முஸ்லிம்கள் மீதான பெரியாரின் விமர்சனம்

4 Min Read

முஸ்லிம்கள் மீதான பெரியாரின் விமர்சனம்

இஸ்லாத்தை ஆதரித்த காரணத்தினால் முஸ்லிம்கள் செய்யும் அனைத்தையும் பெரியார் அங்கீகரித்தார் என்றோ அதனை கண்டும் காணாமல் இருந்து விட்டார் என்றோ அர்த்தமில்லை. மூடப்பழக்க வழக்கங்களை கடுமையாக விமர்சனம் செய்த அவர், முஸ்லிம்களிடம் வழக்கத்தில் இருந்த மூடப்பழக்க வழக்கங்களையும விமர்சனம் செய்தார்.
முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாத்தை எடுத்துரைத்த அவர், மீலாது கூட்டங்களில் முஸ்லிம்களிடம் இருந்த குறைகளை எடுத்துக் கூறினார். பெரியார் அன்று விமர்சனம் செய்த வழக்கங்களை தற்போது முஸ்லிம் சமூகத்தில் உள்ள சீர்திருத்தவாதிகள் விமர்சனம் செய்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. (இஸ்லாம் இந்த மூடப்பழக்க வழக்கங்களை அங்கீகரிக்கவில்லை. ஆனால் இங்கிருந்த முஸ்லிம்களிடம் அந்த பழக்கங்கள் இருந்தன).

ஈரோட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அல்லாசாமி பண்டிகையை (முகர்ரம் பண்டிகை) விமர்சித்தார். அதனை தொடர்ந்து மறு வருடம் அங்கு அந்த பண்டிகை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பால்ய விவாக தடை சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதனை முஸ்லிம்களில் சிலரும் எதிர்த்தனர். அவர்களுக்கு எதிராக குடிஅரசு- அக்டோபர் 27, 1929 இதழில் கட்டுரை வெளியானது. ஆனால் அதே இதழில், திருவண்ணாமலையில் சுமார் 200 ஆதி திராவிடர்கள் இஸ்லாத்திற்கு மாறத் தயாராக உள்ளார்கள் என்ற செய்தியும் வெளியிடப்பட்டது.
மக்களுக்கு எவ்வித மத உணர்ச்சியும் இருக்கக் கூடாது என்று விருதுநகர் மாநாடு மத ஒழிப்பு தீர்மானத்தை விளக்கி குடி அரசு இதழில் (அக்டோபர் 23,1931) தலையங்கம் எழுதப்பட்டது. ஆனால் அதே இதழில் கோயம்புத்தூர் மீலாது உரையும் இடம்பெற்றிருந்தது. தனது கொள்கையையும் அரசியலையும் விட்டுக் கொடுக்காமலும் சமரசம் செய்யாமலும் இஸ்லாத்தை பெரியார் ஆதரித்தார் என்பதை இவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இஸ்லாத்தை ஆதரிப்பதால் திராவிட இயக்கத்தினரே தன்னை விமர்சனம் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையோ அதேபோல் முஸ்லிம்களிடம் உள்ள மூடப்பழக்கங்களை விமர்சனம் செய்தால் எங்கே முஸ்லிம்கள் தன்னை விட்டும் தூரமாகிவிடுவார்களோ என்றும் அவர் கவலை கொள்ளவில்லை.

மதமாற்றத்தை இவ்வளவு தூரம் வலியுறுத்திய பெரியார் ஏன் மதம் மாதவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

அம்பேத்கர் இது குறித்து தன்னிடம் கேட்ட போது இதற்கான பதிலை பெரியார் அளித்துள்ளார். சாதி ஒழிப்பிற்கு எதிராகவும் இந்து மத கடவுள்களுக்கு எதிராகவும் தான் மேற்கொள்ளும் கடுமையான பிரச்சாரங்களை இந்து மதத்தை விட்டு வெளியே வந்து செய்ய முடியாது என்பதே தான் மதம் மாறாததற்கு காரணம் என்கிறார் பெரியார். (டெல்லி பகார் கஞ்ச், டிசம்பர் 15, 1959)

அதேபோல் அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்கள் மீது சில விமர்சனங்களை பெரியார் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியுடன் முஸ்லிம்கள் நெருக்கமாவதை பெரியார் விரும்பவில்லை. திராவிட முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக் மற்றும் சுதந்திரா கட்சி ஆகியவை இடையே ஏற்பட்ட கூட்டணியையும் அவர் விமர்சித்தார். தாழ்த்தப்பட்டோரும் மைனாரிட்டிகளும் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக உள்ளனரே என்று அவர் புலம்பினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த ராஜாஜி சுதந்திரா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கியிருந்தார். ‘நான் ராமன். இவர்கள் எனது குரங்குப் படைகள்’ என்று ஒரு கூட்டத்தில் வெளிப்படையாகவே பேசினார் ராஜாஜி.

பெரியார் இஸ்லாத்தின் விரோதியா?

இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்த போதும் பெரியாரை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் எதிரியாக சித்தரிக்க சிலர் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அவர்களிடம் உறுதியாக ஆதாரங்கள் ஏதும் கிடையாது. பெரியாரின் பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும் தங்களுக்கு ஏற்ப திரித்தும் இந்த பொய்யை பரப்பி வருகின்றனர்.

திராவிடர் கழகத்தின் கும்பகோண மாநில மாநாட்டில் இஸ்லாத்தை அழிக்க வேண்டுமென பெரியார் தீர்மானம் நிறைவேற்றியதாக குறிப்பிட்டு இதனை தங்களின் பிரதான ஆதாரமாக முன்வைப்பர். கும்பகோணத்தில் நடைபெற்றது மாநில மாநாடும் அல்ல, அதில் பெரியார் கலந்து கொள்ளவும் இல்லை. அதில் இஸ்லாத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவும் இல்லை என்பதே உண்மையாகும்.

இது தவிர பெரியாரின் ஒன்றிரண்டு கட்டுரைகளில் வந்த சில வரிகளை குறிப்பிட்டு அவரை முஸ்லிம்களின் எதிரியாக திரிக்க முயற்சிக்கின்றனர். (தலித்கள் விசயத்திலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது). ஆனால் அந்த கட்டுரைகளை முழுமையாக வாசித்தால் இவர்களின் கூற்று எவ்வளவு அபத்தமானது என்பதை புரிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில் நாத்திக கொள்கை பேசிய பெரியார், பல கடவுள் வழிபாடு இல்லாத மூட நம்பிக்கைகள் இல்லாத, விக்கிரக ஆராதனை இல்லாத, தீண்டத்தகாதவர், வேதத்தை படிக்கக் கூடாதவர் ஆலயத்திற்குள், பொது இடத்தில் நுழையக் கூடாது என்று தடுக்காத, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்கும் இஸ்லாத்தை நேசித்தார். இழிவு நீங்கி கண்ணியம் பெற அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது வரலாற்று உண்மை.
சத்தியமங்கலம் மீலாது கூட்டத்தில் (18.08.1929) பெரியார் முன்வைத்த கருத்துகளை கூறி நிறைவு செய்வது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.”மதத்தின் காரணமாக இந்து முஸ்லிம்களுக்கு துவேஷம் சிறிதும் இருக்கக் கூடாது. எக்காரணத்தை முன்னிட்டோ, மதங்கள் என்றாலே முதலாவது, மற்றொரு மதத்தினிடத்தில் துவேஷம் கொள்ளுவதே கடமையாகியிருக்கின்றது. உதாரணமாக, இந்துக்கள் என்பவர் முகமதியர்களை வெகு இழிவாய் கருதுவது எனக்குத் தெரியும்.
கூட்டத்தில் ஒன்றாய் உட்கார்ந்திருப்பதாலேயே ஒற்றுமை இருக்கின்றது என்று நினைத்துவிடக் கூடாது. இந்நாட்டில் உள்ள எட்டு கோடி முகமதியர்களை அவர்களை அலட்சியம் செய்தோ, அவர்கள் கூட்டுறவில்லாமலோ, நமது நாட்டிற்கு நல்லாட்சியை உண்டாக்கி விடவோ திருப்திகரமான வாழ்க்கையை ஏற்படுத்தவோ முடியவே முடியாதென்றே சொல்லுவேன்.
எப்படியானாலும் இந்த நாட்டில் இருவரும் இருந்துதான் ஆக வேண்டும். பொதுவாக இந்தியாவுக்கு ஏற்பட்ட இலாப நஷ்டத்தில் இருவருக்கும் பங்கு உண்டே தவிர முகமதியர்கள் எவ்விதத்திலும் விலக்கப்பட்டவர்கள் அல்ல. நாட்டின் நண்மையைக் கருதி இந்துக்களுடன் ஒத்துழைத்துத் தீர வேண்டிய அவசியம் அவர்களுக்கு உண்டு.
மூடப்பழக்க வழக்கங்களையும் அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் விரோதமானவைகளையும் உதறித் தள்ளி மனிதர்கள் என்பவர்கள் எல்லாம் தயாராயிருக்க வேண்டும். கொள்கைகள்தான் மதமே ஒழிய, சடங்குகள், வேடங்கள் மதம் அல்ல என்கின்ற உணர்ச்சி தாராளமாய் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும்.”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *