வீரம் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர்கள்
இந்திய ஆட்சி பணியாளரும் கர்நாடக அரசின் உள்துறை செயலாளராகவும் இந்திய அரசின் நிதிதுறை செயலாளராகவும் அரசியலாளர் வரலாற்று ஆய்வாளர் பிராக்ஸி பெர்னாண்டஸ் ஐ. ஏ. எஸ். எழுதிய The Tigers of Mysore, A Biography of Tipu Sultan and Hyder Ali என்ற நூலுக்கு வரலாற்று ஆய்வாளர் கே.என். பணிக்கர் அவர்கள் வழங்கிய மதிப்புரை
பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியா தனது ஆட்சியாளர்களின் உண்மை முகத்தையும் அவர்களின் குணாதிசயங்களையும் தனது வரலாற்றில் சாட்சிபடுத்தியுள்ளது, காட்சிப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களின் வருகையே இதற்குப் பின்னணியாக இருந்தது எனலாம். ஐரோப்பியர்கள் முதலில் வணிகர்களாகவும், பின்னர் அரசியல் தரகர்களாகவும் இறுதியில் காலனித்துவ ஆட்சியாளர்களாகவும் .பரிமாணம் பெற்றனர். ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் இந்த வளர்ச்சிக்கு உதவியாக அன்றைய இந்திய ஆட்சியாளர்கள் பல்வேறு உதவிகளையும் வழங்கினர். சிலர் ஆங்கிலேயர்களுக்கு நண்பர்களாகவும் தீவிர ஆதரவாளர்களாகவும் செயல்பட்டனர்.
மறுமுனையில் ஹைதர், திப்பு போன்ற மிக மிக சொற்பமானவர்களே ஆங்கிலேயர்களை எதிர்க்கும் உறுதியான எதிரிகளாக நின்றனர். சுயலநலம் பலரைச் சூழ்ச்சிகளிலும் ஏமாற்றுதல்களிலும் ஈடுபடுத்தியது. பல இந்திய ஆட்சியாளர்கள் தங்கள் காலில் நின்று போராடுவதை விடுத்து மண்டியிட்டு வாழத் துணிந்தனர். அடிபணிந்து வாழ்வதை விட, அடிமைத்தனத்தை விட, மரணத்தைத் தேர்ந்தெடுத்து, தேசப்பக்திக்கும் தனிப்பட்ட வீரத்திற்கும் ஒரு வரலாற்றை விட்டுச் சென்றவர்கள் ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற வீரமிக்க மனிதர்கள். திப்பு சுல்தான் தற்போது வகுப்புவாத அரசியலின் இலக்காக மாறியுள்ள சூழலில், பணிக்கர் அவர்களின் இந்த பார்வை காலத்திற்கேற்றதாகவும் அமைகிறது.
ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் அரசியல் கண்ணோட்டம் மற்ற இந்திய ஆட்சியாளர்களிடம்யிருந்து தனித்துக் காட்டுவது. இந்தியாவில் பிரிட்டிஷாரின் நோக்கங்களை தெளிவாக இருவரும் புரிந்து கொண்டிருந்த விதமாகும். நூறு ஆண்டு காலத்திற்கு மேலாக நிகழ்த்தப்பட்ட இந்திய சுதந்திர போராட்டத்தில், இந்திய சக்திகள் தங்களுக்கு எதிராக ஒன்று சேர்வதைத் தடுப்பதே பிரிட்டிஷாரின் பிராதன உத்தியாக இருந்தது. இந்த உத்தியாலே இந்திய ஆட்சியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வீழ்த்தப்பட்டனர். இந்தியாவில் நிகழ்ந்த தொடர் யுத்தத்தால் இந்தியாவின் முழு வரைபடமும் சிவப்பாக மாறியது. பிரிட்டிஷாருடன் கூட்டுசேர்வதன் மூலம் இந்திய ஆட்சியாளர்கள் தாங்களே சுய அழிவை விரைவுபடுத்திக் கொண்டனர்.
ராஜபுத்திரர்களும் சீக்கியர்களும் இந்த ஆபத்தை உணரவில்லை. நானா பட்நாவிஸ் போன்ற மராட்டியர்களில் சிலர் பிரிட்டிஷாரின் நோக்கங்களை அரசியல் நடவடிக்கைகளாக மாற்றும் திறன் பெற்றிருக்கவில்லை. இந்தப் பின்னணியில், இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பிரிட்டிஷாருடன் கூட்டுசேர மறுத்த ஹைதர் மற்றும் திப்புவின் புத்தி கூர்மையையும், பிந்தையவர்களைப் பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரட்ட முயன்றதையும் பெர்னாண்டஸ் சரியாக எடுத்துரைக்கிறார். பிரிட்டிஷாருடன் சமரசம் செய்ய மறுத்ததால் அவர்கள் இருவரும் போரின் நடுவே தங்கள் உயிரை இழந்தனர். அதே நேரத்தில், ராஜபுத்திரர்களும், மராட்டியர்களும், உடையார்களும் பிரிட்டிஷாரால் திணிக்கப்பட்ட அவமானங்களையும், கட்டுப்பாடுகளையும், அவமதிப்புகளையும் சகித்துக் கொண்டு தங்கள் நிலங்களை ஆண்டனர்.
திப்பு சுல்தானுக்கும் அவரது சமகாலத்தினருக்கும் இடையே இருந்த ஒரு முக்கியமான வேறுபாடு, ஐரோப்பிய மேலாதிக்கத்திற்கு உந்து விசையிணை, காரண சக்திகளை அவர் புரிந்து கொண்டிருந்த விதம் ஆகும். பலரைப் போலன்றி, ஐரோப்பியர்களின் பலம் ராணுவப் பயிற்சியிலும் ஒழுக்கத்திலும் உள்ளது என்ற மாயை அவரிடம் இருக்கவில்லை. அதற்கு மாறாக, ஐரோப்பிய முன்னேற்றம் மற்றும் வெற்றியின் மூலங்களாக அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் அவர் கண்டார். இதன் விளைவாக, தனது இராச்சியத்தை நவீனமயமாக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்காக, பிரான்சுக்கு அவர் அனுப்பிய தூதுக் குழு மூலம் தொழில் நுட்ப அறிவைப் பெற முயன்றார்.
திப்பு உலக அரசியலில் நன்கு பரிச்சயம் உள்ளவர் மட்டுமல்ல, ஐரோப்பாவை உலுக்கிய தேசியவாத சிந்தனையையும் தத்துவத்தையும் உள்வாங்கியிருந்தவரும் ஆவார். வோல்டேர், ரூசோ, டிடெரோட் மற்றும் கலைக்களஞ்சியவாதிகளின் புதிய ஐரோப்பிய பகுத்தறிவு சகாப்தம் பற்றி அவர் அறிந்திருந்தார். காலனித்துவ வரலாற்றாசிரியர்கள் மற்றும் சமீபத்தில் பிரச்சாரம் செய்யப்பட்ட இந்து வகுப்புவாத சித்தாந்தவாதிகளால் புனையப்பட்ட கதைகளுக்கு மாறாக, திப்பு பண்பட்ட மனதைக் கொண்டிருந்தார். அவர் இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளை அறிந்தவராகவும், இறையியல் மற்றும் நவீன அறிவியல் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவராகவும் திகழ்ந்தார்.
‘முஸ்லிம்’ ஆட்சியாளர்களைப் பற்றிய அனைத்து விவாதங்களிலும் அவர்களின் மதம் பற்றிய ஒரு நிலையான கேள்வி எழுப்பப்படுகிறது. ஆச்சரியப்படும் விதமாக, இந்து ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை அத்தகைய கேள்வி எழுப்பப்படுவதில்லை. இந்து ஆட்சியாளர்களின் அரச இயந்திரம், வன்முறை மற்றும் எதிர்ப்பை சகித்துக்கொள்ளாத தன்மையை அடிப்படையாகக் கொண்டதாக கொடுங்கோன்மையாக இருந்த போதும் கூட இந்தக் கேள்வி எழுப்பப்படுவதில்லை. திப்பு சுல்தான் வகுப்புவாத பக்கச்சார்புக்கு இலக்காகியுள்ளார். அது அவரை ஒரு அரக்கனாகவும், மற்ற சமூகங்களின் மதத்தவர்களை இரக்கமின்றித் துன்புறுத்திய ஒரு மதவெறியராகவும் சித்தரித்துள்ளது. திப்புவின் கொள்கைகளும் நடைமுறைகளும் அத்தகைய மதிப்பீட்டைக் கொண்டிருக்கவில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரப் பூர்வமாக உறுதியாக வாதிடுகிறாகள்.
தனது அரச கொள்கைகளிலும் தனிப்பட்ட வகையிலும் திப்பு ஒரு சமூகத்திற்கு எதிராக மற்றொரு சமூகத்தை பாகுபாடு காட்டி சாதிய அல்லது வகுப்புவாத முறையில் நடந்து கொள்ளவில்லை. மேலும், அவரது நிர்வாக ஏற்பாடுகள் குடிமக்களின் மத நம்பிக்கைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டன, கருத்தில்கொண்டன. ஆகவே ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு காஜியும் ஒரு பண்டிதரும் இருந்தனர், மேலும் மேல்முறையீட்டு உயர்நீதிமன்றத்தில் ஒரு இந்து மற்றும் ஒரு முஸ்லிம் நீதிபதி இருந்தனர். திப்புவின் நிர்வாகத்தில் பல முக்கியப் பதவிகள் இந்துக்களால் வகிக்கப்பட்டவை என்பது அனைவரும் அறிந்ததே. உயர் மட்டங்களில் இந்துக்களைக் கொண்டிராத நிஜாம்களின் நிர்வாகம் மற்றும் எவரொருவரையும் இந்து அல்லாதவராக கொண்டிராத பேஷ்வாவின் நிர்வாகம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது திப்புவின் நிர்வாகம் அனனைவரையும் உள்ளடக்கியது மேம்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
திப்பு கோவில்களுக்கும் இந்து மத நிறுவனங்களுக்கும் பணமும் நிலமும் தானமாக வழங்கியது நாடறிந்த உண்மையாகும். 1791 ஆம் ஆண்டில், ‘இந்து’ மராட்டிய தளபதியான ரகுநாத ராவ் பட்வர்தன், ஸ்ரீங்கேரி மீது ‘படையெடுத்து’, மடத்தைக் சூறையாடி, பல பிராமணர்களைக் கொன்றார். மேலும் கடவுள் சார்தாவின் புனிதச் சிலையை இடம்பெயரச் செய்த மகாபாவத்தைச் செய்தார். சங்கராச்சாரியார் உதவிக்காக போய் நின்றதும் அவருக்கு உதவியதும், ‘முஸ்லிம் மத வெறியராக சித்தரிக்க படும்’ திப்புவை தவிர வேறு யாருமில்லை. திப்பு உடனடியாக பணம், தானியம் மற்றும் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்வதற்குத் தேவையான பிற பொருட்களையும் அனுப்பி வைத்தார். பதிலுக்குப் பிரசாதமும் சால்வைகளும் பெற்றுக்கொண்டார்.
தனது சொந்த மதத்தின் மடத்துக்கும் மடாதிபதிக்கும் எதிராக ரகுநாத ராவ் செய்த செயலும் அவ்விசயத்தில் திப்புவின் நிலைபாடும், மலபாரின் நாயர்களுக்கும் கனராவின் கிறிஸ்தவர்களுக்கும் திப்பு என்ன செய்திருப்பார் என்பதைப் பிரதிபலிக்கிறது. மலபாரின் நாயர்கள் திப்புவின் அரசியல் எதிரிகளாக இருந்தனர் மற்றும் கனராவின் கிறிஸ்தவர்கள் பிரிட்டிஷாருடன் தீவிரமான கூட்டணியில்யிருந்தனர், பிரிட்டிசாருக்கு விசுவாசமாகயிருந்தனர். இந்த அரசியல் சூழலில், மைசூரில் உள்ள திப்புவின் இந்து கிறிஸ்தவ குடிமக்கள் மத துன்புறுத்தல் அச்சுறுத்தல் இல்லாமல் தங்களது மதங்களை பின்பற்றி மத சுதந்திரதுடனே வாழ்ந்தனர். இந்த அரசியல் புரிதல் இல்லாமல் வெறுமனே கனரா மற்றும் மலபார் மீதான திப்புவின் நடவடிக்கையை உற்று நோக்கினால் நம்மால் கனரா மற்றும் மலபார் நடவடிக்கைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. மத வெறிப்பிடித்தவர்களாலும் வகுப்புவாத அரசியல்வாதிகளாலும் தற்போது வரலாற்றின் பெயரால் பரப்பப்பட்டு வரும் பல கட்டுக்கதைகளும் திருத்த படவேண்டும்
கே.என். பணிக்கர்
வரலாற்று ஆய்வு மய்யம்
ஜே.என்.யு,
புது தில்லி.
