மனிதர்களில் ஏற்றத் தாழ்வுகளை கற்பித்து ஒருவனை உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் பிரித்து இன்னும் சிலரை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்ததை கடுமையாக எதிர்த்தார் பெரியார். தீண்டத்தகாத மக்களுக்கு நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது மதமாற்றம் என்னும் அச்சுறுத்தலின் வினைவாக மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றார். தீண்டாமையில் இருந்து வெளியே வர இஸ்லாம் ஒன்றே வழி என்று தெளிவாகக் கூறிய அவர், தீண்டாமையை ஒழிக்க சமூக சீர்திருத்தவாதிகள் சட்டத்தையும் சத்தியாகிரகத்தையும் முன்வைத்த போது அதில் மூன்றாவதாக இஸ்லாத்தையும் இணைத்தார். முதல் இரண்டில் துன்பமும் தோல்வியும் கிடைக்கலாம் என்றும் கூறினார். தீண்டாமை ஒழிப்பு என்ற இந்த புள்ளியே பெரியாரை இஸ்லாத்துடன் நெருக்கமாக்கி வைத்தது எனலாம். பகுத்தறிவு சிநதனைகளை பரப்பிய பெரியார், இஸ்லாம் பகுத்தறிவுக்கு பொருந்தாத ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் கூறினார்.
மதங்களே கூடாது என்பவர் எப்படி இஸ்லாம் மதத்தை அங்கீகரித்தார் என்பதற்கான விடையும் இங்கே இருக்கிறது. பகுத்தறிவிற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரான மதங்களை எதிர்த்தார் என்று கூறுவதை விட, பகுத்தறிவிற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரான மதங்களை எதிர்த்தார் என்று கூறலாம். மக்களின் சமூக, கலாசார மற்றும் அமைதியான முன்னேற்றத்திற்கு மதம் தடையாக இருப்பதால் அதனை ஒழிக்க வேண்டும் என்று ஏப்ரல் 16, 19:33 அன்று மதுரையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் உரையாற்றினார்.
‘மதங்கள் ஒழிந்த பிறகுதான் உலக சமாதானமும் ஒற்றுமையும் சாந்தியும் சமாதானமும் ஏற்பட முடியும் என்பதே அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவதொரு மதம் இருக்கும் போது உலக சமாதானம் ஏற்பட்டு விட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளால்தான் இருக்கக் கூடும் என்று கருதுகிறேன். ஏனெனில் அது சமூக மாற்றம், சமூக சமத்துவம் ஆகிய காரியங்களில் மற்றெல்லோரைக் காட்டிலும் அதிகமாக கவலை எடுத்து வருகின்றது’ என்று ஒரு மீலாது உரையில் குறிப்பிட்டார்.
‘நாத்திகம் எனது முக்கிய கொள்கை அல்ல. இஸ்லாமியர்கள் சுயமரியாதை இயக்கத்தில் சேருங்கள்’ என்று அறைகூவல் விடுத்தார். தனது சுயமரியாதை கொள்கைக்கு இஸ்லாத்தை மிகவும் நெருக்கமாகக் கண்ட பெரியார் அதனை ஆதரித்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. இஸ்லாத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதன் காரணமாக பெரியார் அதனை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய் சொல்லி 5.30 மணிக்கு தீண்டாதவன் என்ற இழிவிலிருந்து மீண்டு. தெருவில் நடக்க கரிமை பெற்று மனிதனாக முடியும்’ என்ற அவரின் கூற்று நீண்டாமை ஏற்படுத்திய கொடிய ஏற்றத் தாழ்வுகளையும் இஸ்லாத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. இந்த கொடிய நோயில் இருந்து இஸ்லாம் மட்டுமே மனித சமூகத்தை காப்பாற்ற முடியும் என்பதால் ‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ எனது 1947இல் ஈரோட்டில் உரையாற்றினார்.
தோழர்களே! நமது வியாதி – நோய் பெரிது. மிக மிகப் பெரிது- இது புற்று, தொழுதோய் போன்றது. வெகு நாளைய நோய். இதற்கு ஒரேயொரு மருந்துதான். அது இஸ்லாம்தான். இதைத் தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். தூக்க மருந்தும் போதை மருந்தும் கொண்டு நோய் இம்சை தெரியாமல், நாமும் பிணம் போல் கிடக்க வேண்டியதுதான். தோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும், வீரம் கொடுக்கும், திமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்’ என்று அன்று உரையாற்றினார்.
ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் கூற்றும் இஸ்லாத்தின் கொள்கைகளும் ஒரே கொள்கையையே முன்வைக்கின்றன என்பதை உணர்ந்த அவர் இஸ்லாத்தின் கொள்கைக்கும் திராவிட கொள்கைக்கும் வித்தியாசங்கள் ஏதும் இல்லை என்றும் கூறினார். “இஸ்லாம் என்றால் சாந்தி, பணிவு, பக்தி என்று பொருள்படும் அரபிச் சொல். இஸ்லாம் என்பது சகோதரத்துவ தன்மை என்பது. இவ்வளவுதான். கடவுள் என்பது திராவிட மொழி. GOD என்பது ஆங்கில மொழி. அல்லா என்பது அரபி மொழி என்பதல்லாமல், திராவிடர்களுக்கு மாறுபட்ட கடவுள் அல்ல கொள்கை அல்ல என்பேன்” என்றார். இஸ்லாத்தில் விக்கிரக வழிபாடு இல்லாததும் பல தெய்வ வழிபாடு இல்லாததும் சமத்துவத்துடன் அவரை கவர்ந்த முக்கிய கொள்கைகளாகும்.
இழிவு நீங்குவதற்கு இஸ்லாத்தை தவிர வேறெந்த மருந்தும் பயனதராது என்றும் அவர் கூறினார். இழிவு நீங்க இஸ்லாம் என்கிற மந்திரம்தான் நம்மை மனிதனாக்க முடியும். இதை நான் இன்று, நேற்று சொல்லவில்லை. 1919 முதல், 1920 முதல் இன்று வரை 28 வருடங்கனாகச் சொல்லி வருகிறேன். (1947இல் கூறியது). எனக்கு ஒன்றும் செல்வாக்கு குறைந்து போகவில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இழிவு நீங்க வேறு மருந்தில்லை. இந்த வியாதியை நீக்கும் முயற்சியில் இன்றுவரை எந்தப் பெரிய வைத்தியனுடைய, எந்த மருந்தும் தோல்வியையே அடைந்துவிட்டது’ என்றார்.
பெரியாரின் இஸ்லாமிய ஆதரவு போக்கை திராவிட இயக்கத்தில் இருந்த சிலர் விமர்சனம் செய்தனர். இதனை வைத்து அவர்கள் விசமப் பிரச்சாரம் செய்வதாக பெரியாரும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரியாரின் செல்வாக்கு குறைந்துவிடும் என்றும் சிலர் கூறினர். ஆனால் அது குறித்தெல்லாம் அவர் கவலை கொள்ளவில்லை, தனக்கு சரி என்று பட்டதை தெளிவாக உறுதியுடன் எடுத்துரைப்பவர் பெரியார். தனது செல்வாக்கு குறைந்துவிடும் என்று கூறியவர்களுக்கு பதிலாகவே தான் 1919 முதல் இதனை கூறி வருவதாக குறிப்பிட்டு தனது செல்வாக்கு ஒன்றும் சரிந்து விடவில்லை என்றும் கூறினார்.
எனக்கு இந்த விதமான, உணர்ச்சிக்கு இடமில்லாத, மானத்தைப் பற்றி கவலை இல்லாத, திராவிட மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற கவலை சிறிதுமில்லை. அப்படி போலி நல்ல பெயர் மீது எனது வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை. திராவிடர்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும், அதில் முதன்மையாக
திராவிடன் இன இழிவு நீங்க வேண்டும் என்கின்ற ஆசையும் கவலையும் தவிர, வேறு ஒன்றும் எனக்கு கவலையாக இல்லை’ என்று அவர்களுக்கு பதிலுரைத்தார். திராவிடர்களின் இழிவு ஒழிந்து அவர்கள் மானத்துடன் வாழ வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் அதற்காக தனது செல்வாக்கு குறித்தெல்லாம் தான் கவலை கொள்வதில்லை என்றும் ஆணித்தரமாகக் கூறினார்.
நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த முஸ்லிம் அல்லாத ஒரே இந்திய தலைவர் பெரியார் மட்டுமே. வெறும் முஸ்லிம் ஆதரவு என்பதையும் தாண்டி முஸ்லிம் அரசியலையும் பெரியார் ஆதரித்தார். இங்குதான் அவர் ஏனைய தலைவர்களிடமிருந்து மாறுபடுகிறார். முஸ்லிம்களுக்கான தனி வகுப்புவாரி இடஒதுக்கீட்டை அவர் ஆதரித்தார். தேசப் பிரிவினை பேச்சுவார்த்தைகள் எழுந்ததை தொடர்ந்து முஸ்லிம்கள் மீது கடும் நெருக்கடிகள் சுமத்தப்பட்டன. அவர்கள் பாகிஸ்தானிற்கு செல்ல வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அப்போது, முஸ்லிம்களை திராவிடர்கள் என்றும் அவர்கள் இந்த மண்ணிற்கு உரியவர்கள் என்றும் அவர் தெளிவாகக் கூறினார். ‘முஸ்லிம்கள் திராவிடர்கள் என்பதால் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்க உரிமை உடையவர்கள். மதம் என்கிற ஒரு சிறிய துறையைத் தவிர மற்றெல்லா அம்சங்களிலும் அவர்கள் திராவிடர்களுடன் இளையந்திருப்பர். திராவிட அரசியலில் முஸ்லிம்களுக்கு எந்தக் குறையும் இருக்காது’ என்று குறிப்பிட்டார். (விடுதலை, ஏப்ரல் 17, 1947)
திராவிடத்திடமிருந்தும் இங்குள்ள கலாசாரத்தில் இருந்தும் முஸ்லிம்களை பிரிப்பதற்கான முயற்சிகளை அவர் முளையிலேயே கிள்ளினார். அதே சமயம், அவரவர் மதத்தை பின்பற்றுவதில் எவ்வித தடைகளும் இருக்காது என்றும் உறுதியளித்தார்.
முஸ்லிம்கள், ஆதி திராவிடர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் ஆகியவர்கள் அவர்களும் திராவிடாகளே ஆனதால் அவரவர்கள் சமயம், ஆதமார்த்தம் என்பவற்றின் உணர்ச்சி இன்றுள்ளது போலவே அவரவர்கள் இஷ்டப்படி இருக்கும்’ என்று உறுதியளித்தார். (குடிஅரசு- டிசம்பர் 2, 1924)
இந்தியாவில் 25 சதவிகிதம் உள்ள முஸ்லிம்களுக்கு இந்திய அரசாங்கத்தில் உரிய பங்கு இருக்கிறதா இல்லையா என்று 1928இல் கேள்வி எழுப்பியவர் பெரியார். ‘அவர்கள் ஏழரை கோடிப் பேரும் இனிமேல் இந்தியாவை விட்டுப் போக முடியுமா? அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் ராஜ்ய விஷயத்திலும் மத விஷயத்திலும் சரியான அந்தஸ்து பெற்றுத்தானே ஆக வேண்டும்? வகுப்பு பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அவர்களுக்கு சம உரிமை கிடைத்து விடுமா? என்று வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான நியாயமான கோரிக்கைகளை எழுப்பியவர். (குடிஅரசு, பிப்ரவரி 14, 1926)
பெரியாரும் அம்பேத்கரும்
தீண்டாமையையும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும் பெரியாரைப் போல் எதிர்த்த மற்றொரு தலைவர் அம்பேத்கர். 1930இல் இஸ்லாத்திற்கு செல்வது என்ற முடிவை அம்பேத்கர் எடுத்த போது அதனை பல தலைவர்களும் எதிர்த்தனர். ஆனால் அதனை ஆதரித்த பெரியார், அம்பேத்கர் ஒரு இலட்சம் பேரோடு இஸ்லாத்திற்கு செல்ல வேண்டும் என்று அவருக்கு தந்தி அனுப்பினார். அது மட்டுமன்றி, பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் நபர்களை தான் இங்கிருந்து அனுப்புவதாகவும் அதில் குறிப்பிட்டார்.
அதன் பின் பௌத்தத்திற்கு மாறும் முடிவை அம்பேதகர் எடுத்த போது இஸ்லாத்திற்கு மாறுவதே சிறந்ததாக இருக்கும் என்று அம்பேத்கரிடம் கூறினார். இஸ்லாத்திற்கு மாறுவது என்றால் பயப்படுவதை போல் இதற்கு பயப்படமாட்டார்கள் என்றார். பௌத்தத்தை ஏறக்குறைய இந்து மதத்துடன் கலர வைத்துவிட்டார்கள் என்று அதற்கான காரணத்தையும் கூறினார்.
References:
பெரியார்: இன்றும் என்றும்
பெரியார்: தலித்துகள், முஸ்லிம்கள், தமிழ்த்தேசியர்கள் – அ. மார்க்ஸ்
