குற்றாலநாதருக்கும் இஸ்லாமிய வணிகர்கள் கொடை
- இடம்: தென்காசியில் உள்ள அகமதுபேட்டையில் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளை வியாபாரம் செய்யும் மணியம் இசுமாயல் ராவுத்தர் உள்ளிட்ட இசுலாமிய வணிகர்கள் அனைவரும் குற்றாலம், குற்றாலநாதசுவாமி திருவிழாப் பூசைக் கட்டளைக்கும், திருநெல்வேலி காந்திமதியம்மனின் சிறுகாலைச் சந்தக் கட்டளைக்கும் கொடுத்த மகமைக் கொடையை இச்செப்பேடு கூறுகிறது.
- வியாபாரப் பகுதிகள்: அகமது பேட்டை வணிகர்கள் இல்லாமல், செங்கோட்டை, புளியரை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப்பேட்டை, சுரண்டை முதலிய ஊர்ச்சந்தையில் வியாபாரம் செய்யும் இசுலாமியர்களும் இம்மகமையை மாதா மாதம் அளிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
- எச்சரிக்கை: இதற்குச் சைவர்கள் ஏதேனும் தீங்கு செய்தால் கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்திலும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் தாய்க்கு வக்கனம் செய்த தோஷத்திலும் போவார்கள் எனக் கூறியுள்ளனர்.
- சான்றோர்கள்: பட்டயம் எழுதியவர் மாடன் செட்டியார். தானாதபத அன்னைநாதன் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளார். இசுலாமியர்கள் சார்பில் இசுமாயல் ராவுத்தர் கையொப்பமிட்டுள்ளார். கோயில் காவல்காரர் சந்திரகுமார் பிள்ளை செப்பேடு செய்துவைத்தார்.
- குறிப்பு: இரண்டு செப்பேடு தயார் செய்து குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலுக்கும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. கொடை அளித்த ஆண்டு கி.பி. 1795.
ஆதாரங்கள்
- மெக்கன்சி ஆவணம் ஆர் 5371-2: தமிழக அரசு கீழ்த்திசைச்சுவடி நூலகம், சென்னை-5.
- தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், மூன்றாம் தொகுதி முதல் பாகம், எண் 1089, பக்கம் 1079-4.
- Annual Report on Epigraphy (A) 43 of 1946.
செப்பேடு
- சாலிவாகன சகாப்தம் 1717 வருஷம் செல்லா
- நின்ற கொல்லம் 964 பெருஷம் கீலக வருஷம் கார்த்திகை மாதம்
- 25 தேதி சுவாமி குற்றாலநாதசுவாமி கட்டளைக்கு அசாதுவாலா சாயபு
- அனுமதுபேட்டை மணியம் இசுமாயல் ராவுத்தர் முதலான பல
- ரும் பேட்டையம் எழுதிக் கொடுத்தபடி பட்டயமாவது சுவா
- மிக்கு நித்தியப் பூசையிற் கட்டளை வந்து நடத்தவரும்
- படி படித்தரப்படிக்கு நடத்தவரும் வகைக்கு நாங்களெல்லாம்
- வசைக் கைத்துக்கொடுத்து ஏறுசாத்து இறங்குசாத்து
- கச்சை ஒன்றுக்கு கால்மாகாணி வீதமும் நடை ஒன்றுக்கு மரு
- வறும் சட்டை ஒன்றுக்கு மாகாணிப் பண வீதமும் இன்
- னொன்றுக்கு அரைமாகாணி வீதமும் இந்தப் படிக்கு திருநெல்
- வேலி காந்திமதியம்மன் சிறுகாலைச் சந்த மகைமைப்படிக்கு தென்
- காசி அகமது பேட்டையிலுள்ள வணிக சேகரம் செங்கோட்டை
- புளியரை பண்புளி கடையநல்லூர் சிவராமப்பேட்டை சுரண்டை
- சந்தை முதலானதுரையிலும் மகைமை வைத்துக்கொடுத்த படியி
- னாலே மாசம் மாசம் உள்ள பணம் துறைவழியும் கணக்குப்
- பார்த்து வாங்கிக்கொண்டு சுவாமிக்குக் கட்டளை யென்றென்றைக்
- கும் நடத்தவருவோமாகவும் இப்படி நடத்தவருகுத கட்டளை
- தர்மத்துக்கு யாதொரு வக்கனம் செய்தால் பழையமாயுள்ள
- பட்டயப்படிக்கு பஞ்சாட்சரத்துக்குட்பட்டவன் கங்கைைக்
- கரையில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்திலும் இஸ்லாமான
- முகமதய மதத்தில் தாய்க்கு வக்கனம் செய்த தோஷத்தலும்
- போவாராகவும் இந்தப்படி சம்மதத்து நித்தியப் பூசைக் கட்டளைக்கு
- பட்டய மெழுதிக்குடுத்தோம் பேட்டை மணியம் இஸ்மாயல் ராவுத்தர்
- முதலான பலரும் இந்தப் பட்டையம் எழுதினேன் மாடன் செட்டி
- யார்தா நாதபத அன்னைநாதன் எழுத்து இந்தப்படிக்கு இசு
- மாயல் ராவுத்தர் காருமாறு காவலர் சந்திரகுமார் பிள்ளை
- இந்தச் செப்புப்பட்டயம் செய்து எழுதிவைத்து 73
- நெதென்காசி சேகரம யலும் ஈடலை முத்துப்பிள்ளை தரி கூ
- டாசலபதி துணை
