திப்பு தனது அரசிற்கு சுல்தான் ஏ குதாதத், ‘இறைவளால் வழங்கப்பட்ட அரசு’ அல்லது ‘இறைவனால் வழங்கப்பட்ட ஓர் நோக்கத்தை கொண்ட அரசு’ என்று பிரகடனப் படுத்தினார். அன்றைய மைசூர் உடையார்கள் serve for lord Visnu, என்று தங்கள் அரசிற்கு நோக்கம் கற்பித்தனர். இது நவீன இந்தியாவில் அண்ணல் காந்தி முன்வைத்த ராம ராஜ்ஜியதிற்கு இணையானது. எந்த இறைவன் என்பதை உடையார்கள் போல் காந்தியை போல் திப்பு நேரடியாகச் சொல்லவில்லை. அதே வேளையில் அரச மதமாக இஸ்லாத்தையும் அறிவிக்கவில்லை.
எனது அரசு இறைவனால் வழங்கப்பட்டது, நான் அந்த அரச அதிகாரத்தின் பொறுப்பாளன் மட்டுமே. என் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்தின் இறையாண்மையை உளசுத்தியுடன் காப்பது எனது பொறுப்பு. அந்த பொறுப்பு கூறலே தன் அதிகாரத்தின் இருப்பு என்று உணர்ந்தமையாலே அவரால் தனது பிரகடனத்தில் மக்களுக்கு இடையேயும் மதங்களுக்கு இடையேயும் பாகுபாடு காட்டமாட்டேன் என்றும் தனது இறுதி மூச்சு வரை தன் அரசின், தன் மக்களின் இறையாண்மையை காப்பேன் என்றும் பிரகடனப்படுத்த முடிந்தது.
அந்த பொறுப்புக் கூறலே தனது இறுதிமூச்சு வரை தன் மக்களுக்காக போராட உந்தியது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு குறித்து தன் இறைவனுக்கும் தன் மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பதே அவர் ஏற்றுகொண்ட மெய்யியலான இஸ்லாத்தின் வரையறையும் கூட..
இன்றைய நவீன அரசமைப்புகள் வகுத்துள்ள ஒரு சமயசார்பற்ற அரசின் கோட்பாட்டு விழுமியங்களை சுல்தான் ஏ குதாதத்தில் திப்புவால் வரையறுத்து தன் மக்களுக்கு பாகுபாடற்ற நீதியான ஆட்சியை வழங்கமுடிந்தது என்பதை வரலாற்றில் நம்மால் காண முடிகிறது.
தனிப்பட்ட சமய நம்பிக்கைகள் இருந்த போதும், தன் மக்களின் சமய உணர்வுகளை மதித்து, தனது அரசில் அணைத்து சமய கடவுளின் சந்நிதானங்களும் சமமாகவே பாவிக்கப்படும் மதிக்கப்படும் என்ற நிலைபாட்டை கொண்டிருந்த திப்புவால் இந்து கோவில்கள் கிறித்தவ தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்திற்கும் சம அளவில் அரசின் ஆதரவையும நன்கொடைகளையும் தேவையறிந்து வழங்க முடிந்தது,
அவரது ஆட்சியின் கீழ் மக்கள் மத சுதந்திரத்துடனும் வழிபாட்டு சுதந்திரத்துடனும் வாழ்ந்தனர் என்பதை வரலாறு ஆதாரத்துடன் நிறுவுகிறது. கூடவே யுத்த நேரங்களில் பழுதான கோவில்களும் அரசின் செலவிலே பழுது பார்க்கப்பட்டது அவரது அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கு சான்றாக விளங்குகிறது
இந்து கோவில்களுக்கு அவர் வழங்கிய எண்ணற்ற மானியங்கள், சிவில் மற்றும் ராணுவப் பணிகளில் அவர் நியமித்திருந்த முஸ்லிம் அல்லாதவர்களின் எண்ணிக்கை, சிருங்கேரியின் சங்கராச்சாரியாருக்கு அவர் காட்டிய மரியாதை மற்றும் மதிப்பு, மைசூரில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் ஆகியவை, அவர் சகிப்புத்தன்மையற்றவர் என்ற குற்றசாட்டுகளை பொய் என்பதை நிரூபிக்கின்றன.
தான் முஸ்லிம் அல்லாத மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டின் ஆட்சியாளர் என்பதையும், அந்த அரசு முஸ்லிம் அரசு என்றோ அல்லது இந்து அரசு என்றோ இல்லாமல் ஒரு மதச்சார்பற்ற அரசாகவே இருக்க வேண்டும் என்பதையும் அறிந்த ஒரு அறிவார்ந்த ஆட்சியாளனாக திப்பு இருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட முறையில் திப்பு தீவிர மத நம்பிக்கை கொண்டவர். மத நம்பிக்கைகள் அவரது தனிப்பட்ட விஷயம். தனது அதிகாரத்தின் வரம்புகளையும், தன் ஆட்சியின் கீழ் வாழும் பிற சமய மக்கள் ஏற்க முடியாத கொள்கைகளின் அடிப்படையில் அரசாங்கத்தை நடத்த முடியாது என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
ஒருமுறை, ஒரு இந்து ஆடவன் முஸ்லிம் பெண்ணை மணந்ததாகக் கூறி, ஷரிஆ சட்டத்தில் இதற்கு அனுமதி இல்லாததால் என்ன செய்ய வேண்டும் என்று திப்புவிடம் ஒரு ஃபவுஜ்தார் (நிர்வாகி) கேட்டார். அதற்கு திப்பு, அந்த விஷயத்தில் தலையிடுவது ஃபவுஜ்தாரின் வேலையல்ல என்றும், அது முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்றும் பதிலளித்தார். (இதை வரலாற்று ஆய்வாளார் சேக் அலி பதிவு செய்கிறார்)
இந்து வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்; திண்டுக்கல் கோட்டை முற்றுகையின் போது, ராஜா வழிபடும் கோவில் அங்கிருந்ததால் பின்புறத்தில் இருந்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டார்.
பூர்ணய்யாவுக்கு எதிராக சிலர் திப்புவிடம் புகாரளித்து, பிராமணர்களை நம்ப முடியாது என்று கூறியபோது, அவர் உடனடியாக அந்த நபரை கண்டித்ததுடன், “ஒருவரின் தவறுக்காக முழு சமூகத்தையும் பழிக்காதீர்கள்” என்ற பொருளுடைய குர்ஆனின் வசனத்தை மேற்கோள் காட்டினார்.
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில் அவரது அரண்மனையிலிருந்து மிக அருகிலேயே அமைந்திருந்தது. மசூதியில் இருந்து வரும் பாங்கு ஒலியை எவ்வளவு மரியாதையுடன் கேட்டாரோ, அதே மரியாதையுடன் கோவிலின் மணி ஓசையையும் கேட்பார்.
150-க்கும் மேற்பட்ட இந்து மத நிறுவனங்களுக்கு அவர் நிதி உதவி வழங்கினார். சுருக்கமாகச் சொன்னால், அவரது அரசு ஒரு நலன்புரி அரசாக இருந்தது. அங்கு குறிப்பிட்ட எந்தவொரு சாதி அல்லது மதத்தின் நலன் மட்டுமே முக்கியமாக கருதப்படாமல், அனைவரின் நன்மையே ஆட்சியாளரின் முக்கிய கவலையாக இருந்தது
மராத்திகளையும் நிஜாம்களையும் ஒப்பிடுகையில் திப்புவின் அமைச்சரவை, இராணுவம், நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய ஓர் கலப்பு அரசாக இருந்தது. அவரது நாணயங்களில் இஸ்லாமிய குறியீடுகளும், இந்திய மரபை பிரதிபலிக்கும் வகையில் யானைகளும், ஸ்ரீரங்க சாரதாதேவி படங்களும் பொறிக்கப்பட்டு மக்களிடம் புழக்கத்தில் விடப்பட்டது மதங்களுக்கிடையேயும் மக்களுக்கிடையேயும் நல்லிணக்கத்தை சமய சார்பற்று திப்புவின் அரசு வளர்த்தது,
1782 அரசின் அதிகாரத்திற்கு ஏறியவர் 1786இல் சுல்தான் ஏ குதாதத் என தன் அரசின் நோக்கத்தையும் 1797இல் குடியரசு மரத்தை நட்டு தன்னை CITIZEN TIPPU என பிரகடன படுத்தி ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற கோட்பாட்டு முழக்கத்தின் நிழலில் ஓர் நவீன குடியரசுக்கான ஆரம்ப விதையை தனது முடியரசில் இந்திய மண்ணில் விதைத்தார். மராத்திகள் தங்களை பேஷ்வாக்கள் என்றும் நிஜாம்கள் தங்களை வாலாஜாக்கள் என்றும் பிரகடனப்படுத்தியபோது தன்னை சிட்டிசன் திப்பு என பிரகடனப்படுத்தினார்.
ஐரோப்பாவை உலுக்கிய தேசியவாத சிந்தனையையும் தத்துவத்தையும் திப்பு உள்வாங்கியிருந்தார். வோல்டேர், ரூசோ, டிடெரோட் மற்றும் கலைக்களஞ்சியவாதிகளின் புதிய ஐரோப்பிய பகுத்தறிவு சகாப்தம் பற்றி அவர் அறிந்திருந்தார்.
இந்திய, ஐரோப்பிய மொழிகளை அறிந்தவராகவும், இறையியல் மற்றும் நவீன அறிவியல் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவராகவும் திகழ்ந்தார்
தனது அறிவுத் தேடலால் திப்பு வறட்டு நம்பிக்கைகளின் நிழலில் தேக்கம் கொள்ளாமல் உலக நடப்புகளை, நகர்வுகளை உள்வாங்கி இயங்கிய மனிதராகவும் இருந்ததால், அவரது அரசு இயக்கப்பூர்வமான கொள்கை வழி நின்ற ஓர் மக்கள் நல அரசாகவும் இயங்கியது.
திப்புவின் சிந்தனை வீச்சும் அதன் பரிணாமமும பரிமாணமும் சுல்தான் எ குதாதத்தின் அரசியல் பொருளாதார கொள்கைகளிலும், உற்பத்தி ஒழுங்கிலும், நேர்மையான அரச நிர்வாகதிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அதன் அயலுறவு கொள்கைகளிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் இறையாண்மையுடன் எதிரொலித்தது, அதே வேளையில் இன்றைய இந்தியாவின் அநேக அரச துறையின் முன்மாதிரியாகவும் அடித்தளமாகவும் திகழ்ந்தது.
இந்திய சமூகம் திப்புவை நேர்மையாக மதிப்பீடும் செய்கிறது. திப்பு குறித்தான ஆய்வுக் கட்டுரைகளில் 100 கட்டுரைகளில் 7 கட்டுரைகள் திப்புவின் மீது திட்டமிட்ட வன்மத்தையும் அவதூறுகளையும் தாங்கி நின்றபோதும் மீதமுள்ள 93 கட்டுரைகள் திப்புவை புகழ்ந்து வியந்து எழுதப்பட்டிருகின்றன. எழுதியவர்கள் பெரும்பாலும் கிறித்தவ, இந்து சமய ஆய்வு அறிஞர்கள்தான்.
இந்தியா தன் நிறத்தையும் குணத்தையும் இன்னும் இழக்கவில்லை என்பதற்கு இவை சான்றாகும். திப்புவை இடித்துரைத்து எழுதுபவர்கள் எல்லாம் காலனிய வரலாற்று ஆய்வாளர்களும் தனது சொந்த மதத்தின் சிரிங்கேறி மடத்தை இடித்த ரகுநாதராவ் கொள்கை வழி வந்தவர்களும்தான்.
திப்புவின் இடத்தை திப்புவிற்கு கொடுங்கள் என்ற ஓர் இந்து ஆய்வாளரின் ஆதங்கமும்,(பணிக்கர்) கனரா வாழ் கிறித்தவ சமூக விசயத்தில் தவறு திப்புவின் மீது இல்லாத போதும், அவர் கடுமையாக நடந்து கொண்டதை கண்டித்தே ஆகவேண்டும் என்ற கிறித்தவ ஆய்வாளரின் நேர்மையும் (George mores, Fernandas), பாரதத்தின் தவப் புதல்வன் திப்பு என்ற ஓர் சங்கீத சிரோன்மனி, தன் புத்தகத்தில் வியந்திருப்பதும் (ஜலஜா சக்திதாசன்) உழைக்கும் மக்களின் நாட்டாறு வழக்குகளில் நாட்டுப்புற பாடல்களின் வழி நாட்டுடமையாகி, மக்கள் பாட்டின் பாட்டுடை தலைவனாகவும் நாடோடி கதைகளின் கதாநாயகனாகவும் சமய, வர்க்க சார்பற்று அனைவராலும் வியந்து பாராட்டும் வகையில் திப்பு அவரது கொள்கைகளின் வழியும் தியாகத்தின் வழியும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
உண்மையில் சுல்தான் குதாதத் ஓர் சமய சார்பற்ற அரசாகவும் சமூக பொருளாதார விசயங்களில் பூர்வாங்க சோசலிச பார்வையையும், ஒரு மக்கள் நல ஜனநாயக குடியரசின் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட முடியரசாகவும் இருந்துள்ளது. ஒருவேளை திப்பு வென்றிருந்தால், இறையாண்மைக் கொண்ட சமய சார்பற்ற சோசலிச ஜனநாயகக் குடியரசாக அவர் காலத்திலேயே மைசூர் மலர்ந்திருக்கும்.
துரை அப்பாஸ்
