அண்ணல் அம்பேத்கரின் கண்ணோட்டதில் ஜனநாயகம் அல்லது அண்ணல் அம்பேத்கர் விரும்பிய ஜனநாயகத்தை இந்த கட்டுரை விளக்குகிறது. இந்த கட்டுரையில், நாம் ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களையும், டாக்டர் அம்பேத்கர் ஜனநாயகதின் கருத்தியல் கூறுகளாக அடையாளப்படுத்திய, அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஜனநாயககத்தின் பண்புகூறுகளையும் ஆராயப் போகின்றோம்.
அரசியல், சமூக மற்றும் பொருளாதார என்ற மூன்று வகையான ஜனநாயகங்களும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன, இவற்றில் ஒன்று மறுக்கப்பட்டாலும், மற்றவை பூரணம் அடையாது, சமூகத்தில் விளைவை ஏற்படுத்தாது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய இரண்டு முக்கியக் கருத்தியல் அம்சங்களே அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்த, சமூக மற்றும் பொருளாதார ஜனநாயகக் கருத்துகளுக்கு அடிப்படையாக அமைகின்றன.
பிரிட்டிஷ் இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகள் குறித்தும், மதச் சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஆங்கிலேயர் எவ்வாறு அணுகினார்கள் என்பது குறித்தும் விவாதிப்பதின் பின்புலத்தில்தான், மற்ற அனைத்து மதச் சிறுபான்மையினருக்கும் வழங்கப்படும் அதே பாதுகாப்புகளை தலித்களும் பெற வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் வாதிடத் தொடங்கினார்.
தலித்கள் பெரும்பான்மை இந்து சமூகத்திடமிருந்து பாகுபாட்டை எதிர்கொள்வதால், அவர்களும் ஒரு சிறுபான்மையினரே என்று வகைப்படுத்தி வாதிட்டார்.
டாக்டர் அம்பேத்கர் சிறுபான்மையினர் என்ற கருத்தை மறுவரையறை செய்து, சமூக பாகுபாடுகளால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அழிவுகள் ஆகியவையின் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்தி பாகுபாடுகள் அற்ற ஒரு சமூகத்தை கட்டமைக்கும் வகையில், தலித்கள் மற்றும் பிற சிறுபான்மையினரும் பயன்படும் வகையிலான சமமான ஓர் அரசியல் பிரதிநிதித்துவத்தை முன்மொழிந்தார். அதனாலே 1932-ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தின் மூலம் செய்யப்பட்டதைப் போன்ற பெயரளவிலான பிரதிநிதித்துவத்தை அவர் எதிர்த்தார்.
பாகுபாட்டையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொள்ளும் சமூகங்கள் அந்தந்த சமுக தலைவர்களால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். சிறுபான்மையினர் பெரும்பான்மையினரால் மேலாதிக்கம் செய்யாமல் இருப்பதற்காக, மதரீதியான பெரும்பான்மை, அரசியல் ரீதியான பெரும்பான்மை ஆகியவற்றை கடந்து பிரதிநிதித்துவத்தில் உள்ள உண்மை நிலைமைகளையும் பிரதிநிதித்துவம் எப்படியிருக்கும் என்பதையும் விளக்கும் வகையில் பல்வேறு அறிவுப்பூர்வமான அணுகுமுறைகளையும் வழிமுறைகளையும் அவர் முன்மொழிந்தார்.
இதன் ஊடாக, ஜனநாயகம் என்ற போர்வையில் பெரும்பான்மைவாத வலையில் வீழ்வதைத் தடுப்பது எப்படி என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். ஆகவே அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்த சிறுபான்மையினருக்கான பாதுகாப்புகள் இன்றும் பொருத்தமானவையாகவே இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே, அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய சமூகம் ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டுகிறது
அவரின் அறிவார்ந்த படைப்புகள், அவரது கருத்துகளின் முக்கிய அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தாலும், மற்றவை அவரது வாதங்களின் சாராம்சத்தைத் தவறவிட்டுள்ளன. நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக, இந்தியாவிற்குள் நிலவும் மக்கள் அரசியலில், சுயநல சக்திகளால் அம்பேத்கர் பற்றிய திரிபுவாத பிம்பங்கள், அணுகுமுறைகள் பரப்பப்படுகின்றன. இது தேசிய அளவில் நிலவும் ஒரு நிலைமையாகும்.
ஜனநாயக விரோத ஆட்சிகளும் கூட ‘ஜனநாயகம்’ என்ற சொல்லை மிகவும் வெளிப்படையாகப் பயன்படுத்துகின்றன. இந்த ஆட்சிகள் உண்மையில் பெரும்பான்மைவாத நோக்குடையவை என்றும், ‘ஜனநாயகம்’ என்ற போர்வையில் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள முயல்கின்றன என்றும் சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்த நிகழ்வானது, தலித்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தங்கள் ஆட்சியை நியாயப்படுத்த, சாதி இந்துக்கள், அம்பேத்கர் சின்னத்தைப் பயன்படுத்துவதைப் போன்றது.
இது, சாமானிய மக்களுக்கும் நிபுணர்களுக்கும் பயனுள்ளவற்றை பயனற்றவற்றிலிருந்து பிரித்தெடுப்பதை கடினமாக்கியுள்ளது. இந்தச் சூழலில்தான், அம்பேத்கர் ஜனநாயகமாக எதை முன்மொழிந்தார் என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவில் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தல் குறித்த அம்பேத்கரின் சில முக்கியக் கருத்துகளை ஆராய்ந்தால் அண்ணல் அம்பேத்கரைப் பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது சிறுபான்மையினருக்கு அனைத்து விதமான பாதுகாப்புகளையும் வழங்குவதாகும் என்று புரிந்து கொள்ளலாம்.
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதே, அம்பேத்கரால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ஜனநாயகக் கருத்தை நமது காலத்திற்குப் பொருத்தமானதாக ஆக்குகிறது. அம்பேத்கரை பொறுத்தவரை, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற மதச் சிறுபான்மையினர் மட்டுமல்லாமல், தலித்களும் சிறுபான்மையினராகக் கருதப்பட வேண்டும்.
அம்பேத்கரைப் பின்பற்றி, அனைத்து சிறுபான்மையினரும் ஜனநாயக அமைப்பு முறையில் முறையான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டும். அப்போதுதான் இந்தியா ஒரு பெரும்பான்மைவாத ஜனநாயகமாக அல்லாமல், உண்மையான ஜனநாயகமாக மாறும். இவ்வாறு, சிறுபான்மையினருக்கான பாதுகாப்புகளே அம்பேத்கரின் ஜனநாயகக் கருத்தின் மையமாக உள்ளன.
அண்ணல் அம்பேத்கரின் எழுத்துக்களை ஆராய்ந்தால், ஓர் அரசின் முதன்மையான வடிவமே ஜனநாயகம் இருக்க வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.
‘மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் இரத்தக் களமின்றி புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஒரு அரசாங்க வடிவம்தான் ஜனநாயகம், ‘நவீன ஜனநாயகத்தின் நோக்கம், மக்களின் நலனை முதன்மைப் படுத்தி மேம்படுத்துவதே ஆகும்’ என்று விளக்கினார். ஜனநாயகம் என்பது ‘ஒரு அரசாங்க வடிவம்’ அல்லது ‘ஒரு சமூகத்தை இயக்கும் அரசியல் இயந்திரம்’, அல்லது ‘ஒரு சமூக அமைப்பு’ என்று வெறுமனே புரிந்து கொள்ளப்படுவதில் அவர் திருப்தியடையவில்லை என்பதை அவரது எழுத்துகளில் நாம் காண்கிறோம்.
‘ஜனநாயகம் என்பது ஒரு மனோபாவம். அது ஒரு வாழ்க்கைத் தத்துவம்’ ‘ஜனநாயகம் என்பது முதன்மையாக முழுமையான ஒரு கூட்டு வாழ்க்கை முறை’ போன்ற அவரின் சிந்தனைகளே அம்பேத்கரை ஒரு ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான அறிவாளியாக சமூகத்தின் முன் காட்டுகிறது. ஜனநாயகத்தின் நெறிமுறை சார்ந்த கருத்தாக்கங்களின் மேலோட்டமான புரிதலுக்கு அப்பால் உணர்ந்து அறியும் விளக்கும் திறன் அவரிடம் இருந்தது.
ஜனநாயகத்தின் பண்புகள்
அம்பேத்கரின் ஜனநாயகம் குறித்த கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கான மிகவும் பயனுள்ள அணுகுமுறை, அவர் முன்மொழிந்த ஜனநாயகத்தின் முக்கியப் பண்புகளை அடையாளம் காண்பதாகும். இது அம்பேத்கரால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ஜனநாயகத்தின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.
1. ஜனநாயகம் குடியரசாக இருக்க வேண்டும்,.
2. ஜனநாயகம் எப்போதும் பிரதிநிதித்துவமாக இருக்கும். அதாவது, மக்களின் குரலை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் இருக்க வேண்டும். அதற்கு தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
3. ஒரு ஜனநாயகத்தில் எப்போதும் ஒரு சபை இருக்கும். அது பொதுவாக நாடாளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது. அங்கு அனைத்துப் பிரதிநிதிகளும் ஒன்றாக அமர்ந்து சமூகத்தின் எதிர்காலம் குறித்து விவாதிப்பார்கள். கொள்கைகளும் சட்டங்களும் தலைவர்களால் உருவாக்கப்படும். நாடாளுமன்றத்தின் தலைவர் தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
4. இந்தப் பிரதிநிதிகள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வழக்கமான, சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய பண்பாகும்.
5. வாக்களிக்கும் உரிமை அல்லது வாக்குரிமை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் வாதிட்டார். வயது வந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வாக்குரிமை இருக்க வேண்டும்.
6. பன்மைத்துவம் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். ‘எந்தவொரு குறிப்பிட்ட பிரச்சனையின் தீர்வு குறித்தும் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதில்தான் ஜனநாயகத்தின் பாதுகாப்பு உள்ளது என்று அம்பேத்கர் அழுத்தமாகக் கூறினார்,
7. ‘நாடாளுமன்றத்தில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு கேள்விக்கு இரண்டு பக்கங்கள் இருந்தால், மக்கள் மறுபக்கத்தையும் அறிந்திருக்க வேண்டும். சுதந்திரமான அரசியல் வாழ்க்கைக்கு எதிர்க்கட்சியே திறவுகோல். அது இல்லாமல் எந்த ஜனநாயகமும் இயங்க முடியாது’. ஜனநாயகத்தின் செயல்பாட்டிலும், சாமானிய மக்களின் நலனிலும் எதிர்க்கட்சிக்கு ஆக்கப்பூர்வமான பங்கு உண்டு என்பதை அவர் கண்டறிந்தார்.
8. ‘மதத்தில் பக்தி என்பது ஆன்மாவின் முக்திக்கு ஒரு வழியாக இருக்கலாம். ஆனால் அரசியலில், பக்தி அல்லது நாயக வழிபாடு என்பது சீரழிவிற்கும், இறுதியில் சர்வாதிகாரத்திற்கும் வழிவகுக்கும் பாதையாகும் என அம்பேத்கர் எச்சரித்தார்.
9. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்’ குறித்து அண்ணல் அம்பேத்கரிடம் ஒரு விரிவான கண்ணோட்டம் இருந்தது. ஆகவே அம்பேத்கரைப் பொறுத்தவரை, சுதந்திரத்தை விட சமத்துவம் முக்கியமானது.அவரைப் பொறுத்தவரை, ஜனநாயகத்தின் சின்னம் சகோதரத்துவமாக இருந்தது. எனவே, அம்பேத்கர் சுதந்திரத்தை விட சமத்துவத்திற்கும், சமத்துவத்தை விட சகோதரத்துவத்திற்கும் முன்னுரிமை அளித்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அம்பேத்கர் வழங்கிய மிகப்பெரிய கொடைகளில் ஒன்றாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் பின்னணியில் உள்ள சாராம்சத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் உணர்ந்தார், உணர்த்தினார். ஆகவே அதை அவர் ‘அரசியலமைப்பு அறநெறி’ என்று அழைத்தார். ‘நம்மிடம் ஒரு அரசியலமைப்புச் சட்டம் உள்ளது, அதில் சட்ட விதிகள் உள்ளன, அந்த விதிகள் எலும்புக்கூடு மட்டுமே. அந்த எலும்புக்கூட்டின் சதையை நாம் அரசியலமைப்பு அறநெறி என்று அழைப்பதில்தான் அர்த்தம் காண முடியும்.’
அரசியல் ஜனநாயகதின் நுணுக்கங்களை மிக விரிவாக விவாதிப்பதன் ஊடாக விரிவாக விலக்கினார் உதாரணமாக, அரசின் மூன்று முக்கிய அங்கங்களிடையே அதிகாரப் பகிர்வு குறித்தும் விரிவாக விளக்கினார்: நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மக்களின் குரலை வெளிப்படுத்த சட்டம் இயற்றும் அவை உள்ளது. அதற்கு கீழ்ப்பட்டதும், கட்டுப்பட்டதுமான நிர்வாகம் உள்ளது. இவை இரண்டிற்கும் மேலாக, இவ்விரண்டையும் கட்டுப்படுத்தி, அவற்றை நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் வைத்திருக்க நீதித்துறை உள்ளது .
ஒரு நல்ல அரசாங்கம் என்பது நல்ல சட்டங்களையும் நல்ல நிர்வாகத்தையும் குறிக்கும். ஆகவே சட்டத்தின் முன் சமத்துவம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் சட்டங்கள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அவற்றைச் செயல்படுத்தும் விதம், அந்தச் சட்டங்களைச் செயல்படுத்தும் நிர்வாகத்தையே சார்ந்துள்ளது என்ற உண்மையை அம்பேத்கர் உணர்ந்திருந்து மக்களுக்கும் உணர்த்தினார்.
அரசியல் அதிகாரத்தின் அடித்தளத்தின் மீதே சமூக மற்றும் பொருளாதார அதிகாரங்கள் உள்ளன என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். ஆகவே சமூக ஜனநாயகம் மற்றும் பொருளாதார ஜனநாயகம் என இருவகையான ஜனநாயக கூறுகளை முதன்மைப் படுத்தி முன்மொழிந்தார். இந்த இரு வகையான ஜனநாயகமும் சமூகத்தில் நிலைத்திருக்க வேண்டும் என விரும்பினார்…
அரசியல் ஜனநாயகத்திற்கு மேலாக, சமூக மற்றும் பொருளாதார ஜனநாயகங்களுக்காகப் பாடுபடுமாறு நாட்டு மக்களைக் அறிவுருத்துவதோடு. சமூக மற்றும் பொருளாதார ஜனநாயகங்கள் ஒரு அரசியல் ஜனநாயகத்தின் திசுவும் இழையும் ஆகும். திசுவும் இழையும் எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு உடலின் வலிமையும் அதிகமாக இருக்கும்’ என்றார்.
