பஞ்சுகொட்டி (பஞ்சின) இஸ்லாமிய சமூகத்தின் வரலாற்றுப் பயணம்
ஒரு சமூகம் தனது வரலாற்றை மறந்து செல்லத் தொடங்கும்போது, காலப்போக்கில் அது தனது அடையாளத்தையும் இழக்கத் தொடங்குகிறது. வரலாறு என்பது ஒரு சமூகத்தின் தோற்றம், பண்பாடு மற்றும் கடந்த காலத்தின் நினைவுகள் மட்டுமல்ல; அதன் தலைமுறைகள் கடந்து வந்த பயணத்தைப் பதிவு செய்யும் அடையாளமாகவும் அமைகிறது.
ஆய்வின் நோக்கம்
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பல்வேறு முஸ்லிம் சமூகங்களின் வரலாறு பல்வேறு நூல்கள், சமூக ஆய்வுகள், பழைய இதழ்கள், கல்வெட்டுகள், அரசு ஆவணங்கள், மாவட்ட வரலாற்று கையேடுகள், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பதிவுகள் மற்றும் வாய்மொழி வரலாறுகள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் சிதறிக் காணப்படுகிறது. ஆனால், பஞ்சுகட்டி என அறியப்படும் இஸ்லாமிய சமூகத்தின் வரலாறு குறித்து முறையான மற்றும் தொடர்ச்சியான ஆவணப்படுத்துதல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
அத்தகைய வரலாற்றில் போதிய அளவு ஆவணப்படுத்தப்படாத “பஞ்சுகட்டி” என்ற இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய நமது ஆய்வு இங்கு தொடங்குகிறது. பல்வேறு காலகட்டங்களாகவும், பல்வேறு பெயர்களாலும் அடையாளப்படுத்தப்பட்ட இச்சமூகத்தின் பின்னணியில் உள்ள வரலாற்றுத் தொடர்புகள், சமூகப் பண்பாடுகள் மற்றும் அதன் அடையாளச் சுவடுகளை ஆதாரங்களின் அடிப்படையில் தேடிக்கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும். அவற்றை அடுத்த தலைமுறைக்கான ஆவணமாகப் பாதுகாக்கும் முயற்சியும் ஆகும்.
பஞ்சுகட்டி (பஞ்சின) என்பதியாது?
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களை பொதுவாக இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று தமிழமொழியைத் தாயகமாகக் கொண்ட இஸ்லாமியர்கள் எனவும், உருது மொழியைத் தாயகமாகக் கொண்ட உருது இஸ்லாமியர்கள் எனவும் பிரிக்கப்படுகின்றன, ஆனால் பஞ்சு கொட்டி என அழைக்கப்படும் இம்மக்கள் தெலுங்கு மொழியைத் தாயகமாகக் கொண்டவர்கள்.
பஞ்சுகட்டி சமூகத்தின் தோற்றம்
பஞ்சுகட்டி என அழைக்கப்படும் சமூகத்தின் வரலாற்றுத் தோற்றத்தைப் புரிந்துகொள்ளும்போது, இச்சமூகத்தின் வரலாற்றுத் தொடர்புகள் தெலுங்கு பேசும் ஆந்திரப் பகுதிகளுடன் நெருக்கமாக இருப்பதைக் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
குறிப்பாக, Dūdēkula என அறியப்பட்ட சமூகத்தின் வரலாறு ஆந்திரப் பகுதிகளுடன் தொடர்புதியதாகவும், பின்னர் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் எல்லைப் பகுதிகளிலும் இச்சமூகத்தினர் குடிபெயர்ந்ததாகவும் கிடைக்கக்கூடிய வரலாற்றுத் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சமூக மற்றும் வரலாற்றுப் புரிந்துகொள்ளும்போது, பெனுசுகொண்டா மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள பிரசித்தி பெற்ற ஹஜ்ரத் தப்லா ஆலம் பாட்ஷா நத்ஹை் வலி சீடர்கள் பாவா ஃக்ருத்-தீன் பீர் தொடர்பான மரபுக் குறிப்பும் கவனத்திற்குரியதாக அமைகிறது. பாவா ஃக்ருத்-தீன் பீர் தொடர்பாக கிடைக்கும் ஒரு மரபுக் குறிப்பின் படி, அவர் தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து பெனுசுகொண்டா பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு சம்பவங்களுக்குப் பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இந்துக்கள் இஸ்லாத்தைத் தழுவியதாகவும், அவைகளே பின்னாளில் தூபதேக்குலா சமூகத்தின் மூதாதையர்களாக அமைந்ததாகவும் ஒரு மரபுக் கருத்து முன்வைக்கப்படுகிறது.
பஞ்சுகட்டி சமூகத்தின் தமிழ்நாட்டிற்கான வருகை
எப்பொழுது, எதற்காக இவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள் என்பதை ஆராயும்போது, 18-ஆம் நூற்றாண்டின் அரசியல் சூழலைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அக்காலத்தில் ஆற்காடு நவாப்களின் அரசியல் மற்றும் இராணுவச் செல்வாக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விரிவடைந்திருந்தது. இத்தகைய அரசியல் மற்றும் சமூக மாற்றங்களின் பின்னணியில், தெலுங்குப் பகுதிகளிலிருந்து பஞ்சுகட்டி சமூகத்தினரின் தமிழ்நாட்டை நோக்கிய இடப்பெயர்வு நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
1881-ஆம் ஆண்டு Arthur F. Cox தொகுத்த Manual of the North Arcot District நூலில், முஸ்லிம் சமூகங்களின் பிரிவுகளில் Dudekula தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், Dudekula மக்கள் தமிழ் மற்றும் தெலுங்குப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என்றும், தமிழ்ப் பகுதிகளில் அவர்கள் பொதுவாக “Panjari” என அழைக்கப்பட்டனர் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், “Dudekula” மற்றும் “Panjari” ஆகிய பெயர்கள் அவர்களின் பாரம்பரியமான பஞ்சு சுத்தம் செய்யும் தொழிலுடன் தொடர்புடையவை என்றும் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாதாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், 1881-ஆம் ஆண்டிலேயே “Panjari” என்ற பெயர் தமிழ்ப் பகுதிகளில் பயன்பாட்டில் இருந்ததையும், அபெயருடன் தொடர்புடைய சமூகத்தினர் தமிழ் மற்றும் தெலுங்குப் பகுதிகளில் வாழ்ந்து வந்ததையும் அறிய முடிகிறது.
இதனைத் தொடர்ந்து, 1909-ஆம் ஆண்டு Edgar Thurston மற்றும் K. Rangachari ஆகியோ எழுதிய Castes and Tribes of Southern India நூலில், தமிழர்கள் Dudekula மக்களை “Panjari” அல்லது “Panjukotti” என்று அழைத்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் “Panjari” என்ற பெயரும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “Panjukotti” என்ற பெயரும் தமிழ்ப் பகுதிகளில் இச்சமூகத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது என்பது ஆவணங்களின் மூலம் தெரியவருகிறது.
“எனவே, கிடைக்கக்கூடிய வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில், பஞ்சுகட்டி சமூகத்தின் தமிழ்நாட்டிற்கான வருகையை 18-ஆம் நூற்றாண்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களின் பின்னணியில் ஆராய்வது பொருத்தமானதாகும். அதேவேளையில், இவர்களின் வருகைக்கான குறிப்பிட்ட காலம், காரணம் மற்றும் இடப்பெயர்வுப் பாதையை உறுதிப்படுத்துவதற்கு 18-ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆவணங்களை மேலும் ஆராய வேண்டியுள்ளது.”
தமிழகத்தில் பஞ்சுகட்டி சமூகத்தின் குடிபெயற் குதிகள்
தமிழகத்தில் இவர்கள் எங்கு குடிபெயர்ந்தார்கள் என்பதை ஆராயும்போது, ஆற்காடு நவாப்களின் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பஞ்சு விளைவதற்கு ஏற்ற கருமண் அல்லது கரிசல் மண் வளம் கொண்ட பகுதிகளிலும் இவர்களின் குடிபெயர்ந்தங்கள் அமைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக, வடக்கு திசையாக உளுந்தூர்பேட்டையிலிருந்து திருச்சிராப்பள்ளி வரையிலும், கிழக்கு–பமற்காக நாமக்கல்லிலிருந்து அரியலூர் வரையிலும் பரவியுள்ள பகுதிகள் இக்குடிபெயர்வுடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படுகின்றன.
மேலும், ஆற்காடு நவாப் காலத்தில் குடிபெயர்த்தப்பட்டதாகக் கூறப்படும் மக்களுக்காக கீழ்க்கண்ட ஏழு கிராமங்களில் ஒரே மாதிரியான சிறிய பள்ளிவாசல்கள் கட்டப்பட்டதாக வாய்மொழிச் செய்திகள் தெரிவிக்கின்றன:
- விசுவக்குடி
- கொளாக்குடி
- தாத்தையங்கார்பேட்டை
- ஈச்சம்பட்டி
- முட்டாஞ்செட்டி
- எறகுடி
- தச்சங்குறிச்சி
இந்த ஏழு கிராமங்களிலும் ஒரே மாதிரியான பழமையான சிறிய பள்ளிவாசல்கள் இருந்ததாகவும், இந்த மசூதிகள் சுண்ணாம்பு மற்றும் மணல் சாந்தால் கட்டப்பட்டு, அவற்றின் கட்டிடக்கலை பாணியில் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் காலப்போக்கில், அந்தப் பள்ளிவாசல்கள் பெரிய கட்டிடங்களாக மாற்றிக் கட்டப்பட்டதாகவும் இவ்வாய்மொழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழகத்தில் அன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் தாலுகா, முசிறி தாலுகா, லால்குடி தாலுகா, துறையூர் தாலுகா மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் தாலுகா, ஆத்தூர் தாலுக்காக்களில் உள்ள கிராமங்களில் மட்டுமே வசித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெரம்பலூர் தாலுகாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகம் வாழ்கின்றனர்.
பஞ்சின முஸ்லிம்களின் பொருளாதார இடப்பெயர்வு
பஞ்சின முஸ்லிம்களின் தமிழகத்திற்குள் நடந்த இடப்பெயர்வைப் பார்க்கும்போது, தங்களுடைய வாழ்வாதாரத்தையும் பொருளாதார முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் நோக்கில், கிடைத்த வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று குடிபெயர்ந்ததையும் காண முடிகிறது.
குறிப்பாக, வறட்சியான பெரம்பலூர் மற்றும் ஆத்தூர் தாலுகா பகுதிகளில் வாழ்ந்த பஞ்சின முஸ்லிம்கள், பொருளாதார முன்னேற்றம் அடைந்திருந்த முஸ்லிம் மக்கள் வாழ்ந்த தஞ்சை மாவட்டத்தின் கூத்தாநல்லூர், அய்யம்பேட்டை, வழுதூூர், ராஜகிரி, பண்டாரவாடை, அத்திக்கடை போன்ற ஊர்களுக்குச் சென்று வேலை செய்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
பஞ்சின முஸ்லிம்களின் சிலான் (இலங்கை) நோக்கிய இடப்பெயர்வு
கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்த சில பஞ்சின இஸ்லாமியர்கள் சிலான் (இன்றைய இலங்கை) சென்று, அங்கு கடைகள் அமைத்து வணிகம் செய்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு வணிகத்தில் ஈடுபட்ட சிலர், தமிழகத்தில் வாழ்ந்த பஞ்சின இஸ்லாமிய இளைஞர்களையும் தங்களுடன் சிலானுக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் பஞ்சின முஸ்லிம்களுக்கு தமிழகத்திற்கு வெளியிலும் புதிய வேலைவாய்ப்புகளும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உருவாகின.
சிலானில் சென்றடைந்த பஞ்சின முஸ்லிம் இளைஞர்கள், தங்களுக்கிடையே ஒற்றுமையுடன் இருந்து, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் செயல்படத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக, 31.07.1936 அன்று “கொழும்பு பஞ்சின முஸ்லீம் வாலிபர் சங்கம்” உருவாக்கப்பட்டது.
கி.பி. 1937-ஆம் ஆண்டின் “கொழும்பு பஞ்சின முஸ்லீம் வாலிபர் சங்கம்” வரவு செலவுக் கணக்கு அறிக்கையில், அச்சங்கத்தில் 85 அங்கத்தினர்கள் இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த உறுப்பினர் பட்டியலில் முட்டாஞ்செட்டி, ரசூர், வலயப்பட்டி, குளக்குடி, நக்கபலம்புதூர், தச்சங்குறிச்சிபுதூர், ஈச்சம்பட்டி, விசுவக்குடி, செங்கநாதபுரம், கல்லாரளையம், தச்சங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பஞ்சின முஸ்லிம்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இது மிகவும் முக்கியமான சான்றாகும். ஏனெனில், 1937-ஆம் ஆண்டிற்குள் பஞ்சின முஸ்லிம்கள் பல்வேறு ஊர்களில் பரவலாக வாழ்ந்ததுடன், தங்களுக்கென ஒரு சமூக அமைப்பையும் உருவாக்கியிருந்தனர் என்பதை காட்டுகிறது.
31.07.1936 – கொழும்பு பஞ்சின முஸ்லிம் வாலிபர் சங்கம்
31.07.1936-ல் கொழும்பு பஞ்சின முஸ்லிம் வாலிபர் சங்கம் முட்டாஞ்செட்டி ஜமீ. அப்துல் ஜப்பார் தலைமையில் தொடங்கியது.
- துணைத்தலைவராக: பால்நாயக்கம் பட்டி அ.பெ முகமது
- காரியதரிசியாக: கொளாக்குடி மு.ம.ஆதம்சாயபு
- துணை காரியதரிசியாக: கொளாக்குடி மு. முகம்மது அப்துல்லா
- பொருளாளராக: தச்சங்குறிச்சி புதூர் கா. அப்துல் ரஹ்மான்
- கணக்கு பரிசோதகராக: நக்கபலம்புதூர் சி.முகம்மது முஸ்தபா
- நிர்வாக உறுப்பினர்களாக:
- முட்டாஞ்செட்டி ஜ.மீ.அப்துல் ஜப்பார்
- ரசூர் கா.மு.இப்ராஹிம்
- வலயப்பட்டி கா.அ.அசன்முகம்மது
- குளக்குடி கா.இ.அப்துல் ஜப்பார்
- நக்கபலம்புதூர் சி.கா. முகம்மது மதார்
- தச்சங்குறிச்சிபுதூர் கா.காதர் ஷா
- ஈச்சம்பட்டி ம.முகம்மது ‘ரிபு
- ரசூர் தி.கா. மீராசாயபு
- செங்கநாதபுரம் அ.முகம்மது சாஹிபு
- கல்லாரளையம் அப்துல்
- விசுவக்குடி தி.கா.அப்துல் மஜீது
- விசுவக்குடி பி.பெ. அப்துல் ஹமீது
- தச்சஞ்குறிச்சி கா.செயது முஸ்தபா ஆகியோர் விளங்கினார்கள்.
வளைகுடா நாடுகளை நோக்கிய பஞ்சின முஸ்லிம்களின் இடப்பெயர்வும் பொருளாதார முன்னேற்றமும்
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பஞ்சின முஸ்லிம்களின் பொருளாதாரப் பயணம் தமிழகத்தையும் சிலானையும் கடந்து வளைகுடா நாடுகளுக்கும் விரிவடைந்தது. குறிப்பாக, 19-ஆம் நூற்றாண்டிலும் 1970-களில் வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டுமானத் துறையின் விரிவாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல முஸ்லிம் சமூகங்களைப் போலவே பஞ்சுகட்டி முஸ்லிம்களும் புதிய வேலைவாய்ப்புகளைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லத் தொடங்கினார்கள்.
ஆரம்ப காலத்தில் சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளில் கட்டுமானம், வணிகம், தொழிற்சாலை, போக்குவரத்து மற்றும் சேவைத் துறைகளில் பணியாற்றியதன் மூலம், இச்சமூகத்தின் பொருளாதார நிலை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியது.
வளைகுடா நாடுகளில் ஈட்டிய வருமானம், தமிழகத்தில் வாழ்ந்த குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன், கல்வி, வீடமைப்பு, சிறு வணிகம் மற்றும் சமூக நலப் பணிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. இதன் விளைவாக, பஞ்சுகட்டி முஸ்லிம்களின் சமூகத்தில் புதிய தலைமுறையினர் உயர்கல்வி, தொழில் மற்றும் தொழில்முனைவோர் துறைகளில் முன்னேறும் சூழலும் உருவானது.
கல்வியின் மூலம் முன்னேற்றத்தை நோக்கிய பயணம்
காலப்போக்கில், பஞ்சுகட்டி முஸ்லிம் சமூகத்தில் கல்வியின் மீதான ஆர்வமும் முக்கியத்துவமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, புதிய தலைமுறையினர் உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்து, அரசுப் பணிகளில் IAS, IPS போன்ற உயர்நிலைப் பொறுப்புகளையும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறைத் துறைகளையும் இலக்காகக் கொண்டு முன்னேறி வருகின்றனர்.
மேலும், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளையும் தேடி வருகின்றனர். இதன் மூலம், கல்வியைத் தங்களது தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும், குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் ஒரு முக்கிய கருவியாக இளம் தலைமுறையினர் கருதி வருகின்றனர்.
தொழில்முனைவு மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றம்
கல்வி மற்றும் தொழில்முறை வளர்ச்சியுடன், பஞ்சுகட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொழில்முனைவுத் துறையிலும் பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். கல்வித் துறையில் MIET போன்ற கல்வி நிறுவனங்களை மருத்துவத் துறையில் பல மருத்துவமனைகளை நிறுவுதல், கட்டுமானத் துறை மற்றும் Builders நிறுவனங்கள், ஏற்றுமதி–இறக்குமதி மற்றும் சர்வதேச வர்த்தகம், மேலும் Parveen Gani Transport போன்ற பேருந்து சேவைகள், லாரி மற்றும் சரக்கு போக்குவரத்துத் தொழில்கள், கிடங்கு மற்றும் மில் தொழில்கள், திருமண மண்டபங்கள், ரியல் எஸ்டேட், உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய தொழில் முயற்சிகள் குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் பங்களித்து வருகின்றன.
முடிவுரை
இவ்வாறு கல்வி, தொழில், வணிகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் முன்னேறி வந்துள்ள ஒரு சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது, அதன் வரலாற்று மற்றும் சமூக அடையாளத்தையும் உரிய முறையில் ஆவணப்படுத்திப் பாதுகாப்பதாகும். அந்த வகையில், “பஞ்சுகட்டி” என்ற வரலாற்றுப் பெயருக்கும் “தூபதேக்குலா” என்ற பெயருக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பைத் தெளிவுபடுத்தி, பஞ்சுகட்டி என்ற பாரம்பரிய அடையாளத்தை மீண்டும் சமூக ரீதியாகவும் ஆவண ரீதியாகவும் முன்னிறுத்துவது முக்கியமானதாகிறது.
தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ சமூகப் பதிவுகளில் தற்போது “தூபதேக்குலா” என்ற பெயர் இடம் பெறும் நிலையில், எதிர்கால மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய அரசு ஆவணங்களில் “பஞ்சுகட்டி (தூபதேக்குலா)” என்ற வரலாற்றுத் தொடர்பு தெளிவாகப் பதிவாகும் வகையில் சமூக அளவில் விழிப்புணர்வும் ஆவணப்படுத்தலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதேபோல், எதிர்காலத்தில் கட்டப்படும் பள்ளிவாசல்கள், மதைஸாக்கள், சமூகக் கூடங்கள் மற்றும் பிற கட்டிடங்களின் கட்டிடக்கலை மற்றும் கல்வெட்டு/பெயர்ப்பலகை வடிவமைப்பு வடிவமைப்புப் பகுதிகளில் பஞ்சுகட்டி சமூகத்தின் வரலாற்று அடையாளம் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாக்கப்பட வேண்டும். இதன் மூலம், இன்று நாம் மீட்டெடுக்கும் இந்த அடையாளம் வருங்கால தலைமுறைகளுக்கும் நினைவுச் சின்னமாகவும் வரலாற்றுச் சான்றாகவும் நிலைத்திருக்கும்.
ரசூல் கான்
எருரமட்டி
நாமக்கல்
Reference;
Edgar Thurston & K. Rangachari — Castes and Tribes of Southern India (1909), Volume II.
Arthur F. Cox — Manual of the North Arcot District (1881).
1936–1937 கொழும்பு பஞ்சின முஸ்லிம் வாலிபர் சங்க ஆவணங்கள்.
