில்லை. யார் ஆண்டாலும் அவர்கள் வாழ்க்கை அப்படியேதான் உள்ளது’ என்றார். ஆனாலும், திப்புவின் ஆட்சியில் அந்த ஏழை மக்கள்கூடத் தங்களது கருணைமிக்க மன்னனை அறிந்திருந்தனர். அவரை மரியாதையுடன் போற்றினர். ‘மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு போதைப் பொருட்களை ஒழிக்க முன் வந்த ஒரே மன்னன் திப்பு’ என்று போற்றுகிறார் எட்வர்ட் தாம்ஸன்.

திப்புவின் அரசாட்சியில் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்வுடன் நிறைவாழ்வு வாழ்வதைக்கண்ட பிரிட்டிஷார் அதிசயித்தனர்.

நமது மக்கள் இந்துவானாலும் முஸ்லீமானாலும் அவர்களது பெருமையும், மரபும் பாதுகாக்கப்படும். நமது எதிரிகளின் வலிமையையும் வஞ்சகத்தையும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்க வேண்டும். சுயமரியாதையுடனும், வீரத்துடனும் நிமிர்ந்து நிற்போம். விழுப்புண்களைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொள்வோம். சுதந்திரத்தை இழப்பதை விடவும் மரணம் இனிமையானது என்பதை உரக்கக் கூறுவோம்’ இது திப்புவின் தன்மான முழக்கம்.

திப்புவின் இந்தத் தன்மான உணர்வும், சுய சார்பும் சுய மரியாதையும் இன்றைய இந்தியர்களுக்கு உரித்தானதாகட்டும்.

முனைவர். பெ. சின்னையன்,

எம்ஏ. எம்எட் பிஎச்டி

முன்னாள் பதிவாளர் -தமிழ்ப் பல்கலைக்கழகம்

Share This Article