பிரிட்டிஷ் ஆட்சியில் சிறுபான்மையினர் உரிமைகள்
அண்ணல் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் சிறுபான்மையினர் உரிமைகளுக்காகப் போராடினார். இந்தியாவில் ஜனநாயகம் பெரும்பான்மைவாதத்தின் வலையில் வீழ்ந்துவிடாமல் இருக்க அவர் பாடுபட்டார் (தோரத், 2019).
பிரிட்டனில் பெரும்பான்மை என்பது ‘அரசியல்’ சார்ந்தது என்றும், இந்தியாவில் பெரும்பான்மை ‘மதரீதியானது’ என்றும் வாதிட்டு, பிரிட்டிஷ் பிரதிநிதித்துவ முறை இந்தியாவிற்குப் பொருத்தமற்றது என்று விவாதித்தார். இந்தியாவில், பெரும்பான்மை என்பது அரசியல் பெரும்பான்மை அல்ல. இந்தியாவில் பெரும்பான்மை மத ரீதியாக பிறப்பால் உருவாவது. இதுவே மதரீதியான பெரும்பான்மைக்கும் அரசியல் பெரும்பான்மைக்கும் உள்ள வேறுபாடு.
அரசியல் பெரும்பான்மை ஒரு நிலையான அல்லது நிரந்தரமான பெரும்பான்மை அல்ல. அது எப்போதும் உருவாக்கப்பட்டு, கலைக்கப்பட்டு, மீண்டும் உருவாக்கப்படும் ஒரு பெரும்பான்மையாகும். ஒரு மதப் பெரும்பான்மை என்பது அதன் நிலைப்பாட்டில் மாறாத ஒரு நிரந்தரப் பெரும்பான்மையாகும். அதை மாற்ற முடியாது (அம்பேத்கர், 1945). இது வாக்களிக்கும் நடத்தையிலேயே இன்றும் பிரதிபலிக்கிறது. வாக்காளர்கள் தங்கள் நலன்களை எடுத்துரைப்பவர்களை விட, தங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வாக்களிக்கின்றனர். காலப்போக்கில், இது ஜனநாயகத்தின் பெயரில் நிரந்தரப் பெரும்பான்மையினர் ஆட்சி செய்வதற்கு வழிவகுக்கும்
இந்து பெரும்பான்மை
மதவாத பெரும்பான்மைக்கும் அரசியல் பெரும்பான்மைக்கும் இடையிலான இருமை, பாராளுமன்ற ஜனநாயகத்தின் நிர்வாக மற்றும் செயல் நிர்வாகப் துறைகளிலும் பிரதிபலிக்கிறது. இந்த மதவாத பெரும்பான்மையின் விலையை இந்துக்கள் அல்லாதவர்கலும் சுமக்க ஏற்க வேண்டியுள்ளது என்று டாக்டர் அம்பேத்கர் வருந்துகிறார். சமூக ரீதியான பெரும்பான்மைக்கும் அரசியல் ரீதியான பெரும்பான்மைக்கும் இடையிலான முரண்பாடு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிர்வாக மற்றும் செயலாக்கப் பிரிவுகளில் எதிரொலிக்கிறது. இந்தச் சமூகப் பெரும்பான்மையின் விளைவுகளை இந்துக்கள் அல்லாதவர்கள் சுமக்க வேண்டியுள்ளது என்று டாக்டர் அம்பேத்கர் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். இந்த பாகுபாடு அரசியல் தளத்தை விட சமூகத் தளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவின் நிர்வாகம் முழுமையாக இந்துக்களின் கைகளிலேயே உள்ளது. காவல்துறை, நீதித்துறை, வருவாய்த்துறை என நிர்வாகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் அவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். நிர்வாகத்திற்கு வெளியே உள்ள இந்துக்களுக்கு ‘தீண்டத்தகாதவர்கள்’ மீது எத்தகைய மனப்பான்மை உள்ளதோ, அதே மனப்பான்மைதான் நிர்வாகத்தில் உள்ள இந்துக்களிடமும் உள்ளது (அம்பேத்கர், 1947).
இதன் காரணமாகவே, அடையாளம் காணப்பட்ட பாகுபாட்டின் வரையறைகளின் அடிப்படையில் நிரந்தரமான இடஒதுக்கீடு வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். சட்டங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி, இவை இரண்டும் நடைமுறைப்படுத்தப்படும்போது, அவற்றைச் செயல்படுத்தும் நபரின் மனோநிலையை சார்ந்தே அதன் வெளிபாடு அமைகின்றன என்று வாதிடுகிறார். நாம் மோசமான சட்டங்களால் அல்ல, மோசமான நிர்வாகத்தாலேயே பாதிக்கப்படுகிறோம். நிர்வாகம் மோசமாக இருப்பதற்குக் காரணம் ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் சாதி மனோநிலை கொண்டவர்களின் கைகளில் இருப்பதே ஆகும். அவர்கள் தங்கள் சமூகப் பாரபட்சங்களை நிர்வாகத்திலும் கொண்டு வருகிறார்கள் (அம்பேத்கர், 1942)
பெரும்பாலான அரசியல் சிந்தனையாளர்கள் அறம் மற்றும் ஒழுக்கம் பற்றிப் பேசும்போதும் ஒரு மனிதர் எவ்வளவுதான் நடுநிலையானவர் என்று கூறினாலும், அவரது மதம் மற்றும் சாதி அடையாளத்தின் மீதான அவரது பற்று உறுதி அவரவர் இயல்பிலேயே ஊறியிருப்பதை வெளிப்படுவதை காணலாம் என்கிறார்.
சிறுபான்மையினருக்கான பாதுகாப்புகள்
இந்தியாவில் பெரும்பான்மைவாதத்தின் பண்பு ரீதியான தன்மையைப் பற்றி வெறும் கோட்பாட்டு ரீதியாகப் பேசுவதோடு அவர் நின்றுவிடவில்லை. அவர் அதையும் தாண்டி, ஒரு ஜனநாயகத்தில் பெரும்பான்மைவாதத்தின் ஆதிக்கத்தை தடுப்பதற்காகப் பல்வேறு வழிமுறைகள பரிந்துரைக்கிறார்
“ஜனநாயகம் என்ற பெயரில், சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மை இருக்கக்கூடாது. பெரும்பான்மையினர் அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருந்தாலும், சிறுபான்மையினர் எப்போதும் பாதுகாப்பாக உணர வேண்டும்”
ஆகவே, வகுப்புவாதப் பெரும்பான்மையினருக்கு எதிராகப் பாகுபாட்டிற்கு உள்ளான சமூகங்களின் நலன்களைப் பாதுகாக்கும் விதத்தில் அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என மிக உறுதியாக வாதிடுகிறார்.
உதாரணமாக, சிறுபான்மையினருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவது, அவர்களின் அடையாளங்களைப் பற்றி மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பாகுபாட்டை அதிகரிக்குமா என்பது குறித்து ஒரு பெரிய அளவிலான குழப்பம் நிலவுகிறது. அண்ணல் அம்பேத்கரைப் பொறுத்தவரை, “சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டக்கூடாது என்பதை உணர்வது பெரும்பான்மையினரின் கடமையாகும்.”
சிறுபான்மையினரை பாகுபடுத்தி நடத்தக்கூடாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது பெரும்பான்மையினரின் பொறுப்பாகும். சிறுபான்மையினர் தொடர்ந்து தனித்து நிலைத்திருப்பார்களா அல்லது மய்ய நீரோட்டத்தில் கரைந்து போவார்களா என்பது பெரும்பான்மையினரின் நடத்தையையே சார்ந்திருக்கிறது. சிறுபான்மையினரை பாகுபடுத்தி நடத்தும் பழக்கத்தை பெரும்பான்மையினர் கைவிடும் தருணத்தில், சிறுபான்மையினர் தனித்து இயங்குவதற்கான எந்தவொரு அடிப்படைக் காரணமும் இல்லாமல் போய்விடும் (அம்பேத்கர், 1948).
பெரும்பான்மையினர் நிரந்தரமானவர்களாகவும் அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டவர்களாகவும் இருப்பதால் சிறுபான்மையினருக்கான, பாதுகாப்புகளும் நிரந்தரமானவையாகவும் அதே அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருக்க வேண்டும்.
சிறுபான்மையினரை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மத-இன ரீதியான பெரும்பான்மையினரின் கையில் நிர்வாக அதிகாரம் ஒரு கைப்பாவையாகச் சிதைந்து போவதைத் தடுக்க, ஜனநாயகம் ‘பெரும்பான்மைவாதத்தின்’ பிடியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்கும் வகையிலான சில நடவடிக்கைகளை அண்ணல் அம்பேத்கர் வழியுறுத்துவதோடு கீழ் காணும் ஆலோசனைகளை முன்மொழிகிறார் (அம்பேத்கர், 1945)
- ஒரு பெரும்பான்மைச் சமூகத்திற்குப் பிரதிநிதித்துவத்தில் ‘சார்புப் பெரும்பான்மை’ வழங்கப்படலாம்; ஆனால், அது ஒருபோதும் ‘முழுமையான பெரும்பான்மையை’ கோர முடியாது.
2. சட்டமன்றத்தில் பெரும்பான்மைச் சமூகத்திற்கு வழங்கப்படும் சார்புப் பெரும்பான்மையானது, மிகச் சிறிய சிறுபான்மையினரின் உதவியுடன் கூடத் தங்கள் ஆட்சியை நிலைநாட்டக்கூடிய அளவுக்குப் பெரியதாக இருக்கக்கூடாது.
3. இடங்களின் பகிர்வு எவ்வாறு இருக்கவேண்டுமென்றால், பெரும்பான்மைச் சமூகமும் ஒரு முக்கிய சிறுபான்மைச் சமூகமும் இணைந்தாலும், அந்த இணைப்பானது சிறுபான்மையினரின் நலன்களைப் புறக்கணிக்கும் வகையிலான பெரும்பான்மை பலத்தை அவர்களுக்கு அளித்துவிடக்கூடாது.
4. இடப் பகிர்வு எவ்வாறு இருக்கவேண்டுமென்றால், அனைத்துச் சிறுபான்மையினரும் ஒன்றிணைந்தால், அவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தைச் சார்ந்திருக்காமலேயே தங்கள் சொந்த அரசாங்கத்தை அமைக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
5. பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து பெறப்படும் கூடுதல் பிரதிநிதித்துவ வாய்ப்புகள், சிறுபான்மையினரிடையே அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளுக்கு ‘நேர்மாறான விகிதத்தில்’ பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதாவது, எண்ணிக்கையில் அதிகமாகவும் சிறந்த சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலையைக் கொண்டதாகவும் உள்ள ஒரு சிறுபான்மைப் பிரிவுக்குக் கிடைக்கும் கூடுதல் வாய்ப்புகள், எண்ணிக்கையில் குறைவாகவும் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் பின்தங்கியும் உள்ள ஒரு சிறுபான்மைப் பிரிவுக்குக் கிடைப்பதை விடக் குறைவாகவே இருக்க வேண்டும்.
மத சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள்
அண்ணல் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் மத சிறுபான்மையினர் பிரச்சினையின் மீது ஆழ்ந்த அக்கறை காட்டினார். அவர் எப்போதும் தன்னையும் தனது சமூகத்தையும் (தலித்துகள்) முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களுடன் தொடர்புபடுத்தியும் இணைத்தும் பணியாற்றியுள்ளார். இஸ்லாம் போதித்து முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்பட்ட சமூக விழுமியங்களால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தார் (டெல்டும்டே, 2003).
தீண்டாமையின் அடிப்படையில் இந்துக்கள் முற்றிலும் பிளவுபட்டுள்ளதையும் (அம்பேத்கர், 1919). சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கான விதிகளை வகுத்ததோடு தனது ‘அரசுகளும் சிறுபான்மையினரும்’ (1947) என்ற நூலில், தலித்துகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து கோரியதையும் நாம் காண்கிறோம். ஆகவே சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டுத் திட்டங்களை அவர் முன்மொழிந்தார். அந்த முன்மொழிவு மதவாததிற்கு எதிரான பாதுகாப்பாகவும், சமூக மற்றும் அரசு நிர்வாக ரீதியிலான நிறுவனமயப்பட்ட மேலாதிக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாகவும், சமூகப் புறக்கணிப்புக்கு மற்றும் பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பிணையும் நோக்கமாக கொண்டிருப்பதோடு மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மையினருக்குப் பயனளிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து பணத்தைச் செலவிடுவதற்கான அதிகார வரம்புகள் மற்றும் அரச நிர்வாக கடமைகளை உள்ளடக்கியவை ஆகும் (அம்பேத்கர், 1947).
அம்பேத்கரைப் பொறுத்தவரை, இந்து மதவாதம் என்பது கலாச்சாரங்களுக்கு இடையேயான பொருந்தாமை மட்டும் அல்ல, மாறாக இந்துக்களுக்கும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் இடையேயான அதிகாரச் சமச்சீரின்மையாகும்:
மதவாதப் பிரச்சினை மூன்று கேள்விகளை எழுப்புகிறது:
(அ) சட்டம் இயற்றும் அவைகளில் (நாடாளுமன்றம், சட்டமன்றம்) பிரதிநிதித்துவம் குறித்த கேள்வி;
(ஆ) நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் குறித்த கேள்வி
(இ) சேவைகளில் பிரதிநிதித்துவம் குறித்த கேள்வி (அம்பேத்கர், 1945).
மதச் சிறுபான்மையினருக்குப் பெயரளவிலான பிரதிநிதித்துவம் அல்ல, உண்மையான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று அவர் விரும்பினார் (அம்பேத்கர், 1945). குறிப்பாக ஆங்கிலேயரின் பாராளுமன்றத்தில் மதச் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தையும், அதனுடன் முக்கியமான சட்டப் பாதுகாப்புகளையும் பெறும் வகையில் செயல்பட்டதோடு அதே உரிமைகளை காலனித்துவ இந்தியாவில் தலித் சமூகமும் பெறவேண்டும் என்பதற்காக அண்ணல் அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதும் வினையாற்றினார் (அம்பேத்கர், 1947).
சிறுபான்மையினராக தலித்துகள்
தலித்துகள் ஒடுக்கக்கப்பட்டவர்களாகவும், பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால், சிறுபான்மையினருக்கான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அவர்களால் பெற முடியும் என்பதால் தலித்துகள் சிறுபான்மையினர் என்ற தகுதியைக் கோருவதே சிறந்தது என அம்பேத்கர் கூறினார். சிறுபான்மையினராக தலித்துகளை இந்துக்களிடமிருந்து தனித்த ஒரு கூறாக அங்கீகரிக்கத் தவறினால், அது அவர்களை ஒடுக்குவதற்கும் மேலும் வழிவகுக்கும் (அம்பேத்கர், 1942).
மேலும் தலித்துகளின் கல்விக்காக ஒவ்வொரு மாகாணத்தின் வரவு செலவுத் திட்டத்திலும் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதற்கு அரசியலமைப்பில் ஒரு விதியை உருவாக்க வேண்டும். அத்தகைய தொகையை ஆரம்பக் கல்விக்கு மட்டுமல்லாமல், உயர் கல்விக்கும் நீங்கள் கோர வேண்டும் (அம்பேத்கர், 1942).
தலித்துகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கான காரணங்கள்
அண்ணல். அம்பேத்கர் தலித்துகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து கோரியபோது பெரும் பதற்றம் நிலவியது. சிறுபான்மையினராக அறிவிக்கப்படுவதற்கான மிக முக்கியமான தகுதிகளை தலித்துகள் பெற்றிருப்பதாக அம்பேத்கர் வாதிட்டார்:
இந்து சமூகத்தில் சாதியவாத பெரும்பான்மையினரால் இழைக்கப்படும் பாகுபாடு மற்றும் இந்துக்களுடன் மத அடையாளத்தைப் பகிர்ந்து கொள்ளாதிருத்தல். தலித்துகளை தனித்த சமூகமாகமாக அடையாளப்படுத்துவதோடு தலித்துகள் இந்துக்கள் அல்ல அவர்கள் தேச முழுக்க வியாபித்திருக்கும் தனித்த தேசிய இனம் என்று வாதிடுவதை நாம் காண்கிறோம். உண்மையில், தலித்துகள் இந்துக்கள் என்று கூறுவது ஒரு சதி என்றும், தேர்தல் அரசியலில் இந்துக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சதி என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த பட்டியல் சாதிகள் சில தனித்தன்மைகள், மரபுகள், உரிமைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் தனித்துவமாக கொண்டிருகின்றன. அவை அவர்களை இந்துக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. பட்டியல் சாதியினரின் இந்தத் தனித்தன்மைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி, நியமனங்கள் மற்றும் அரசுகள் தன் குடிமக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து நன்மைகளிலும் தங்களுக்குரிய இடத்தைப் பெற வேண்டும் என்று கோருவதற்கான உரிமையைக் கொண்டிருக்குகின்றனர் (அம்பேத்கர், 1944) என்று வாதிட தொடங்கிய போது தலித்துகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து கோரிய இந்த கோரிக்கை கடுமையான சர்ச்சையைத் தூண்டியது.
ராஜா சேகர் உண்ட்ரு (2017) எழுதிய புத்தகத்தில் இது குறித்து தெளிவான விளக்கத்தைக் காணலாம். இருப்பினும், இந்த விசயத்தில் பின்வரும் மேற்கோள் போதுமானது:
திரு. காந்திக்கும் எனக்கும் இடையே ஒரு போட்டி இருந்தது. தீண்டத்தகாதவர்கள் இந்துக்களின் ஒரு உட்பிரிவு என்றும், அதன் விளைவாக, ஆங்கிலேயர்களின் கைகளிலிருந்து ஏதேனும் அரசியல் அதிகாரம் கைமாற வேண்டுமானால், அது பிரிக்கப்படாமல் இந்துக்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் திரு. காந்தி வாதிட்டார். நான் எடுத்த நிலைப்பாடு முற்றிலும் வேறுபட்டது. தலித்துகள் நாட்டின் வாழ்வில் ஒரு தனித்துவமான மற்றும் வேறுபட்ட கூறாக உள்ளனர் என்று நான் வாதிட்டேன். காரணம் இந்துக்களை நம்ப முடியவில்லை. எனவே, தீண்டத்தகாதவர்கள் தங்கள் நலனை மேம்படுத்திக்கொள்ள அல்லது இந்துக்களின் கொடுங்கோன்மை மற்றும் அடக்குமுறைக்கு எதிராகத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அரசியல் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் பெறுவது முற்றிலும் அவசியமாக இருக்கிறது.
இந்த வாதத்தின் பெரும் சிறப்பு என்னவென்றால், இதன் வாயிலாக தீண்டத்தகாதவர்கள் இந்தியாவின் தேசிய வாழ்வில் அங்கீகரிக்கப்பட்டு, தனி அரசியல் உரிமைகளைக் கோரத் தகுதி பெற்றனர் (அம்பேத்கர், 1942).
துரை அப்பாஸ்
