ஜனநாயகன் விரும்பிய ஜனநாயகம்-4

7 Min Read

சுயநிர்ணயக் கோட்பாடு

இயங்கு தன்மை கொண்ட ஜனநாயகத்தில்  ‘ஒவ்வொரு தனிமனிதனும்  ஒவ்வொரு சமூகமும்  தாங்கள் வாழ வேண்டிய நிலைமைகளைத் தீர்மானிக்க்கும் வகையில் சுதந்திரமாக இருக்க வேண்டும்’ என்று அம்பேத்கர் நம்பினார் (அம்பேத்கர், 1919).

தலித்துகள் உட்பட ஏனைய சிறுபான்மையினரைப் பொறுத்தவரை இது மிகவும் முக்கியத்துவம் வாயிந்ததாகும். ‘… சமூகப் பிரதிநிதித்துவமும் சுயநிர்ணயமும் ஒரே கருத்தை வெளிப்படுத்தும் இரண்டு வெவ்வேறு சொற்றொடர்கள்’ (அம்பேத்கர், 1919).

ஆகவே  ஒவ்வொரு  ஜனநாயக நிறுவனத்திலும் மற்ற சிறுபான்மையினருடன் தலித்துகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

தலித்துகளுக்கு ஏன் தனி அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்?

தலித்துகள் தேசிய நீரோட்டத்தில் ஒரு தனித்துவமான அங்கமாக இருப்பதால், அவர்களுக்குத் தனி அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். மேலும், சாதி இந்துக்களின் அடையாளங்கள், வரலாறுகள், கலாச்சாரங்கள் மற்றும் தத்துவங்கள் தலித்துகளுக்கு பொருந்தாததால், அவர்களால் தலித்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.வேறு எவராலும் உண்மையாக தலித்துகளின் குரலாக ஒலிக்க முடியாது.(அம்பேத்கர், 1919).

அரசியல் பிரதிநிதித்துவத்தின் தன்மை

டாக்டர் அம்பேத்கர், ‘முழுமையான பெரும்பான்மை’க்கு மாறாக ‘சார்புப் பெரும்பான்மை’ என்ற ஒரு மாதிரியை முன்மொழிந்தார். இந்த மாதிரியில், அனைத்து சிறுபான்மையினரும் ஒன்றிணைந்து ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும். அவர்களால் அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டாலும் கூட, ஆளும் கட்சி எந்தவொரு அவசரச் சட்டத்தையும் நிறைவேற்றவோ அல்லது எந்தவொரு சட்டத்தையும் இயற்றவோ அவர்களின் ஒப்புதல் அவசியமாகும் (அம்பேத்கர், 1945).

இருப்பினும், சமகாலத் தலைவர்கள் சார்புப் பெரும்பான்மை என்ற வாதத்தை கருத்தில் கொள்ளக் கூட மறுகின்றனர்  இது அம்பேத்கரை மிகவும் வருத்தமடையச் செய்தது.

பெயரளவிலான பிரதிநிதித்துவம் அல்ல, உண்மையான பிரதிநிதித்துவம்

சட்டமன்றங்கள், நிர்வாகம், கல்வி ஆகியவற்றில் அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற அனைத்து சட்டப் பாதுகாப்புகளுக்கும் தலித்துகள் தகுதியானவர்கள், .

தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையை ஒருவர் ஆழமாகப் பார்க்க வேண்டும். பெரும்பாலான தொகுதிகளில் சிறுபான்மையினர் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளனர் என்பதை அண்ணல்  அம்பேத்கர் நன்கு அறிந்திருந்தார். அவர்களது வாக்குகளால் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய முடியவில்லை. இதை அவர் ‘பெயரளவிலான பிரதிநிதித்துவம்’ என்று குறிப்பிடுகிறார் (அம்பேத்கர், 1945).

தலைவர்கள் மக்களின் கருத்துக்களையும் நலன்களையும் உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் போதுதான் நம்மால் ‘உண்மையான பிரதிநிதித்துவத்தை’ அடைய முடியும் (அம்பேத்கர், 1945). மேலும், சிறுபான்மை சமூகங்களிலிருந்து அவர்களின் மக்கள்தொகை விகிதாசாரத்தில் ‘உண்மையான’ தலைவர்கள் தேர்வு செய்யப் பட்டிருந்தாலும், சிறுபான்மையினர் சிறுபான்மையினராகவே இருப்பார்கள். வகுப்புவாத பெரும்பான்மையினர், தங்கள் எண்ணிக்கையின் பலத்தால் அனைத்து சிறுபான்மையினரையும் எளிதில் கூட்டாகப் புறக்கணித்துவிட முடியும்.

இதை எதிர்கொள்ள, அம்பேத்கர், ‘… பிரதிநிதித்துவத்தின் அளவை எண்ணிக்கையல்ல, தேவைகளே தீர்மானிக்க வேண்டும்’ என்று முன்மொழிந்தார் (அம்பேத்கர், 1919). இதை அவர் ‘செயல்திறன் மிக்க பிரதிநிதித்துவம்’ என்று குறிப்பிட்டார்.

சிறுபான்மையினருக்கு, அவர்களின் மக்கள்தொகைக்கும் மொத்த மக்கள்தொகைக்கும் இடையிலான விகிதத்தை விட அதிகமான பிரதிநிதித்துவத்திற்கு உரிமை இல்லை என்று பெரும்பான்மையினர் வலியுறுத்துகின்றனர். பெரும்பான்மையினர் எப்போதும் பெரும்பான்மையினராகவே இருந்து, பெரும்பான்மையினராகவே செயல்பட விரும்புவதால்தான் சிறுபான்மையினருக்குத் தேவையானது அதிக பிரதிநிதித்துவம் அல்ல, செயல்திறன் மிக்க பிரதிநிதித்துவமே.

பிரதிநிதித்துவத்தின் செயல்திறன், சிறுபான்மையினருக்குப் பெரும்பான்மையினரால் முற்றிலுமாக வழங்கப்படவில்லை என்ற உணர்வைக் கொடுக்கும் அளவுக்கு அது பெரியதாக இருப்பதைப் பொறுத்தது. இருப்பினும், முன்னுரிமைக்கான கோரிக்கை என்பது அனைத்து சிறுபான்மையினரின் பொதுவான கோரிக்கையாகும், மேலும் பெரும்பான்மை அதிகமாக இருக்கும் இடங்களில் பட்டியல் சாதியினரும் அவர்களுடன் இதில் இணைய வேண்டும் (அம்பேத்கர், 1947).

உண்மையான பிரதிநிதித்துவமாகத் தனித் தொகுதிகள்

மற்ற சிறுபான்மையினரைப் போலவே, தலித்துகளின் உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த வழிமுறைகளில் ஒன்று தனித் தொகுதிகள் என்று  அம்பேத்கர் முன்மொழிந்தார்.

தனித் தொகுதிகள் கோரும் பட்டியல் சாதியினரின்  கோரிக்கைக்கு எதிராகப் பொதுவாக முன்வைக்கப்படும் காரணங்கள்:

1. பட்டியல் சாதியினர் சிறுபான்மையினர் அல்ல

2. பட்டியல் சாதியினர் இந்துக்கள், எனவே அவர்களுக்குத் தனித் தொகுதிகள் இருக்க முடியாது

3. தனித் தொகுதிகள் தீண்டாமையை நிலைநிறுத்தும்

4. தனித் தொகுதிகள் தேசவிரோதமானவை

5. தனித் தொகுதிகள், அத்தகைய தொகுதிகளைக் கொண்ட சமூகங்களை நாட்டின் நலன்களுக்கு எதிராகச் செயல்படத் தூண்டுவதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு வழிவகுக்கும்.

டாக்டர் அம்பேத்கர் அனைத்து சந்தேகங்களையும் ஒவ்வொன்றாகத் தெளிவுபடுத்தினார்.

அ. பட்டியல் சாதியினர் சிறுபான்மையினர் அல்ல என்று கூறுவது, ‘சிறுபான்மையினர்’ என்ற சொல்லின் பொருளைத் தவறாகப் புரிந்துகொள்வதாகும். மதப் பிரிவினை என்பது ஒரு சிறுபான்மையினருக்கான ஒரே அளவுகோல் அல்ல; அது ஒரு நல்ல மற்றும் பொருள் தரக்கூடிய நுட்பமான அளவுகோலும் அல்ல. ஒரு சமூகக் குழு சிறுபான்மையினரா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான உண்மையான அளவுகோல் சமூகப் பாகுபாடுதான்.

ஆ. பட்டியல் சாதியினர் இந்துக்கள், எனவே அவர்களால் தனித் தேர்தல் தொகுதிகளைக் கோர முடியாது என்று வாதிடுவது, அதே வாதத்தை வேறு வடிவத்தில் முன்வைப்பதாகும். அரசியலமைப்புப் பாதுகாப்புகளுக்கு மதப் பற்றைத் தீர்மானிக்கும் காரணியாக ஆக்குவது, மதப் பற்றுடன் தீவிரமான சமூகப் பிரிவினையும் பாகுபாடும் சேர்ந்திருக்கக்கூடும் என்ற உண்மையைக் கவனிக்கத் தவறுவதாகும். மதப் பிரிவினையுடன் தனித் தேர்தல் தொகுதிகளும் சேரும் என்ற நம்பிக்கை, தனித் தேர்தல் தொகுதிகள் வழங்கப்பட்ட சிறுபான்மையினர் மதச் சிறுபான்மையினராக இருப்பதிலிருந்து எழுகிறது. இருப்பினும், இது சரியல்ல.

முஸ்லிம்களுக்குத் தனித் தேர்தல் தொகுதிகள் வழங்கப்படுவது, அவர்கள் மதத்தில் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதற்காக அல்ல. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சமூகப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்படுகின்றன.  

இ. தனித் தொகுதிகள் தீண்டத்தகாதவர்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையிலான ஒற்றுமையைத் தடுக்கின்றன என்று வாதிடுவது குழப்பமான சிந்தனையின் விளைவாகும்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடைபெறுகின்றன. தீண்டத்தகாதவர்களுக்கான தனித் தொகுதி, அவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான கலப்புத் திருமணத்தையோ அல்லது கலப்பு உணவையோ எவ்வாறு தடுக்க முடியும்? எனவே, தீண்டத்தகாதவர்களுக்கான தனித் தொகுதிகள் அவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான பிரிவினையை நிலைநிறுத்தும் என்று கூறுவது பயனற்றது.

ஈ. தனித் தொகுதிகள் தேசவிரோத உணர்வை உருவாக்குகின்றன என்று வலியுறுத்துவது அனுபவத்திற்கு முரணானது. சீக்கியர்களுக்குத் தனித் தொகுதிகள் உள்ளன, ஆனால் சீக்கியர்கள் தேசவிரோதிகள் என்று யாரும் கூற முடியாது. முஸ்லிம்களுக்கு 1909 முதலே தனித் தொகுதிகள் இருந்துள்ளன. திரு. ஜின்னா தனித் தொகுதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும், திரு ஜின்னா 1935 வரை இந்திய தேசியவாதத்தின் தூதராக இருந்தார். வெளிப்படையாக, தேசியவாதத்திற்கும் தேசியவாத எதிர்ப்புக்கும் தேர்தல் முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவை தேர்தலுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் விளைவாகும்.

பெயரளவிலான பிரதிநிதித்துவமாக கூட்டுத் தேர்தல் தொகுதிகள் மேலே குறிப்பிடப்பட்ட முன்மொழிவு இந்துத் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இறுதியில், தலித்துகள் தனித் தேர்தல் தொகுதிகளுக்கான தங்கள் கோரிக்கையைக் கைவிட்டு, கூட்டுத் தேர்தல் தொகுதிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறும் ஒரு ஒப்பந்தத்தில் அம்பேத்கர் கையெழுத்திட வேண்டும் என காந்திஜி வலியுறுத்தினார் (அம்பேத்கர், 1947).  அண்ணல் அம்பேத்கர் அந்த ஒப்பந்தத்தின் பயனற்ற தன்மையை விளக்குகிறார்:

முதன்மை தேர்தலைத் தக்கவைத்துக் கொள்வதற்கு இரண்டு ஆட்சேபனைகள் உள்ளன. முதலாவதாக, முதன்மைத் தேர்தலில் அதிக வாக்குகள் பெறும் பட்டியல் சாதி வேட்பாளர் இறுதித் தேர்தலில் வெற்றி பெறத் தவறுகிறார். மேலும் முதன்மைத் தேர்தலில் தோல்வியடையும் பட்டியல் சாதி வேட்பாளர் இறுதித் தேர்தலில் அதிக வாக்குகள் பெறுகிறார். இரண்டாவதாக, முதன்மைத் தேர்தல் என்பது பெரும்பாலும் ஒரு புனைவே தவிர உண்மையல்ல. ஏனெனில், முதன்மை மற்றும் இறுதித் தேர்தல் என இரண்டு தேர்தல்களின் செலவுகளைப் பட்டியல் சாதியினரால் தாங்குவது சாத்தியமற்றது (அம்பேத்கர், 1947).

1932-ல் பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகு, அம்பேத்கர் தனது இறுதி மூச்சு வரை தலித்துகளுக்கு பிரதிநிதித்துவத்தை அடைவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு புதிய வழிமுறைகளை முன்மொழிந்து கொண்டே இருந்தார். அவர் முன்மொழிந்த தேர்தல் முறைகளில் ஒன்று, பல உறுப்பினர் தொகுதிகளைப் பயன்படுத்துவதாகும், இதில் பல உறுப்பினர்கள் ஒரே தொகுதிக்குள் தத்தமது சமூகக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். துரதிர்ஷ்டவசமாக, மிகச் சில தலைவர்களால் மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடிந்தது (வண்ட்ரு, 2017).

‘இந்துக்களால் ஒருமித்த கருத்து என்ற கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்தியாவில் மதப் பிரச்சினை என்ற ஒன்றே இருக்காது’ (அம்பேத்கர், 1945).

முடிவுரை

உண்மையில், அரசியல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அம்பேத்கர் சமூக ஜனநாயகத்தின் கொள்கையை எவ்வளவு வலுவாக முன்னெடுத்தார் என்பது தெளிவாகிறது. அரசியல் அமைப்பின் அடித்தளம் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் மீதுதான் அமைந்துள்ளது என்று அவர் உறுதியாகக் கூறினார். இந்த விஷயத்தில், அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை அவரை அவரது சமகாலத்தவர்களை விட முற்போக்காக முன்னிறுத்துகிறது.  ஒரு வழக்கறிஞராக அவர் பெற்ற பயிற்சியும், அவரது தலித் அகநிலையும், ஜனநாயக அரசியல் கட்டமைப்புகளின் மேலோட்டமான பார்வைக்கு அப்பால்  சிறுபான்மையினர் பிரச்சினையில் அவர் மிகவும் தீவிரமாக இருந்தார்.

தனது வாழ்நாள் முழுவதும் தலித்துகளை சிறுபான்மையினராகக் கருத வேண்டும் என்று அவர் தொடர்ந்து வாதிட்டார். இதற்காக, அனைத்து சிறுபான்மையினருக்கும் உண்மையான, திறமையான தலைவர்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் பல்வேறு தேர்தல் முறைகளை அவர் முன்மொழிந்தார். வெறும் இட ஒதுக்கீடு மட்டும் போதாது; குடிமக்களின் கவலைகளைத் திறம்பட எழுப்பக்கூடிய உண்மையான தலைவர்கள் இருக்க வேண்டும் என்றார்.

வியக்கத்தக்க வகையில், சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் அம்பேத்கர் முன்னறிவித்தவை அனைத்தும் இன்று உண்மையாகிவிட்டன. ஏனெனில், நாட்டில் இந்து மதவாதம் ஆதிக்கம் செலுத்தி பரவலான அச்சம் நிலவுகிறது. இதனால், தலித்துகள் உட்பட மத சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பேசுவது அனைவருக்கும் கடினமாகிவிட்டது. அந்த காலத்திலேயே, எதிர்காலத்தில் இது நிகழக்கூடும் என்பது  அம்பேத்கருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. வருந்தத்தக்க வகையில், அவரது கருத்துக்கள் அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டன. இன்று, அண்ணல் அம்பேத்கர் முன்வைத்த இந்த அடிப்படைக் வாதங்களைப் அறிந்த அறிஞர்களும், நம்மிடம் போதுமான அளவில் இல்லை. இந்தக் கட்டுரை இந்த இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு எளிய முயற்சியாகும்.

துரை அப்பாஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *